சாப்பிட வேண்டிய வழிமுறைகள்
மன அழுத்தம், ஏமாற்றம் போன்ற எதிர்மறை உணர்வுகளால் மனம் பாதிக்கப்பட்ட சமயத்தில், வேறு செயல்களில் மனதைச் செலுத்தி மடைமாற்றம் செய்ய உடல் முற்படுகிறது. இதற்குச் சுலபமான வழி என்னவெனில் கவனத்தைத் திருப்புவதுதான்! இவ்வாறு உண்பதால் சர்க்கரை அளவு கூடும். கொழுப்புச்சத்து கூடும். இதுவே தொடர்ந்தால் நீரிழிவு, இதயநோய் ஆகியவை வரலாம். உணவுகள் அப்போதைக்கு பாதித்த மனதுக்கு மறதியைத் தரும் அவ்வளவே! ‘மூட்’ மாறும்! பின்னர், உளவியல் பிரச்சினைகள் மேலும் அதிகமாகும் என்பதே உண்மை! இத்தகைய சந்தர்ப்பங்களில், மன உளைச்சலுக்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிந்து, அதைச் சரி செய்ய முயல்வதே நல்லது! யோகா, கவுன்சிலிங் போன்றவையும் உதவும்.
இதில் இன்னொரு வகை – நோயாளிகள்! நீரழிவு நோய், ரத்த அழுத்தம், தைராய்டு போன்ற நோய் உள்ளவர்கள், குறிப்பிட்ட நேரத்தில் மருந்து உட்கொள்ள வேண்டும் என்பதற்காக, அந்தந்த வேளையில் சாப்பிடச் சொல்லி நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள். பசி இருக்கிறதா என்று கவனிப்பது இல்லை. பசியில்லாமல் சாப்பிடுவதால் ஆமம் (கழிவு) உண்டாகிறது. ஏற்கனவே இருக்கும் நோய்களை இன்னும் சிக்கலாக்குகிறது. எனவே உண்பது என்பது, எந்தவிதக் கட்டாயமும் இல்லாமல் இயல்பான நிகழ்வாக இருக்க வேண்டும். பசியிருக்கும் போது மட்டுமே சாப்பிட வேண்டும் பசித்திரு! தனித்திரு!! விழித்திரு!!! என்பார் வள்ளலார்.
டயட்டிங்:
உடல் இளைக்க வேண்டும், பார்க்க உடல் கட்டமைப்புடன் இருக்க வேண்டும் என்று இன்று எல்லோரும் நினைக்கிறார்கள். அதற்குச் சரியான வழிமுறைகளைக் கடைப்பிடிப்பவர் மிகச்சிலரே! “ஆரோக்கியமான டயட்” என்று ஒரு டயட்டை முடிவு செய்து அதன்படி உண்ணத் தொடங்குகிறார்கள். தொடங்கும் முன் டயட்டின் நோக்கம் என்ன என்று பார்க்க வேண்டும்.
அது நமது பிரகிருதிக்குப் பொருத்தமானதா என்று கண்டறிய வேண்டும். பக்கவிளைவுகள் ஏதுமில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். எடைகுறைய வேண்டும் என்ற ஆர்வமும், அவசரமும், தீவிரநோய்களுக்கு வித்திடுகின்றன. முக்கிய சத்துக்களை இழக்கும் அபாயமும் நேர்கிறது. மேலும் மனதுக்குத் திருப்தியும், உடலுக்குச் சக்தியும் தராத எந்த முறையும் நீண்ட நாட்கள் பின்பற்றப்படமாட்டாது.
பசிக்கும்போது மட்டும் உண்ணுதல்:
பெரும்பாலான நேரங்களில் அந்த நேரத்தில் சாப்பிட்டு பழகிய பழக்கம் காரணமாகவும், உணவு இடைவேளை வந்துவிட்டது சாப்பிட்டுத்தீர வேண்டும் என்ற கட்டாயத்திலும், அல்லது மிகுந்த வேலைப் பளுவிற்கிடையே கொறிக்க சிறிது நேரம் கிடைத்து விட்டது என்பதற்காகவும் உண்கிறோம். இதுபோன்ற சமயங்களில் பசி இருப்பதில்லை. பெரும்பாலும், முதலில் சாப்பிட்ட உணவு செரிமானம் முடிந்து, வயிறு காலியாக இருக்கும் போது பசிதோன்றும். அப்போதுதான் சாப்பிட வேண்டும். ஆனால் பசி தோன்றும் நேரங்களில் சாப்பிட முடியாமல் போகிறது. அதைச் சரி செய்ய, சாப்பிட நமக்குக் கிடைக்கும் நேரத்தில் பசி வந்து சாப்பிட ஓர் ஏற்பாட்டை நாமே ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
அதாவது மதியம் 1 மணிக்கு உணவு இடைவேளை, அந்த நேரத்தில் மதிய உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால், காலை உணவை அதற்குத் தகுந்தபடி சற்று முந்தி எடுத்துக் கொள்ளலாம். எளிதில் செரிமானம் ஆகி 1 மணிக்கு வயிறு காலியாகும்படியான உணவு களைக் காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம். பசியில்லாதபோது நேரம் கிடைத்தது என்பதற்காகச் சாப்பிட்டால் நோய்வாய்ப்பட நேரும்.
உடலின் தேவைக்கேற்ற அளவில் உணவு:
நமது வயிற்றை மூன்று பாகமாக கொள்ள வேண்டும். முதல் பாகத்தில் திட உணவும், இரண்டாம்பாகத்தில் திரவ உணவும், மூன்றாம் பாகம் காலியாகவும் இருக்க வேண்டும். செரிமானம் நடைபெறும்போது உணவின் அசைவுகளுக்குக் காலியிடம் தேவைப்படுகிறது. ஒவ்வொரு உணவுக்குமிடையே 4-6 மணி நேர இடைவெளி தேவைப்படும். இன்னும் சிறிது உண்ணலாம் என்றிருக்கும்போதே உண்பதை நிறுத்திவிட வேண்டும்.
‘முதல் ஏப்பம்’ உணவு போதும் என்பதற் கான அடையாளம்! அதிகம் உண்பதால் வெகு சீக்கத்திரத்தில் எல்லா தோஷங்களும் அதிக மாகிவிடும். மாறாக அளவு குறைவாக உண்பதால் உடல்வளர்ச்சி, பலம்பெறுவது தடைபடும், வாதம் தொடர்பான நோய்கள் தோன்றக் காரணமாகிவிடும். ஆகவே சரியான அளவில் உண்பது முக்கியமானது.