புதுமைபடைக்கும் மணப்பெண் அலங்காரம்
அவர்களது விருப்பத்தை நிறைவேற்றும் விதத்தில் மணப்பெண் அலங்காரத்திலும் பல்வேறு புதுமைகள் புகுத்தப்பட்டிருக்கின்றன. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
திருமணத்திற்கு தயாராக இருக்கும் பெண்கள் அனைவருமே, மணப்பெண் அலங்காரத்தை விரும்புகிறார்கள். அவர்களது விருப்பத்தை நிறைவேற்றும் விதத்தில் மணப்பெண் அலங்காரத்திலும் பல்வேறு புதுமைகள் புகுத்தப்பட்டிருக்கின்றன. அந்த புதுமைகளை பெற்று, தங்களை முழுமையாக அழகுப்படுத்த விரும்பும் பெண்கள் கவனிக்கத்தக்க விஷயங்கள் நிறைய இருக்கின்றன.
திருமணத்திற்கு மூன்று மாதங்கள் இருக்கும்போதே பெண், மணப்பெண் அலங்காரத்திற்கு தயாராகிவிட வேண்டும். முகூர்த்தம் நெருங்கும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தால் எதிர்பார்த்த அளவுக்கு அலங்காரம் திருப்திகரமாக அமையாது. முதலில் உங்களுக்கு பிடித்தமான, அனுபவம் வாய்ந்த அழகுக்கலை நிபுணரை தேர்ந்தெடுக்க வேண்டும். அவருக்கு மணப்பெண் அலங்காரத்தில் எத்தனை ஆண்டுகள் அனுபவம் இருக்கிறது? இதுவரை எத்தனை பேருக்கு அலங்காரம் செய்திருக் கிறார்? அவர் மற்றவர்களுக்கு மேக்கப் செய்து எடுத்த போட்டோக்கள் இருக்கிறதா? என்பதை விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் உறவுக்கார பெண்ணுக்கு அலங்காரம் செய்திருந்தால் அவரின் ஆலோசனைகளை பெறுவதோடு, அவரை பயன் படுத்திக்கொள்வதும் நல்லது.
அழகுக்கலை நிபுணர் யார் என்பதை முடிவு செய்வதற்கு முன்னால், அவரை நேராக சென்று பாருங்கள். உங்கள் சருமத்தின் தன்மை என்ன? சருமத்தில் என்னென்ன பிரச்சினைகள் இருக்கிறது? என்பதை அவரிடத்தில் தெளிவு படுத்திவிடுங்கள். அது எந்தமாதிரியான அலங்காரம் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்பதை அவர் புரிந்து கொள்வதற்கு வழிவகை செய்யும்.
நீங்கள் அவ்வப்போது பியூட்டி பார்லர் செல்பவராக இருந்தால் பேஷியல், வேக்சிங், திரெட்டிங், பேஷியல் போன்றவற்றில் முதலிலேயே கவனம் செலுத்துங்கள். திருமணத்திற்கு ஒரு வாரம் இருக்கும்போது அவசரமாக திரெட்டிங், வேக்சிங் செய்தால் ஒருசிலருக்கு ஒத்துக்கொள்ளாது. சருமத்தில் திட்டுத் திட்டாக தோன்றிவிடும். ஒரு சிலருக்கு பிளீச்சிங், பேஷியல் செய்தால் அலர்ஜி உருவாகும். இந்த மாதிரியான தொந்தரவுகள் திடீரென்று உருவாகாமல் இருக்க, ஆரம்பத்திலேயே மேக்கப் விஷயத்தில் கவனம் செலுத்தவேண்டும். பேஷியல், கிளீனப் போன்றவற்றை செய்த பிறகு வெயிலில் செல்ல கூடாது. சோப், சிலவகை கிரீம்களை உபயோகிக்கவும் கூடாது. இதை எல்லாம் அழகுக்கலை நிபுணரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அதை மீறி உபயோகித்தால் அலர்ஜி ஏற்பட்டுவிடும்.
நீங்கள் எந்த மாதிரியான அலங்காரத்தை எதிர்பார்க்கிறீர்கள்? எந்த வகையான மேக்கப் உங்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் என்பதை எல்லாம் தெளிவாக, நீங்கள் தேர்ந்தெடுக்கும் அழகுக்கலை நிபுணரிடம் தெரிவித்துவிடுங்கள். சங்கீத், முகூர்த்தம், வரவேற்பு ஆகிய ஒவ்வொன்றுக்கும் அலங்காரம் எந்தமாதிரி அமையவேண்டும் என்பதையும்- நகை, உடை எந்த மாதிரி அணியப்போகிறீர்கள் என்பதையும் அழகுக்கலை நிபுணரிடம் முதலிலேயே சொல்லிவிடுங்கள். திருமணத்திற்கு ஆடை எடுக்க போவதற்கு முன்பும், எடுத்த உடையை தைக்க கொடுப்பதற்கு முன்பும் அழகுக்கலை நிபுணரிடம் ஆலோசனை கேட்க வேண்டும். எந்த நிறத்தில் ஆடை தேர்வு செய்வது உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்பது பற்றியும், உடல் அமைப்புக்கு ஏற்ப ஆடையை தைப்பது பற்றியும், எந்தமாதிரி ஆபரணம் உடலுக்கு கூடுதல் அழகு தரும் என்பது குறித்தும் அவர் உங்களுக்கு ஆலோசனை தருவார்.
மணப் பெண்ணின் சரும அழகை மேம்படுத்த நிறைய வழிகள் இருக்கின்றன. கருப்பு புள்ளிகளோ, சுருக்கங்களோ, கருவளையங்களோ இருந்தால் அவைகளை சரி செய்ய வாய்ப்பு இருக்கிறது. புருவங்கள், கண்கள் அருகில் ஏற்படும் சுருக்கங்களையும் சரிப்படுத்திவிட முடியும். மூக்கின் ஓரங்களில் அழகை கூட்டவும் முடியும். உதடுகளில் கருமை தென்பட்டால் அதனை நீக்கவும் முடியும்.
உங்கள் சருமத்தில் என்ன குறைபாடு இருக்கிறது என்பதை கவனித்து அதற்கேற்ப அழகுக் கலை நிபுணர் அலங்காரம் செய்வார். அதனால் உங்கள் எண்ணங்கள், எதிர்பார்ப்புகள் அனைத்தையும் முதலிலேயே அவரிடம் கூறிவிடுங்கள். அழகை மேம்படுத்த மருத்துவம் சார்ந்த ஆலோசனைகள், சிகிச்சைகள் தேவைப்பட்டால் காலம் தாழ்த்தாமல் திருமணத்திற்கு நான்கைந்து மாதங்களுக்கு முன்பாகவே அதற்கு தயாராகிவிடுங்கள். குறைந்தபட்சம் மூன்று, நான்கு முறையாவது டாக்டரிடம் சிகிச்சைக்கு செல்ல வேண்டியிருக்கும். திருமணம் நெருங்கும் வேளையில் அவசர அவசரமாக சிகிச்சை மேற்கொள்வது சிரமத்தையும், சிக்கலையும் உருவாக்கிவிடும்.
முகத்தில் முளைக்கும் தேவையற்ற முடிகளை நீக்க ‘லேசர் ஹேர் ரிமூவிங்’ செய்வதற்கு நிறைய பெண்கள் விரும்புகிறார்கள். திருமணம் முடிந்த சில நாட்களிலேயே வேக்சிங், திரெட்டிங் செய்வதை தவிர்ப்பதற்கு இந்த வழியை நாடுகிறார்கள். இது குறித்து திருமணத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன்பாகவே முடிவெடுத்து செயல்படுத்துங்கள். விரைந்து அழகை மேம்படுத்துவதற்கு ‘ஸ்டீராய்டு கிரீம்’ பயன்படுத்தவும் நிறைய பேர் ஆர்வம் காட்டுகிறார்கள். அது ஆபத்தானது. சருமத்திற்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்.
உடல் முழுவதும் சருமத்தை பளபளப்பாக மிளிர வைக்க பாடி வேக்சிங், முழு உடல் பாலிஷிங், ஹேர் ஸ்பா, ஹேர் கலரிங், ஸ்ட்ரெயிட்டனிங், சுமூத்திங், ஹைட்ரா பேஷியல் போன்றவை இருக்கின்றன. இவைகளை செய்ய விரும்பும் பெண்கள் திருமணத்திற்கு மூன்று, நான்கு மாதங்களுக்கு முன்பே தங்களை தயார்படுத்திவிட வேண்டும். கூந்தல் முடியை கலரிங் செய்வதாக இருந்தால் மூன்று மாதங்களுக்கு முன்பாகவே தற்காலிகமாக பரிசோதித்து பார்த்துவிட வேண்டும். அது பார்க்க அழகாக இருந்தால் மட்டுமே நிரந்தரமாக பின்பற்ற வேண்டும்.
பெண்களை கவரும் விதத்தில் புதிதாக அறிமுகமாகி இருக்கிறது ‘ஏர் பிரஷ் மேக்கப்’. அதிவேகமாக சருமத்தில் ஸ்பிரே செய்யும் முறை இது. சருமத்தில் லேசான கோட்டிங் செய்வதுதான் இந்த மேக்கப். இது ‘வாட்டர் ரூப்’ என்பதால் மழை, வியர்வைக்கு அழிந்து போகாது. இதனை செய்வதாக இருந்தால் அழகுக்கலை நிபுணருடன் ஆலோசனை பெற வேண்டும்.
மணப்பெண் முகூர்த்தத்திற்கு உடுத்தும் புடவையின் பார்டர் என்ன நிறமோ அந்த கலரில் விரல், நகங்களை அலங்கரிப்பது இப்போது பேஷனாகியிருக்கிறது. மண மேடை எந்த மாதிரியான டிசைன்கள், நிறங்களில் அலங்கரிக்கப்பட்டிருக்கிறதோ அதற்கு ஏற்ப மணமக்களின் உடையும், மேக்கப் அலங்காரமும் அமைந்திருந்தால் பார்க்க அழகாக இருக்கும்.