தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

குழந்தைகளின் உடல் பருமனாக காரணமாக அமையும் பழக்கங்கள்…!

உடல் பருமன் ஆவதற்கு மிக முக்கியமான காரணம் அதிக கலோரி உட்கொள்ளுதல் மற்றும் தொலைக்காட்சி மற்றும் வீடியோ கேம்ஸ் ஆகும். அவை அவர்களை நகர விடாமல், ஒரே இடத்திலேயே முடக்கி விடுகிறது. இதுபோன்ற முடக்கும் விஷயங்களில் மனதை செலுத்தும் குழந்தைகள் எங்கேயும் நகராமல் இருப்பதால் உண்ண, உறங்க என்று பழகிவிடுகின்றனர். எனவே உடலில் எடை அதிகம் கூடி விடுகிறது.

சில குழந்தைகள் அதிகமாக சாப்பிடுவார்கள். அதுமட்டுமின்றி ஸ்டீராய்டு மருந்துகள் உட்கொள்ளும் குழந்தைகளும் அதிகம் சாப்பிடுவார்கள். எடுத்தவுடன் தீவிரமான உணவுக் கட்டுப்பாடு மற்றும் குறைந்த கலோரி உள்ள உணவுகள் உண்பது என்று ஆக்கிவிடக் கூடாது. ஏனெனில் அது குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தி விடும். எனவே படிப்படியாக உடல் எடையை குறைக்க முயற்சிக்க வேண்டும்.

முதலில் உடல் எடைக்கு காரணமான தின்பண்டங்களை கண்டுபிடிக்க வேண்டும். பரவலாக உடல் எடையை அதிகரிக்கக்கூடிய உணவுகளான குளிர்பானங்கள், மில்க்ஷேக் வகைகள் மற்றும் வறுத்த உணவுகளான பிரஞ்சு ப்ரை, அதிகப்படியான வெண்ணெய், பாலாடை மற்றும் ரொட்டி வகைகள், பிஸ்கட், ஐஸ் க்ரீம்கள், சாக்லெட், பிட்சா, பர்கர், பாவ் பாஜி போன்ற பண்டங்கள் ஆகும். இந்த உணவுகளையெல்லாம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை ஏதும் ஊட்டச்சத்து சேர்ப்பதில்லை, மாறாக உடலில் தேவையற்ற கலோரிகளையே சேர்க்கின்றன.

காலை உணவுதான் அன்றைய தினத்திற்கு தேவையான சக்தியில் பெரும் பகுதியை அளிக்கும். ஆகவே காலை உணவை தவிர்த்தல், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை கொடுப்பதையும் தடுத்துவிடும். இந்த நிலை குழந்தைகளின் ஆற்றலை குறைத்து, அவர்களது செயல்பாடுகளை மந்தப்படுத்தி, உடல் பருமனுக்கு வழிவகுத்துவிடும்.

குழந்தைகள் தினமும் காலை உணவு எடுத்து கொள்கின்றனரா என்று கவனிக்க வேண்டும். மேலும் வீட்டில் செய்யும் உணவுகளான இட்லி, தோசை போன்ற உணவுகளே அவர்கள் எடுத்து கொள்ளும் உணவில் அதிகம் இருக்க வேண்டும். அதிக அளவில் சர்க்கரை உள்ள கார்ன் ப்ளாக்ஸ் (Corn Flakes) போன்ற உணவுகள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு மற்றும் மூன்று வேளை ஆரோக்கியமான தின்பண்டங்களான முந்திரி, பாதாம் போன்ற பருப்பு வகைகள், பால் மற்றும் பால் பொருட்கள், சாலட் மற்றும் பழங்கள் போன்றவற்றை அதிகம் கொடுக்க வேண்டும்.

பேக்கரி பொருட்கள் மற்றும் வறுத்த உணவுகள் மூலம் உடலில் உருவாகும் கொழுப்புகளை காட்டிலும், ஆரோக்கியமான தின்பண்டங்கள் மூலம் உருவாகும் கொழுப்புகளே உடலுக்கு நல்லது.

குழந்தைகள் நிறைய தண்ணீர் பருகுவதை ஊக்குவிக்க வேண்டும். அவர்கள் எந்த அளவு தண்ணீர் பருகுகின்றனர் என்பதை அவர்கள் சிறுநீர் கழிக்க எத்தனை முறை டாய்லெட் செல்கிறார்கள் என்பதை கொண்டு கணித்து விடலாம்.

குழந்தைகளுக்கு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளை பற்றி அறிவுறுத்த வேண்டும். அவர்களை பள்ளியில் விளையாட்டு அணிகளில் சேர ஊக்குவிக்க வேண்டும்.

குழந்தைகளின் தொலைக்காட்சி பார்ப்பதை ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக வைத்து கொள்ள வேண்டும். மேலும் இம்மாதிரியான பழக்கங்களுக்கு குறைவான மற்றும் நிலையான நேரத்தை ஒதுக்கி கொள்ளுதல் வேண்டும்.

குழந்தைகள் குண்டாக இருக்கிறார்கள் என்று அடிக்கடி அவர்களிடம் சொல்லி கொண்டே இருக்கக்கூடாது. அது அவர்கள் மனதில் இறுக்கமான சூழ்நிலையை உருவாக்கிவிடும். மாறாக நல்ல உணவுப்பழக்கம், உடற்பயிற்சி ஆகியவற்றை கற்றுக் கொடுக்க வேண்டும்.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker