மாணவர்களின் வெற்றிக்கு வித்திடும் பழக்கங்கள்
மாணவர் பருவத்தில் இருந்தே நல்ல பழக்கவழக்கங்களை பின்பற்றுவது வெற்றிக்கு வித்திடும். வெற்றியைத் தரும் அந்த பழக்கவழக்கங்களின் பட்டியலை பார்க்கலாம்.
வெறும் பள்ளிப்பாடங்கள் மட்டும் வெற்றியைத் தந்துவிடுவதில்லை. நாம் நாள்தோறும் கடைப்பிடிக்கும் பழக்க வழக்கங்களே நமக்கு அடையாளத்தையும், வெற்றியையும் தேடித் தருகின்றன. மாணவர் பருவத்தில் இருந்தே நல்ல பழக்கவழக்கங்களை பின்பற்றுவது வெற்றிக்கு வித்திடும். வெற்றியைத் தரும் அந்த பழக்கவழக்கங்களின் பட்டியல் இதோ…
சுறுசுறுப்பு :
வெற்றியின் அடிப்படையே சுறுசுறுப்பான இயக்கத்தில்தான் உள்ளது. சோம்பேறிகளால் சாதிக்க முடிவதில்லை. சுறுசுறுப்பை வளர்த்துக் கொண்டால் அவர்களால் அடைய முடியாத இலக்கு இல்லை. பலருக்குள்ளும் சோம்பேறித் தனம் எனும் பூதம் ஒளிந்து கொண்டிருக்கும். ஆனால் வெற்றியாளர்களிடம் மட்டுமே சுறுசுறுப்பு ஒட்டிக் கொண்டிருக்கும். ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது கவனிக்காமல் இருப்பது, படிக்கும் நேரத்தில் அரட்டையடித்து பொழுதுபோக்குவது, விளையாடி மகிழ்வது, தேவையற்ற சிந்தனையில், செயல்களில் நேரத்தை வீணடிப்பது எல்லாமே சோம்பேறித்தனமும், அசட்டை எண்ணத்தின் வெளிப்பாடும்தான். கடும் முயற்சி இல்லாமல் சோம்பேறித்தனத்தை ஒழிக்க முடியாது. சோம்பல் ஒழிந்தால் சுறுசுறுப்பு தானே பிறந்துவிடும். வெற்றியும் துளிர்விடத் தொடங்கிவிடும்.
ஒழுங்குபடுத்தல் :
எதற்கும் ஒரு திட்டம் வகுத்து, சீரான ஒழுங்குடன் செயல்படுவது வெற்றி மாணவர்களின் அடையாளம். பாடத்திட்டங்களை சீராக தினமும் படிப்பவர்கள், தேர்வில் உயர் மதிப்பெண் பெறுவதுபோல, எதிலும் திட்டமிட்டு செயல்படுபவர்கள் வெற்றியை எட்டுவது திண்ணம்.
பிரித்து செயல்படுங்கள் :
பல பாடங்கள் படிக்கலாம். ஆனால் ஒரே நேரத்தில் இரண்டு செயல்களை செய்ய முடியாது. எனவே ஒன்றை திறம்பட செய்து முடித்துவிட்டு அடுத்த கட்டத்திற்கு செல்வது முக்கியமாகும். எனவே எத்தனை பாடங்கள், திட்டங்கள் இருந்தாலும் அவற்றை பகுதி, பகுதியாக பிரித்து செயல்படுத்துவது வெற்றியை எளிதாகப் பெற துணை செய்யும்.
நடப்பதை பதிவு செய்யுங்கள் :
வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்துவததை குறிப்பெடுப்பதுபோல, இலக்கை நோக்கிய பயணத்தையும் குறிப்பெடுப்பதும், நடப்பதை பதிவு செய்வதும் முக்கியமாகும். இதுதான் ஏற்ற இறக்கங்களை அறிந்து அடுத்த கட்ட திட்டமிடலுக்கு உதவும்.
ஆராய்ந்து செயல்படுங்கள் :
வெற்றித் திட்டத்தை அவ்வப்போது ஆராயுங்கள். இப்போதைக்கு கல்விதான் இலக்கு என்றால் படிக்கும் இடம், படிக்கும் நேரம், உடன்படிக்கும் மாணவர் குழு ஆகியவற்றை தீர்மானிப்பதும், இந்த செயல்பாடு வெற்றிக்கு உதவுகிறதா? என்பதை ஆராய்வதும் முக்கியமாகும்.
கேள்வி கேளுங்கள் :
கேள்வி ஞானம் எப்போதுமே வெற்றிக்கு அவசியமாகும். பாடங்கள் படிக்கும்போதும், ஒரு திட்டத்தை செயல்படுத்தும்போதும் ஏன், எதற்கு, எப்படி, எங்கே, யார் என பலவிதமான கேள்விகளை கேட்டு தெளிவுபடுத்திக் கொள்வது இலக்கை அடைய உதவும்.
ஓய்வு முக்கியம் :
வெற்றிக்கு செயல்பாடுமட்டுமல்ல, போதிய ஓய்வும் அவசியம். நமது உள்ளம் ஓய்வின்றி செயல்படலாம். ஆனால் உடல் ஓய்வின்றி செயல்படாது. எனவே உடலுக்கு போதிய ஓய்வு எடுத்துக் கொண்டு செயல்பட்டால் உள்ளம் மேலும் புத்துணர்ச்சியுடன் செயல்பட்டு வெற்றியை துரிதப்படுத்தும்.
படிக்கும்போது வேண்டாத பழக்கங்களை பின்பற்றுபவர்களின் எதிர்காலம் பாழகிவிடுகிறது. மேற்கண்ட நற்பழக்க வழக்கங்களை பின்பற்றுபவர்களின் எதிர்காலம் பிரகாசமாக மாறுவது நிச்சயம்!