நுரையீரல் புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை முறை
மனிதகுலத்தை அச்சுறுத்தும் கொடிய நோய்களில் ஒன்றாக புற்றுநோய் உள்ளது. பல்வகை புற்றுநோய்களில், நுரையீரல் புற்றுநோயால் அதிகம் பேர் பாதிக்கப்படுகின்றனர்.
மனிதகுலத்தை அச்சுறுத்தும் கொடிய நோய்களில் ஒன்றாக புற்றுநோய் உள்ளது. பல்வகை புற்றுநோய்களில், நுரையீரல் புற்றுநோயால் அதிகம் பேர் பாதிக்கப்படுகின்றனர்.
மாசடைந்த காற்றைச் சுவாசிப்பது, புகைப்பழக்கம் போன்றவை நுரையீரல் புற்றுநோய்க்கு முக்கியக் காரணமாக இருக்கின்றன. அறுவைசிகிச்சை, கதிரியக்கச் சிகிச்சை மற்றும் கீமோதெரபி மூலமாக நுரையீரல் புற்றுநோய் கட்டுப்படுத்தப்படுகிறது.
கீமோதெரபி முறையில் பொதுவாக மருந்துகளை வாய் மூலமாகவோ, ஊசிகளின் மூலமாகவோ உடலின் உட்செலுத்தி, புற்றுநோயைக் கட்டுப்படுத்தி, அதைக் குணப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
நோயின் தன்மைக்கு ஏற்ப கீமோதெரபி மாறுபடும். ஆனால் இம்முறையில் முழுமையாகக் குணம் பெற முடியாது. இந்நிலையில், கீமோதெரபியுடன் இம்யுனோதெரபியையும் இணைத்துச் சிகிச்சை அளித்தால் புற்றுநோயாளிகளின் வாழ்நாளை அதிகரிக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ‘இம்யுனோதெரபியின்போது அளிக்கப்படும் பெம்பிராலிசுமா மருந்தை கீமோதெரபி சிகிச்சையுடன் வழங்கும்போது நுரையீரல் புற்றுநோயாளிகள் இறப்பு விகிதத்தை பாதியாகக் குறைக்கிறது. கீமோதெரபி சிகிச்சையை மட்டும் தனியாகச் செய்வதைவிட இது அதிக பலன் அளிக்கிறது. நோயாளிகளை அதிகநாள் வாழ வைக்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிகிச்சை முறை, 616 நோயாளிகளிடம் சோதனை செய்யப்பட்டு மேற்கண்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், உலகில் உள்ள நுரையீரல் புற்றுநோயாளிகளுக்கு நல்ல பலன் கிட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.