பிரசவத்திற்கு பிறகு பெண்கள் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்
குழந்தை பிறந்த சில வாரங்களில், பெண்களுக்கு உடலுக்குள் என்னென்னவெல்லாம் நிகழ வாய்ப்புக்கள் உள்ளன என்பது பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
சில பெண்கள், குழந்தை பிறந்த பிறகு, உடலிலும், உள்ளத்திலும், உணர்விலும் சில மாற்றங்களைக் உணர்வார்கள். இங்கு பிரசவத்திற்கு பின், பெண்கள் உடல் ரீதியாக சந்திக்கக்கூடிய பிரச்சனைகள் என்னவென்று பார்ப்போம்.
உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தினாலும், இரத்த ஓட்ட அளவு மாறுபாட்டுக்கு உள்ளாவதினாலும், குழந்தை பெற்ற தாய்மார்களின் உடலில் உள்ள வெப்பக்கட்டுப்பாட்டில் மாற்றங்கள் நிகழ்ந்து, காய்ச்சலோ, நடுக்கமோ ஏற்படலாம்.
பால் சுரக்கும் காலங்களில் சில வாரங்களுக்கு மார்பகங்களில் வலியை உணரக்கூடும். சில சமயங்களில் மார்பகக் காம்புகளும் வலிக்கக்கூடும்
மலச்சிக்கல் குழந்தை பிறந்த பிறகு, ஆசன வாயில் ஏற்படும் புண், பிறப்புறுப்பில் உள்ள தோல் கிழிந்ததால் ஏற்பட்ட காயங்கள் குணமாதல், தசைகளில் ஏற்பட்ட வலி ஆகியவற்றின் காரணமாக மலம் கழிப்பதில் வலி ஏற்படுவதோடு, சில நேரங்களில் மலச்சிக்கலையும் உண்டாக்கும்.
ஆசன வாய்க்கும், பெண்களின் பிறப்புறுப்புக்கும் இடையிலுள்ள தோல் (perineum) பிரசவத்தின் போது மருத்துவரால், கிழிக்கப்பட்டு பின் தைக்கப்படும். இதற்கு எபிசியாடமி (Episiotomy)என்று பெயர். இவ்வாறு போடப்படும் தையல் குணமாவதற்கு எடுத்துக் கொள்ளும் காலத்தில், நடக்கும் போதும், உட்காரும் போதும் வலியை உண்டாக்கும். மேலும் இருமலின் போதும், தும்மலின் போதும் கூட வலியை உண்டாக்கும்
பிரசவத்திற்குப் பிறகு, பிரசவத்திற்கு முன் இருந்த எடையிலிருந்து 5 முதல் 6 கிலோ வரை எடை குறைந்து காணப்படுவோம். (குழந்தையின் எடை, நஞ்சுக்கொடி, அம்னியாடிக் திரவம் என்னும் பனிக்குடம் ஆகியவற்றின் எடை குறைந்து விடுவதால்)
பிரசவம் ஆன பெண்களுக்கு, மூலம் எனப்படும் ஆசனவாயில் உள்ள இரத்தக் குழாய்களில் ஏற்படும் வீக்கம் (hemorrhoids) சாதாரணமாக ஏற்படும்
பிரசவத்தின் போது, தசைகள் விரிவடைந்ததினாலும், நீண்டிருந்த தசைகள் சுருங்குவதினாலும், இருமலின் போதும், தும்மலின் போதும், சிரிக்கும் போதும், தம்மை அறியாமலேயே சிறுநீர் கழித்து விடக்கூடும் அல்லது சிறுநீர் வெளியேறுவதைக் கட்டுப்படுத்த சிரமப்படக்கூடும். அதிலும் சுகப்பிரசவம் நடந்தவர்களுக்கு, பிரசவ வலி நெடுநெரம் நீடித்திருந்தால், அவர்களுக்கு இம்மாதிரியான சிரமங்கள் ஏற்படும்.
பிரசவத்திற்குப் பிறகும், கருப்பை சில நாட்களுக்கு, சுருங்கி விரிந்து கொண்டிருக்கும். இதன் காரணமாக அடிவயிற்றில் வலி ஏற்படும். இரத்தப்போக்கிற்கு மருத்துவம் பார்க்கும் போதும், குழந்தையைக் கவனித்துக் கொள்ளும் போதும், இதனை உணர நேரிடும்.
பிரசவத்திற்குப் பிறகு ஆரம்பத்தில், மாதவிலக்கின் போது வெளிப்படும் உதிரத்தை விடக் கெட்டியாக, இத்திரவம் வெளிப்படத் தொடங்கும். பெரும்பாலும் சிறு சிறு கட்டிகளைக் கொண்டதாக இருக்கும். நாளடைவில் இதன் நிறம் மஞ்சள், வெளிர்மஞ்சள் அல்லது வெள்ளை நிறமாக நிறமிழந்து போகும். ஆனால் இதற்கு பல வாரங்கள் ஆகலாம்.