வெயில் காலத்தில் குழந்தைகளின் உடல் பாதிப்பை தடுக்கும் வழிகள்
இன்றைய குழந்தைகள் நாள் முழுக்க வெயிலோடு விளையாடுவதில்லை என்றாலும், அதீத வெப்பத்தால் சன் ஸ்ட்ரோக் போன்ற பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கும் வழிமுறைகளை பார்க்கலாம்.
வெயில் காலத்தில் வெள்ளை, சந்தனம், பேபி பிங்க், பேபி ப்ளு போன்ற நிறங்களில் குழந்தைகளுக்கு ஆடையை அணிவியுங்கள். இந்த நிறங்கள் வெயிலை உடலுக்குக் கடத்தாது. கறுப்பு மற்றும் சிவப்பு நிற ஆடைகளை கோடைக் காலம் முடியும் வரை பீரோ லாக்கரில் பூட்டி வையுங்கள்.
வெயில் காலத்தில் உச்சந்தலை சூடேறுவதுதான் சன் ஸ்ட்ரோக் வருவதற்குக் காரணம். இதைத் தடுக்க, வாரத்துக்கு இரண்டு முறை நல்லெண்ணெய் வைத்து தலைக்குக் குளிக்க வேண்டும். வெயில் காலத்தில் வீட்டுக்குள்ளேயே இருந்தாலும் உச்சந்தலை சூடேறும். அதனால், தினமும் தலைக்கு எண்ணெய் வைப்பது அவசியம்.
வெயிலில் வியர்த்து வழியும்போது, உடம்புக்கு அத்தியாவசியமான தாது உப்புகளும் வெளியேறிவிடும். இதுபோன்ற சமயத்தில் பிள்ளைகள் சோர்ந்து போவார்கள். சிலருக்கு மயக்கம் வரை செல்லும். இந்தப் பிரச்னையைத் தடுக்க, பானைத் தண்ணீரில் ஒரு சிட்டிகை கல் உப்பு, வெல்லம், எலுமிச்சம் பழம் பிழிந்து பானகம் செய்யுங்கள். தினமும் 3 முதல் 4 தடவை வரை குடிக்கக் கொடுங்கள். தினம் ஒரு இளநீர் குடிப்பது பிள்ளைகளின் உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும்; உடம்பில் தாது உப்புகள் குறையாமல் பாதுகாக்கும்.
வெயில் காலத்தில், கேஸ் நிரம்பிய கூல்டிரிங்ஸை குழந்தைகள் குடிப்பதை முற்றிலும் தவிர்க்கச் செய்யுங்கள். இவை சாப்பிட்ட உணவை மேல் நோக்கி எதுக்களிக்கச் செய்யும்.
விளையாடிவிட்டுச் சோர்வாக வரும் பிள்ளைகளின் உடலை உடனடியாக ஈரத்துணியால் துடையுங்கள். அல்லது, சின்ன டப்பில் தண்ணீர்விட்டு அதற்குள் பாதங்கள் நனைய நிற்க வையுங்கள். உடம்பின் சூடு மெல்ல மெல்லத் தணிந்துவிடும்.
வெல்லமும் மாங்காய்த் துண்டுகளும் ஊறப்போட்ட தண்ணீர், அல்லது வெல்லம் போட்ட புளித்தண்ணீரைத் தினமும் ஒரு கப் குடித்து வந்தால், சன் ஸ்ட்ரோக் ஏற்படாமல் தடுக்கலாம்.
வெயில் காலத்தில், உடலின் சூட்டை அதிகப்படுத்தும் சிக்கன், ஃபாஸ்ட் ஃபுட் வகைகள், மசாலா ஐட்டங்களை முற்றிலும் தவிர்க்கவும். எப்போதாவது சாப்பிட்டாலும், அன்றைக்கு மோர் குடிப்பதை கட்டாயமாக்கிக் கொள்ளுங்கள். தவிர, கோடை கொடைகளான வெள்ளரிக்காய், தர்பூசணி, கிர்ணிப்பழம், முலாம் பழம், நுங்கு, பதநீர், கரும்புச்சாறு போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைத் தினமும் பிள்ளைகளுக்குக் கொடுங்கள். நீங்களும் சாப்பிடுங்கள்.