இதயநோயாளிகளுக்கு நலம் தரும் நடைபயிற்சி
இந்தியாவில் சர்க்கரை நோயாளிகள், இதயநோயாளிகள் அதிகரித்த வண்ணம் உள்ளனர். உணவு பழக்கம், மனஉளைச்சல், உடல் பருமன், நவீன வாழ்க்கை முறையே இதற்கு காரணம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நடைபயிற்சி இல்லாததும் இதற்கு முக்கிய காரணம். நடப்பதை தவிர்த்து இருசக்கர வாகனங்கள், பஸ்களில் பயணிப்பது, படிகளில் ஏறுவதை விட்டு லிப்ட்களில் செல்வது வாடிக்கையாகிவிட்டது. அதிகமாக உணவு சாப்பிடும்போது உடலில் கலோரி சத்து அதிகமாக சேரும். நடைபயிற்சி இல்லாததால் உடலில் உள்ள கலோரி சத்து குறையாமல் உடல் பருமனாகி நோய்கள் அழையா விருந்தாளிகளாக வருகின்றன.
உலகளவில் வளர்ந்த 46 நாடுகளில் நடத்தப்பட்ட சோம்பேறிகள் ஆய்வு பட்டியலில் இந்தியா 39-வது இடத்தை பெற்றுள்ளது. ஒரு நாளைக்கு இந்தியர்களில் ஆண்கள் 4 ஆயிரத்து 606 அடிகளும், பெண்கள் 3 ஆயிரத்து 684 அடிகளும் மட்டுமே நடப்பதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 6 ஆயிரம் அடிகளுக்கு மேல் நடந்தால் அவர்களை நோய்கள் எதுவும் அண்டாது என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள். ஹாங்காங், சீனா, ஜப்பான், உக்ரைன் நாட்டு மக்கள் தினமும் 6 ஆயிரம் அடிகளுக்கு மேல் நடக்கிறார்கள். இதனால் அவர்கள் அதிக ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள்.
பொதுவாக, தினமும் காலையில் 1 மணி நேரம் நடக்கும்போது வைட்டமின் ‘டி’ கிடைக்கும். சுவாச காற்று சீராகும். கைகளை நீட்டி நடக்கும்போது 50 முதல் 100 கலோரி செலவாகிறது. வாரத்தில் 5 நாட்கள் நடைபயிற்சி செல்வது ஆரோக்கியம் தரும். இதய பாதிப்பு உள்ளவர்கள் மெதுவாக நடக்க வேண்டும். நடக்கும்போது மாத்திரைகளை எடுத்து செல்ல வேண்டும். நெஞ்சுவலி ஏற்பட்டால் மாத்திரைகளை சாப்பிட வேண்டும்.
சர்க்கரை நோயாளிகள் நடந்து செல்லும்போது கற்கள் குத்தி அவர்கள் கால்கள் புண்ணாக வாய்ப்பு உள்ளது. எனவே, அவர்கள் காலணிகள் அணிந்துகொண்டு நடக்க வேண்டும். இன்சுலின் ஊசிபோட்டவுடன் நடக்க கூடாது. எந்த காரணத்தைக் கொண்டும் சாப்பிட்ட உடன் நடக்கக்கூடாது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். நடைபயிற்சி செல்வோம். ஆரோக்கியத்தை காப்போம்.