உடல் ஆரோக்கியம் காக்கும் கற்பூரம்
வழிபாடு மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்கும் ஏராளமான நன்மைகளை கற்பூரம் வழங்குகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
இறை வழிபாட்டில் கற்பூரம் முக்கிய இடம் பிடித்துள்ளது. பூஜையின் நிறைவாக கற்பூர ஆரத்தி காண்பிப்பது வழக்கம். கற்பூரத்தின் மகிமையை அந்த காலத்திலேயே நம் முன்னோர்கள் அறிந்து பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். வழிபாடு மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்கும் ஏராளமான நன்மைகளை கற்பூரம் வழங்குகிறது. சுவாசப் பையை சுத்தப்படுத்தும் ஆற்றல் இதற்கு இருக்கிறது. இதன் வாசனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நன்மை செய்யக்கூடியது. கற்பூரத்தின் வாசனை மனதிற்கும், ஆன்மாவிற்கும் பிடித்தமானது என்று புராண நூல்கள் கூறுகின்றன.
கற்பூரம் ஆன்மாவிற்கு பிடித்த ஒளி, வாசனையை கொண்டிருக்கிறது. இதன் வாசனை மனதை ஒருநிலைப்படுத்தக்கூடியது. நல்ல எண்ணங்கள், நல்ல உணர்வுகளை தூண்டக்கூடியது. அதனால் தான் கற்பூரத்தை ஆன்மிக சக்திக்காக பயன்படுத்துகிறார்கள். இதன் வாசனை அந்த இடத்தை சுற்றி பரவி இருக்கும் எதிர்மறை எண்ணங்களை நீக்கக்கூடியதன்மை கொண்டது.
கற்பூரம் எரிந்து அதன் வாசனை காற்றோடு கலக்கும்போது சுற்றி இருக்கும் விஷக்கிருமிகள் அழிக்கப்படுகிறது. பாக்டீரியாக்களை அழிக்க பயன்படுத்தப்படும் பிளிச்சிங் பவுடர் செய்யும் பணியை கற்பூரம் செய்கிறது. அதாவது விரும்பத்தக்க நறுமணத்தை தருவதோடு கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது. உடலுக்கு நோயை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும் ஆற்றலையும் கொண்டிருப்பதாக கருதப்படுகிறது. இதன் வாசனை சுற்றுச்சூழலுக்கும் நன்மைபயக்கிறது. பல மருத்துவ குணங்களையும் கொண்டிருக்கிறது, கற்பூரம்.
தோலில் ஏற்படும் பல வியாதிகளை இது குணமாக்குகிறது. அரிப்பு, சொறி, சிரங்கு, வெட்டுக்காயம், தீப்புண் போன்றவற்றிற்கு சுத்தமான கற்பூரத்தை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். தேங்காய் எண்ணெய்யில் கற்பூரம் கலந்து காலில் சேற்றுப்புண் தோன்றும் இடத்தில் தடவி வரலாம். உடனடி பலன் கிடைக்கும். மீண்டும் சேற்றுப்புண் ஏற்படாமலும் தடுக்கும். வெயிலின் தாக்கத்தால் சருமத்தில் நிறமாற்றம் ஏற்படுவதையும் தடுக்கும். சந்தனத்தில் கற்பூரத்தை குழைத்து பூசினால் புற ஊதாக்கதிர்களால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்தலாம். கற்பூர எண்ணெய்யை முகத்திற்கு பயன்படுத்தலாம்.
கால் வெடிப்புகளை குணப்படுத்த கற்பூரம் சிறந்த மருந்து. அகன்ற பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி அதில் சிறிது கற்பூரத்தை போட்டு கலந்து கால்களை முக்கி வைக்க வேண்டும். இப்படி தினமும் செய்துவந்தால் கால் வெடிப்புகள் நீங்கி பாதங்கள் அழகு பெறும். கற்பூரத்திற்கு தலைவலியை போக்கும் சக்தியும் இருக்கிறது. கற்பூரத்தை சந்தனம் அல்லது துளசி சாற்றில் குழைத்து தலையில் பற்று போட்டால் தலைவலி நீங்கிவிடும். எலுமிச்சை சாற்றில் சிறிது கற்பூரத்தை கலந்து தலையில் தேய்த்தாலும் தலைவலி கட்டுப்படும். மூட்டுவலி, மூட்டு பிடிப்பு மற்றும் வாத நோயால் அவதிப்படுபவர்கள் கற்பூர எண்ணெய்யை தேய்த்து வந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும். தசைப்பிடிப்புக்கும் உபயோகிக்கலாம்.
முடி உதிர பல காரணங்கள் இருக்கின்றன. அதனை கட்டுப்படுத்தும் தன்மை கற்பூரத்திற்கு உண்டு. தேங்காய் எண்ணெய்யுடன் கற்பூர எண்ணெய்யை கலந்து தினமும் கூந்தலில் தேய்த்து வரலாம். கூந்தல் வளம் பெறும். வேர்களை உறுதியாக்கி முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்யும். துளசி சாறில் கற்பூரத்தை கலந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பொடுகு, பேன் தொல்லைகள் நீங்கும். நூறு கிராம் தேங்காய் எண்ணெய்யுடன் 4 கிராம் கற்பூரத்தை கலந்து தலைக்கு தொடர்ந்து பயன்படுத்தினால் பொகுடு தொல்லை அறவே நீங்கிவிடும்.
பல் வலியால் அவதிப்படுபவர்கள் கிராம்புடன் கற்பூரத்தை சேர்த்து தூளாக்கி வலியுள்ள இடத்தில் வைக்கலாம். பல் வீக்கம், வலி நீங்கும். இது தற்காலிகமானதுதான் என்றாலும் நல்ல பலன் தரும். பிறகு டாக்டரிடம் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். வாய் துர்நாற்றம், ஈறுகளில் ரத்தம் வடிதல் போன்ற பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் வெற்றிலையில் சிறிதளவு கற்பூரத்தை கலந்து வாயில் வைத்து அதன் சாற்றை சிறிது, சிறிதாக தொண்டைக்குள் இறக்கலாம். துர்நாற்றம் நீங்கிவிடும்.
தீக்காயத்தழும்பு, அம்மை தழும்பு, கொசு, பூச்சிக்கடி போன்றவற்றிற்கு கற்பூரம் நிவாரணம் தரும். தண்ணீரில் சிறிது கற்பூரத்தை கலந்து தழும்பு உள்ள இடங்களில் பூசி வர வேண்டும். நல்லெண்ணெய்யில் கற்பூரம் கலந்து பூச்சிக்கடி உள்ள பகுதியில் தடவினால் விஷம் நீங்கும். தழும்பு மறையும்.
அடிக்கடி சளி, இருமலால் அவதிப்படுபவர்கள் குளிக்கும் முன்பு கற்பூரத்தை பயன்படுத்தலாம். ஒரு கரண்டியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடுபடுத்தி அதனுடன் கற்பூரம், நான்கைந்து மிளகை பொடித்து போட்டு சூடாக தலையில் தேய்த்து ஊறவிடலாம். தொடர்ந்து இப்படி செய்து வந்தால் நுரையீரலில் பரவி இருக்கும் சளி நீங்கி சுவாசம் சீராகும். தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் நெய்யில் சிறிது கற்பூரத்தை கலந்து சூடாக்கி கால் பாதங்களில் தடவி மசாஜ் செய்து வரலாம். நல்ல தூக்கம் வரும்.