82 சதவீதம் பெண் குழந்தைகள் பாதிக்கப்படுவது சொந்த குடும்ப உறுப்பினர்களால் தான். இந்த பாலியல் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவது மிகமிக அவசியம்.
குழந்தைகள் மீது வரும் பாலியல் மோகத்திற்கு பீடோபிலியா என்று பெயர். 13 வயதிற்கு உட்பட்ட பருவ வயது எட்டுவதற்கு முன் உள்ள குழந்தைகள் மேல் பாலியல் இச்சை கொள்ளும் மனநிலையை பீடோபிலியா என்று அழைக்கிறார்கள். இந்நோயின் காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. சில வேளைகளில் ஒரே குடும்ப உறுப்பினர்கள் தொடர்ச்சியாக இதே குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக கண்டு பிடிக்கப்பட்டாலும் இது குடும்ப பாரம்பரிய நோயா அல்லது ஜீன்களால் வருவதா என கண்டுபிடிக்கவில்லை.
ஆனாலும் சில மனநல மருத்துவர்கள் இது நோயல்ல, சுய இன்பம், ஓரினச்சேர்க்கை போன்ற ஒரு பழக்க வழக்கம் என்று கூறுகின்றனர். இந்த நோய் தேர்ந்தெடுக்கப்படுவதோ அல்லது கற்றுத் தேர்வதோ அல்ல. இயல்பாக சில மனிதர்களில் காணப்படுவது தான் என உளவியல் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். பீடோபிலியா என்பது ஒரு விகல்பமான பாலியல் விருப்பமாகவே உள்ளது.
இந்த நோயாளிகளை குணப்படுத்துவது மிகவும் கடினம். எதனால் இப்படியான மனநிலைக்கு எட்டுகின்றனர் என்பதை பற்றி இன்னும் சரியான ஆய்வு வரவில்லை. இந்த நோயின் தாக்கத்தை 16 வயது முதல் ஒரு மனிதன் அறிந்து கொள்ள இயலும். தனக்கு இது போன்ற நோய் தாக்கியுள்ளது என அறிந்ததும் சிகிச்சைக்காக உளவியல் மருத்துவர்களை இவர்கள் அணுகுவதில்லை. மாறாக தன்னுடன் அன்புடன் பழகும் குழந்தைகளையோ மற்ற குழந்தைகளையோ தனது பாலியல் இச்சைக்கு இரையாக்க தேடி அலைய ஆரம்பிக்கின்றனர்.
இந்த நபர்கள் கோரமானவர்களாகவோ அச்சம் கொள்ளும் தோற்றத்திலோ தெரிய மாட்டார்கள். மிகவும் நட்பாக குழந்தைகளிடம் பழகும், குழந்தைகளை எளிதாக வசியப்படுத்தும் ஆற்றல் கொண்டவர்களாகவே இருப்பார்கள். இதில் இன்னொரு பெரும் கொடுமை என்னவென்றால் பெண் குழந்தைகளின் பாதிப்புகூட வெளியில் தெரிகிறது. பேசப்படுகிறது, தண்டனையும் கிடைக்கிறது. ஆனால், ஆண் குழந்தைகள் மீது நிகழும் பாலியல் வன்முறைகள் சுத்தமாக வெளிவருவதில்லை. அதை யாரும் சீரியசாக எடுத்துக்கொள்வதில்லை. இப்போது பெண் குழந்தைகள் உன்னிப்பாக கவனிக்கப்படுவதால் இவர்களின் பார்வை ஆண் குழந்தைகள் பக்கம் திரும்பி இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று சொல்கிறது.
இவ்விதமான நோயாளிகள் வெளியாட்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. 82 சதவீதம் குழந்தைகள் பாதிக்கப்படுவது சொந்த குடும்ப உறுப்பினர்களால் தான். சில வேளைகளில் பள்ளி வாகன ஓட்டுநர்கள், ஆசிரியர்கள், மதகுருக்கள் போன்றவர்களும் குழந்தைகளை எளிதாக பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்குகின்றனர். இந்த பாலியல் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவது மிகமிக அவசியம்.