அழகு..அழகு..புதியவை

சருமப் பொலிவுக்கு கடைப்பிடிக்கவேண்டியவை

சருமம் என்றால் முகம் மட்டும் அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது. உச்சி முதல் உள்ளங்கால் வரை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டும்.

நம் சருமம் இயற்கையாகவே பளபளப்பாக இருக்க, மினுமினுக்க நாம் பெரிதாக எதையும் மெனக்கெடவேண்டிய அவசியமில்லை. அன்றாடம் செய்கிற சில விஷயங்களில் ஒரு சில மாற்றங்களை மேற்கொண்டாலே போதும். சருமப் பொலிவு பெற கடைப்பிடிக்கவேண்டிய விஷயங்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்…

* சாப்பிடும் உணவு வைட்டமின் சி நிறைந்ததாகவும், தேவையற்ற கொழுப்பு மற்றும் இனிப்பு குறைந்ததாகவும் இருக்க வேண்டும். வெள்ளைச் சர்க்கரையைத் தவிர்க்கவும். அதற்குப் பதிலாக நாட்டுச்சர்க்கரை, கருப்பட்டி, தேன் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம். பழங்கள், காய்கறிகள், கீரை வகைகள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதால், உடலில் உள்ள நச்சுக்கள், தேவையற்ற கொழுப்புகள் நீங்கும். சருமமும் பொலிவாகும்.

ஹோட்டல் மற்றும் துரித உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஜங்க் ஃபுட், எண்ணெயில் வறுத்த காரமான மற்றும் புளித்த உணவுகளைச் சாப்பிடக் கூடாது. இவை அனைத்தையும் அதிகமாகச் சாப்பிடும்போது சருமம் பொலிவிழந்து போகும்; முதிர்ச்சியான தன்மை சருமத்துக்குக் கிடைக்கும்.

* ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் தூங்கவேண்டியது அவசியம். சிவந்த கன்னங்கள் பெறுவதற்கு முகத்துக்கும் உடலுக்கும் சீரான ரத்த ஓட்டம் அவசியம். அது ஆழ்ந்த தூக்கத்தில்தான் கிடைக்கும். உறங்கும்போதுதான் தோலில் கொலாஜென் உருவாகும். இது, தோலிலுள்ள இறந்த செல்களை நீக்கி, புது செல்களைப் பெருக்கும்.

இரவு நீண்ட நேரம் தூங்காமல் கண்விழித்து, மொபைல் அல்லது டி.வி பார்க்கக் கூடாது. இதனால் கண்களிலுள்ள ஈரப்பதம் குறைந்து தூக்கமும் சீக்கிரம் வராது. அதோடு கண்களைச் சுற்றி கருவளையம் வந்து முகத்தின் அழகையே அது கெடுத்துவிடும் .

* சருமம் தொய்வாக, வறண்டுபோய்க் காட்சியளிக்கிறது என்றால், அதற்கு வைட்டமின் டி பற்றாக்குறை காரணமாக இருக்கலாம். காலை, மாலை வேளைகளில் அடிக்கும் இளம் வெயிலில் வைட்டமின் டி நிறைந்துள்ளது. நாம் உண்ணும் உணவில் கிடைப்பதைவிட சூரிய ஒளியில்தான் அதிக அளவில் வைட்டமின் டி கிடைக்கும். இதனால் வாரத்துக்கு மூன்று நாட்களுக்காவது குறைந்தது 15 நிமிடங்களுக்கு இளம் வெயிலில் நிற்பதை வழக்கமாக்கிக்கொள்ளலாம்.

சன் ஸ்க்ரீன் இல்லாமல் வெளியே செல்வது கூடாது. காலை 10 மணி முதல் மாலை 3 மணிவரை அடிக்கும் வெயிலில் அதிகப்படியான புற ஊதாக்கதிர்கள் நிறைந்துள்ளன. அதனால், வெளியில் செல்லும்போது சன் ஸ்க்ரீன் லோஷனை அப்ளை செய்யாமல் செல்வதைத் தவிர்க்கலாம். குளிர்காலம், மழைக்காலம் என்றால் சன் ஸ்க்ரீன் லோஷனைத் தவிர்ப்பதே நல்லது.

* நாள் ஒன்றுக்கு அவரவர் உடல் உழைப்புக்குத் தகுந்தாற்போல் நீரைப் பருக வேண்டும். குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீரையாவது கட்டாயம் குடிக்க வேண்டும். நீர்த்தன்மை அதிகமுள்ள தர்பூசணி, வெள்ளரிக்காய், தக்காளி, ஆரஞ்சு, திராட்சை போன்ற காய் மற்றும் பழ வகைகளைச் சாப்பிட வேண்டும். காலை எழுந்தவுடன் பன்னீரில் பஞ்சை நனைத்து முகத்தில் தடவவும். இதனால், சருமத்தில் உள்ள அடைப்புகள் நீங்கி, நாள் முழுவதும் உங்கள் முகம் புத்துணர்வோடு இருக்கும்.

வெறும் வயிற்றில் காபி குடிக்கக் கூடாது. இது உடலின் நீர்த்தன்மையை குறைக்கும்; உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றவிடாமல் தடுக்கும். அதனால் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரைக் குடித்துவிட்டு, அரை மணி நேரம் கழித்து டீ அல்லது காபி குடிக்கலாம்.

* ஒவ்வொரு நாளும் வெதுவெதுப்பான நீரால் மூன்று முறையாவது முகத்தைக் கழுவ வேண்டும். முகப்பருக்கள் அதிகமாக இருக்கும்போது, இனிப்பு வகைகளை அதிகளவில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அது, பருக்களுக்குத் தீனி போடுவது போன்றது. க்ரீம்களைப் பூசுவதற்குப் பதிலாக சந்தனம், முல்தானிமட்டி, கஸ்தூரி மஞ்சள், வேப்பிலைப் பொடி, எலுமிச்சைச் சாறு ஆகியவற்றைத் தலா ஒரு டீஸ்பூன் எடுத்து, முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவலாம். வாரம் ஒருமுறை இதைச் செய்தாலே போதுமானது.

பருக்களைக் கிள்ளுவதுகூடாது. இதனால் மேலும் பருக்கள் படரும். பருக்கள் வரும்போது கைகளை முகத்தில் அதிகமாக வைக்கக் கூடாது. அரிப்பு எடுத்தால், பன்னீரில் நனைத்த அல்லது கிரீன் டீயில் நனைத்த பஞ்சை பருக்களின் மீது வைக்கலாம். கூலிங் கிளாஸ் அல்லது கண்ணாடி போடும் வழக்கம் இருந்தால், அதை அடிக்கடித் துடைத்துப் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால், அதில் இருக்கும் தூசி முகத்தில் படிந்து அதனாலும் பருக்கள் உருவாகலாம்.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker