கோடைகால நோய்களில் இருந்து தப்பிப்பது எப்படி?
கோடை காலத்தில் வருகின்ற நோய்களும், அதில் இருந்து தப்பிப்பது மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து இயற்கை மருத்துவ வல்லுனர்கள் என்ன கூறுகிறார்கள் என்று பார்க்கலாம்.
கிராமம், நகர்ப்புறங்கள் என்றில்லாமல் கோடைகால நோய்கள் ஒவ்வொரு வரையும் பதம்பார்க்கின்றன. குறிப்பாக வெப்பத்தின் தாக்கத்தால் வேர்க்குரு, கொப்பளங்கள் மற்றும் அம்மை நோய்கள் பரவி வருகின்றன. இந்த நோய்கள் முதலில் குழந்தைகளுக்கு ஆரம்பித்து பெண்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் பரவுகிறது.
அதனால் வெயிலில் குழந்தைகள் விளையாடுவது உடல் நலத்துக்கு உகந்தது அல்ல. இந்த வகையில் கோடை காலத்தில் வருகின்ற நோய்களும், அதில் இருந்து தப்பிப்பது மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து இயற்கை மருத்துவ வல்லுனர்கள் என்ன கூறுகிறார்கள் என்று பார்க்கலாம்:-
கோடைகால வெப்பம் உடலை தாக்கும்போது, உஷ்ண சம்பந்தப்பட்ட நோய்கள், உபாதைகள் தோன்றும். இந்த காலங்களில் சின்னம்மை நோய் அதிகளவில் தாக்கும். உடலில் நீர்சத்து பற்றாக்குறையாலும் சின்னம்மை ஏற்படும். இடைவிடாமல் வெயிலில் அலைந்து திரியும் போதும் இதன் தாக்குதல் ஏற்படலாம்.
பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து, தூசு மற்றும் புகை மண்டலம் வழியாக எளிதில் மற்றவர்களுக்கும் பரவிவிடும். இடைவிடாத காய்ச்சல், பின் கழுத்து, முதுகு, கை போன்ற இடங்களில் சிறு, சிறு கொப்பளங்கள் தோன்றும். இந்த கொப்பளங்களைக் கிள்ளக்கூடாது. இவை, ஒரு வாரத்தில் தாமாகவே மறைந்துவிடும்.
வேப்பிலைகளை விரித்து அதன்மீது படுப்பது, வேப்பிலை, மஞ்சள் கலந்த நீரில் குளிப்பது, வேப்பங்கொழுந்தை அரைத்துக் குடிப்பது போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும். இதனால் கொப்புளங்களால் ஏற்படக்கூடிய அரிப்பு நீங்கும்.
இயல்புக்கு மாறான வகையில் அதிகப்படியான அரிப்போ அல்லது அதிக காய்ச்சலோ இருந்தால் மட்டுமே மருத்துவரிடம் செல்ல வேண்டும். அசைவ உணவுகளுக்கு முற்றிலும் தடைபோட வேண்டும். ஆவியில் வேக வைத்த காய்கறிகள், இயற்கையிலேயே குளிர்ச்சியான உணவுகள், பழங்கள், மோர், இளநீர், தண்ணீர் போன்றவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ளவேண்டும்.
இது தவிர வைரஸ் கிருமிகள் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். மேலும் வெப்பநிலை அதிகரிப்பதால், உடலில் உள்ள நீர்ச்சத்து, விரைவாக குறைந்து வற்றி விடும். இதனால் உடலின் வெப்பநிலை அதிகரித்து, அவை உடம்பில் வேனல் கட்டிகளையும் முகத்தில் பருக்களையும் ஏற்படுத்தும். இவை அதிக வலி தருவதாக இருக்கும்.
இந்த கட்டிகள் சீழ்பிடிக்கும் அளவுக்கு பெரியதாக இருந்தால், மருத்துவரிடம் செல்லவேண்டும். மேலும் அதிகளவில் வியர்வை உடம்பில் தங்குவதால் வியர்க்குரு ஏற்படுகிறது. ஆகையால், வியர்வையை உடம்பில் தங்க விடாதபடி முகத்தை வெறும் நீரால் கழுவுவது, உடம்பை ஈரமான துணியால் துடைத்துக் கொள்வது, தினமும் இரண்டு முறை குளிப்பது நல்லது.
வியர்வை காரணமாக ஜலதோஷம் பிடிப்பது இயல்பு. ஆகவே வியர்வையை ஒழுக விடாமல் துடைத்து விடுவது நல்லது. தலைப்பகுதி வியர்வையை துடைப்பதால் ஜலதோஷத்தை தவிர்க்கலாம். இறுக்கமான உள்ளாடைகளால் தோலில் படர் தாமரை, அரிப்பு ஏற்படலாம்.
ஆகவே அந்த ஆடைகளை அணியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதிக தூசு, வெப்பம் கலந்த காற்று காரணமாகவும் தோலில் அலர்ஜி ஏற்படும். மேலும் வெயில் காலத்தில் சூடு பிடித்தல் காரணமாக அடிவயிறு வலி பலருக்கு ஏற்படலாம். அப்படி இருக்கும்போது அடிவயிற்றில் தொப்புளை சுற்றி நல்லெண்ணெய் பூசிக்கொள்வது நலம் தரக்கூடியதாகும்.
பொதுவாக கோடை காலத்தில் உடலையும், உள்ளத்தையும் குளிர்ச்சியாக வைப்பதற்கு தினசரி 6 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும்.
கோடை காலத்தில் காரம் மற்றும் மசாலா நிறைந்த உணவுகள், எண்ணெய் பலகாரங்கள், பேக்கரிப் பண்டங்கள், அசைவ உணவுகளை தவிர்த்து, தயிர்சாதம், மோர்சாதம், கம்பங்கூழ், வெங்காயப் பச்சடி, வெள்ளரி சாலட், பொன்னாங்கண்ணிக்கீரை, பீட்ரூட், கேரட், முள்ளங்கி, பாகல், தக்காளி ஆகியவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம்.