பெண்களே வெயில் காலத்தில் லெக்கின்ஸ் வேண்டாமே
பெண்கள் கோடை காலங்களில் ஜீன்ஸ், லெக்கின்ஸ் போன்ற ஆடைகள் உடுத்துவதை தவிர்க்க வேண்டும். இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
கோடை காலத்தில் உடல் ஆரோக்கியத்தை காக்க உடுத்தும் உடையிலும் கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் அதுவும் சரும பிரச்சினைக்கு காரணமாகி விடும். வியர்க்குரு, அலர்ஜி உள்ளிட்ட தோல் வியாதிகளுக்கு வழிவகுத்துவிடும்.
கோடை காலங்களில் பெண்கள் ஜீன்ஸ், லெக்கின்ஸ் போன்ற ஆடைகள் உடுத்துவதை தவிர்க்க வேண்டும். அடர்த்தியான துணிகளை கொண்ட ஜீன்ஸ் உடலில் வெளிப்படும் வியர்வையை உறிஞ்சாது. அது உடலிலேயே தங்கி சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
மேலும் லெக்கின்ஸ் போன்ற ஆடைகளை தவிர்த்து தளர்வான ஆடைகளை அணிவதே உடலுக்கு சவுகரியமாக இருக்கும். அதிலும் காட்டன் துணிகளை உடுத்துவதே நல்லது. உடல் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக ஈரப்பதமான ஆடைகளை உடுத்தக் கூடாது. அவை நோய் தொற்று ஏற்படுவதற்கு மூலகாரணமாகிவிடும்.
பளிச்சென்று காட்சியளிக்கும் அடர் நிறமுடைய ஆடைகளை உடுத்துவதையும் தவிர்க்க வேண்டும். அடர் நிறங்கள் சூரிய ஒளியை உள்வாங்கி உடல் உஷ்ணத்திற்கு வழிவகுக்கும். ‘கோட்’ போன்ற எடை அதிகமான ஆடைகளை அணிவதையும் தவிர்க்க வேண்டும்.