மருந்து வாங்கும்போது கண்டிப்பாக கவனிக்க வேண்டிவை
மருந்து வாங்கும் போது சில விஷயங்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அவை என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
1. அரசால் அங்கீகரிக்கப்பட்ட உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே மருந்துகளை வாங்க வேண்டும். அதற்கு அந்த கடையின் விற்பனை ரசீதுச் சீட்டு அல்லது போர்டில் உரிமை விவரங்கள் போட்டிருக்கும். அதைக்கண்டு விவரங்கள் அறிந்து வாங்க வேண்டும்.
2. மருந்துகள் வாங்கியதும் அதற்கான விற்பனை ரசீதைக் கேட்டு வாங்குங்கள். அது நீங்கள் வாங்கும் மருந்துக்கு உத்தரவாதமாக இருக்கும். பேப்பரில் தொகையை மட்டும் கிறுக்கித்தருவதை பெற்றுக்கொள்ளாதீர்கள்.
3. மருந்துகள் வாங்குவதற்கு முன், அதில் அச்சிடப்பட்டுள்ள உற்பத்தி தேதி, காலாவதியாகும் தேதி, பேட்ச் நம்பர் ஆகியவற்றை கவனியுங்கள். இது மிக மிக முக்கியம்.
4. மருந்தின் விலை, ரசீதில் குறிப்பிட்டுள்ள விலை என இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து வாங்கவும்.</p>
5. அவசரப்படாமல் நிதானமாக உங்கள் மருந்துகளை விசாரித்து வாங்கவும். தேவையானதை மட்டும் கேட்டு வாங்குங்கள். கடையில் வற்புறுத்தும் மற்ற மருந்துகளை வாங்க வேண்டாம்.
6. மருந்துகளை எப்படி பாதுகாக்க வேண்டும், எங்கு வைக்க வேண்டும், எந்த தட்பவெப்பத்தில் வைக்க வேண்டும் என்பதையெல்லாம் கவனமாகக் கேட்டுக்கொள்ளுங்கள். குழந்தைகளின் கைகளில் எட்டக்கூடாத மருந்தா என்பதையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள்.
7. மருத்துவர் குறித்துள்ள மருந்துகளை மட்டுமே வாங்குங்கள். ஒரே கம்பெனி தான் என்று சொல்லி விற்கும் மாற்று மருந்துகளை, மருத்துவரிடம் கேட்டபிறகே வாங்கி உபயோகியுங்கள்.
8. நீங்கள் வாங்கும் மருந்துகளை நீங்கள் மட்டுமே உபயோகியுங்கள். அதே போன்ற பிரச்சனை உள்ளது என்று நீங்களே யாருக்கும் அந்த மருந்துகளை கொடுக்காதீர்கள், அது ஆபத்தில் முடியலாம்.