புதியவைமருத்துவம்

கழுத்து வலிக்கு தீர்வு

பொதுவாக நாள் முழுவதும் கம்ப்யூட்டர் முன்பாகவே அமர்ந்திருப்பவர்களுக்கு, சரியாக தலையணை வைத்து படுக்காமல் இருப்பவர்களுக்கு கழுத்து வலி வரும்

கழுத்துவலி என்பது வயதானவர்களுக்குத் தான் வரும் என்பதெல்லாம் கிடையாது. எந்த வயதினருக்கும் வரலாம். சிறுவர்களுக்கு கூட அதிக புத்தகங்கள் தூக்குவதனால், சரியான முறையில் உட்காராமல், குனிந்தபடியே படிப்பதனால் கழுத்து வலி ஏற்படும். பெரியவர்களுக்கு கழுத்துவலி வருவதற்கு நிறைய காரணங்கள் உண்டு. அப்படி வந்தால் அதனைப் பெரிதுபடுத்தாமல் ஏதாவது தைலம் வாங்கி தேய்த்துவிட்டு விட்டுவிடுகிறோம். ஆனால் அது முற்றிலும் தவறான ஒன்று. கழுத்து வலி எதனால் உண்டாகிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

நம் உடலில் மிக முக்கிய நரம்பு மையங்கள் கழுத்தில்தான் அமைந்துள்ளன. முதுகுத் தண்டு வட எலும்புகளும் இந்த பகுதியில்தான் தொடங்குகின்றன. அத்தகைய கழுத்து எலும்பின் மத்தியில் உள்ள சவ்வின் பெயர்தான் சர்வைகல் டிஸ்க். அதிலிருந்துதான் உடலுக்கு எல்லா நரம்புகளும் செல்கின்றன. கழுத்துக்கு அதிகமான வேலை தரும்போது, அங்கிருக்கும் தசைகள் சோர்வுற்று சவ்வினை அழுத்தும்.

அதன் காரணமாக அந்த சவ்வு விலகுவதால் உண்டாகும் பிரச்சினைக்கு பெயர்தான் சர்வைகல் ஸ்பான்டைலிட்டிஸ். பொதுவாக நாள் முழுவதும் கம்ப்யூட்டர் முன்பாகவே அமர்ந்திருப்பவர்களுக்கு, சரியாக தலையணை வைத்து படுக்காமல் இருப்பவர்களுக்கு கழுத்து வலி வரும். தூங்கும்போது கைகளை தலைக்கு முட்டுக் கொடுத்து தூங்கினால் கைகளில் ரத்த ஓட்டம் பாதித்து, அதனால் கழுத்திலுள்ள சவ்விற்கும் ரத்த ஓட்டத்தில் தடங்கல் உண்டாகும்.

இதனால் ஏற்படும் வலி மெல்ல கழுத்தில் ஆரம்பித்து பின் கை கால் என பரவி, அசாத்திய வலி தரும். அன்றாட வேலைகள் எதுவும் செய்ய முடியாமல் நிறைய பேர் இந்த கழுத்து வலியால் அவதிப்படுகிறார்கள். சூடான அல்லது குளிர்ச்சியான ஒத்தடம் கொடுக்கலாம். இந்த இரண்டு ஒத்தடங்களுமே தசைகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். இறுக்கத்தைப் போக்கும்.

தினமும் காலையில் எழுந்ததும், இரவு தூங்கும் முன்பும் ஒத்தடம் வைப்பது நல்ல நிவாரணம் தரும். பூண்டினை தினமும் வதக்கி சாப்பிட்டு வந்தால், கழுத்தில் ஏற்படும் வீக்கம் குறைந்து, எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இந்த ஸ்பாண்டிலைட்டிஸ் வலிக்கு சிறந்த தீர்வு கழுத்திற்கான உடற்பயிற்சிதான். அதிக நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்பவர்கள் கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

தோள்பட்டையை மேலே உயர்த்தி, மூச்சை நன்றாக இழுங்கள். ஒரு 10 நொடிகளுக்கு தம் பிடித்து தோள்பட்டையை உடனடியாக தொங்கவிடுவது போல் தளர்த்துங்கள். இவ்வாறு ஒரு 5 முறை செய்யுங்கள். இவ்வாறு தினமும் செய்வதனால் தசைகளுக்கு அதிக ரத்த ஓட்டம் பாய்ந்து வலி நாளடைவில் குறையும்.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker