சரும பிரச்சனை உள்ளவர்களுக்கான கோடை கால டிப்ஸ்
சருமப் பிரச்சனை உள்ளவர்கள் கோடை காலத்தில் சருமப் பாதுகாப்புக்கு என்னென்ன செய்யலாம்… எந்த ஃபேஸ் பேக் பயன்படுத்தலாம் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
கோடை காலத்தில் சருமம் தடித்துக்காணப்படுதல், முகமும் சருமமும் கருமை நிறமடைதல் போன்ற சருமப் பிரச்சனைகள் அதிகம் ஏற்படும். சிலருக்கு இயற்கையாகவே சரும வறட்சி இருக்கும். ஏற்கெனவே சருமப் பிரச்சனை உள்ளவர்கள் சருமப் பாதுகாப்புக்கு என்னென்ன செய்யலாம்… எந்த ஃபேஸ் பேக் பயன்படுத்தலாம் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
* சருமம் எந்த இடத்தில் கறுத்திருக்கிறதோ, அந்த இடத்தில் எலுமிச்சைச் சாறு – தயிர் – தக்காளி பேஸ்ட் அல்லது எலுமிச்சைச் சாறு – உருளைக்கிழங்கு பேஸ்ட் போன்ற இரண்டில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம். எலுமிச்சையிலுள்ள ஆல்ஃபா-ஹைட்ராக்சில் அமிலம் (Alpha hydroxyl acids), வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம் (Citric acid) போன்றவை சரும நிறம் மாற்றமடைவதைச் சரிசெய்யும்.
* சிலருக்கு கண், மூக்கு, உதடு பகுதிகளைச் சுற்றிக் கருவளையம் இருக்கும். புளித்த தோசை மாவுடன் தக்காளி சேர்த்து முகத்தில் தேய்த்தால் கருவளையம் நீங்கி பொலிவான சருமத்தைப் (Eventone) பெறலாம். இன்ஸ்டன்ட் பிளீச்சராக ( Instant Bleacher) இது இருக்கும். தக்காளி – தயிர் பேஸ்ட், தக்காளி – கடலை மாவு – கற்றாழை பேஸ்ட் போன்றவை மிகவும் நல்லவை.
* தேங்காய்ப்பாலில் அதிக கொழுப்புச்சத்து இருப்பதால், சருமத்துக்கு நீர்ச்சத்து கிடைக்கவும், நிறம் கருமையாவதையும் தடுக்கும். ஆண்கள், கற்றாழைச் சாற்றுடன் தேங்காய்ப்பால் சேர்த்து முகத்தில் தேய்த்துக்கொள்ளலாம். சந்தனத்துடன் தேங்காய்ப்பால் கலந்து, ஃபேஸ் பேக்காக பயன்படுத்துவது முகப்பொலிவை அதிகரிக்கும். வெயில் காலத்தில் வியர்வை நாற்றத்தால் சிரமப்படுபவர்கள், சந்தனத்தைத் தேய்த்துக்கொண்டாலே அந்தப் பிரச்சனையிலிருந்து விடுபட்டுவிடலாம்.
* `முகத்துல எண்ணெய் வழியுது’ என்பவர்கள் கடலை மாவு, ரோஸ் வாட்டர், முல்தானி மெட்டி போன்றவற்றைச் சேர்த்து பேஸ்ட் ஆக்கி, தினமும் முகத்தில் தேய்த்து வந்தால், அதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் முகத்தைப் பளிச்சென மாற்றிவிடும்.
* தயிர், உடலுக்கு மட்டுமன்றி சருமத்துக்கும் நல்லது. தயிரை அப்படியே பயன்படுத்துவதற்குப் பதிலாக, தக்காளியுடன் இரண்டு டீஸ்பூன் தயிர் சேர்த்து பயன்படுத்தலாம். ஆரஞ்சுப் பழத்தின் தோலை அரைத்து, அதனுடன் தயிர் சேர்த்தும் பூசலாம்.