குழந்தையின்மை தீர்க்க முடியாத பிரச்சனையா?
குழந்தையின்மைப் பிரச்சனை எந்தக் காரணத்தால் ஏற்பட்டிருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அதற்கான சரியான சிகிச்சை எடுத்துக்கொண்டால் சரிசெய்துவிட முடியும்.
குழந்தையின்மைப் பிரச்சனையில் பெண்ணிடம் குறை இருந்தாலும், ஆணிடம் குறை இருந்தாலும் ஒட்டுமொத்தமாகப் பெண்களின் மீதே பழி விழுகின்றன. இதற்கெல்லாம் காரணம், குழந்தையின்மை என்பது குடும்பப் பிரச்னை என்பதைத் தாண்டி சமூகப் பிரச்னையாக மாறி நிற்பதுதான்,
ஆண், பெண் இருவருக்குமே குறைபாடு இருக்க வாய்ப்புண்டு. முதலில், தம்பதியரில் யாருக்குக் குறைபாடு என்பதைக் கண்டறிய வேண்டும். இதைக் கண்டறிய மருத்துவத்தில் இப்போது பல நவீனத் தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. குறைகளைக் கண்டுபிடித்துவிட்டால் எளிதாகச் சரிசெய்துவிடலாம்.
குழந்தையின்மைக்கு ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கைக் குறைபாடும், பெண்களுக்கு உடல்பருமன் பிரச்சனையுமே இதற்கான முக்கியக் காரணங்கள். உடலுழைப்பின்மை, உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்காமல் இருப்பதுதான் உடல் பருமன் ஏற்படக் காரணம். எனவே, சிறுவயதிலிருந்தே போதிய உடற்பயிற்சிகள், நடைப்பயிற்சி செய்து உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அடுத்ததாகப் பெண்களுக்கு பி.சி.ஓ.டி (Polycystic Ovarian Disease) எனப்படும் சினைப்பை நீர்க்கட்டியும் குழந்தையின்மைக்கு ஒரு காரணம். வாழ்வியல் மாற்றங்கள், தவறான உணவுப் பழக்கவழக்கங்களால் சினைப்பை நீர்க்கட்டி ஏற்படுகிறது.
அதிக மனஅழுத்தம், ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். வலியுடன் கூடிய மாதவிடாய், தாமதமாக மாதவிடாய் வருவது போன்றவற்றுக்கு ஆரம்பத்திலேயே சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் 21 வயதுக்கு மேல், அதிகபட்சம் 30, 35 வயதுக்குள் திருமணம் செய்துவிட வேண்டும். தைராய்டு பிரச்சனை இருந்தாலும் உடல் பருமன் அதிகரிக்கும். எனவே தைராய்டு பிரச்சனைக்கான சிகிச்சைகளை உடனடியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
கருத்தரித்தலில் பிரச்சனை இருந்தால், மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொண்டால் சரிசெய்துவிடலாம். இது சரிசெய்யக்கூடிய ஒரு பிரச்சனைதான்.
ஆண்களுக்கு எதனால் இந்தக் குறைபாடு ஏற்படுகிறது… தவிர்ப்பது எப்படி?
“மனஅழுத்தம், புகைப்பிடித்தல், மது அருந்துதல், உடல்சூடு மற்றும் மரபணுரீதியான பிரச்சனைகள் ஆகியவையே ஆண்மைக்குறைபாட்டுக்குக் காரணங்கள். இவை தவிர, சிறுவயதிலிருந்தே இரண்டு விதைகளும் போதிய வளர்ச்சியில்லாமல் இருப்பது, விந்தணுக்கள் வரும் குழாய்களில் ஏற்படும் அடைப்பு போன்றவையும் காரணங்களாக இருக்கின்றன.
அதிக உடற்பயிற்சி செய்பவர்களுக்கும் இதுபோன்ற பாதிப்புகள் இருக்கும். உறவினர்களுக்குள் திருமணம் செய்துகொள்வதும் குழந்தையின்மைக்கு ஒரு காரணமாக இருக்கிறது. சில ஆண்களுக்கு விந்தணுக்களில் போதிய ஆற்றலில்லாமல் இருக்கும். குழந்தையின்மைப் பிரச்சனை எந்தக் காரணத்தால் ஏற்பட்டிருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அதற்கான சரியான சிகிச்சை எடுத்துக்கொண்டால் சரிசெய்துவிட முடியும்.