கோடை விடுமுறையை குழந்தைகள் சோர்வில்லாமல் கழிக்க வழிமுறைகள்
பல விஷயங்களைக் குழந்தைகள் மட்டுமல்ல, பெற்றோருமே தெரிந்துவைத்திருப்பது இல்லை. அதனால், இந்த கோடை விடுமுறையில் குழந்தைகளோடு சேர்ந்து கற்றுக்கொள்ளவும் முயற்சி செய்யலாம்.
நம்மைச் சுற்றியுள்ள பல விஷயங்களைக் குழந்தைகள் மட்டுமல்ல, பெற்றோருமே தெரிந்துவைத்திருப்பது இல்லை. அதனால், இந்த கோடை விடுமுறையில் குழந்தைகளோடு சேர்ந்து கற்றுக்கொள்ளவும் முயற்சி செய்யலாம். அதற்கான சில யோசனைகளே இவை.
* பள்ளி நாள்களில் நூலகத்திற்குச் செல்லும் பழக்கம் கொண்ட குழந்தைகளை, வீட்டுக்குள்ளே சிறு நூலகம் அமைக்க வைக்க ஏற்பாடு செய்து தரலாம். அருகிலுள்ள புத்தகக் கடைக்கு அழைத்துச்சென்று குழந்தைகளுக்குப் பிடித்த நூல்களை வாங்கிச் செய்யவும். வீட்டின் ஒரு பகுதியை ஒதுக்கி, முடிந்தால் அலமாரிகள் வாங்கித் தரவும் அல்லது சின்ன மரப்பலகைத் துண்டுகளைக் கொண்டு அலமாரிகளை உருவாக்கக் கற்றுத்தரலாம். அதன்பின், புத்தகங்களைத் தலைப்பு வாரியாகப் பிரித்து அடுக்கச் செய்யவும். இது பள்ளி மற்றும் பொது நூலகத்தில் எவ்வாறு புத்தகங்களை அடுக்குகிறார் என்பதைக் குழந்தைகள் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு உதவும்.
* டைரி எழுதுவது என்பது நல்ல பழக்கம் என்று சொல்லிக்கொடுத்திருப்போம். ஆனால், எப்படி எழுதுவது, என்னவெல்லாம் எழுதுவது என்று விரிவாகக் கூறியிருக்க மாட்டோம். இந்த விடுமுறையில் புதிய டைரியை வாங்கித் தந்து, அன்றைய தேதியில் நடந்தவற்றை மட்டுமல்லாமல், நண்பர்களோடு ஏற்பட்ட சண்டை, யார் மீது தவறு, ஆசிரியரிடம் கிடைத்த பாராட்டு, திட்டு உள்ளிட்டவற்றை எழுதப் பழக்கலாம்.
* வீட்டின் மையமான ஓரிடத்தில் பெரிய சார்ட்டை ஒட்டவும். அதில் தினமும் குறிப்பிட்ட அளவு நேரம் ஒதுக்கி குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து ஓவியம் வரையுங்கள். முதல் நாளில் மேகம் என நினைத்துத் தொடங்கிய ஓவியம், அடுத்த நாள் கட்டடமாக மாறும். அதற்கு அடுத்த நாள் மலை மீதுள்ள கட்டடமாக மாறும். இப்படி உருமாறும் ஓவியம் உங்கள் குழந்தைக்கு விரிவடைந்த கற்பனை ஆற்றலை வழங்கும்.
இவை மட்டுமல்லாது, சிறுவருக்கான சினிமாக்களைப் பார்த்தல், கதைப் புத்தகங்கள் வாசித்தல், கதை எழுதுதல், புதிய விளையாட்டுகளைக் கற்றுக்கொள்தல் உள்ளிட்ட பலவற்றிலும் குழந்தைகளை ஈடுபடச் செய்வதன் மூலம் சோர்வில்லாமல் கோடை விடுமுறையை செலவழிப்பர்.