இதயத்தை பாதுகாக்கும் கார்டியோ பயிற்சிகள்
இதயத்தைச் சீராக இயங்க வைக்க, பாதுகாக்க சில கார்டியோ பயிற்சிகள் உள்ளன. அந்த பயிற்சிகளை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
மனித உறுப்புகளில் மிகவும் முக்கியமானது இதயம். 24 மணி நேரமும் ஓய்வு, உறக்கம் இல்லாமல் இயங்கும் உறுப்பு. ஆனால் இதயத்தின் ஆரோக்கியம் பற்றி நாம் கவலைப்படுவதே இல்லை. இதயத்தைச் சீராக இயங்க வைக்க, பாதுகாக்க சில கார்டியோ பயிற்சிகள் உள்ளன.
ஜம்ப்பிங் அண்ட் ரன்னிங் (Jumping & Running)
தரையில் கயிற்றால் ஆன ஏணியை விரித்து அல்லது தரையில் ஏணி போல் வரைந்து, கட்டத்துக்குள் நேராக நிற்க வேண்டும். இடைவெளிகளுக்குள் கால்களின் முட்டிகளை நன்கு உயர்த்தி நேராக குதித்து ஓட வேண்டும். இதேபோல், தொடர்ந்து பத்து நிமிடங்கள் ஓட வேண்டும்.
ஜம்ப்பிங் ஜாக் (Jumping Jack)
தரையில் கயிற்று ஏணியை விரித்து, அதன்மீது நேராக நிற்க வேண்டும். பிறகு அந்த ஏணிகளின் இடைவெளியில் நேராக குதிக்க வேண்டும். இரண்டு கால்களும் கட்டத்துக்கு உள்ளே இருக்க வேண்டும். இப்போது குதித்தபடி கால்களைக் கட்டத்துக்கு வெளியே வைக்க வேண்டும். இப்படி மாற்றி மாற்றி குதித்து முன்னேற வேண்டும். இதேபோல் 15 முறை செய்ய வேண்டும்.
ஹாபிள் (Hobble)
கட்டத்துக்குள், ஒரு காலை உயர்த்தியடியே குதித்துச் செல்ல வேண்டும். இரண்டு கால்களுக்கும் தலா 15 முறை செய்ய வேண்டும்.
சைடு ரன் (Side Run)
கயிற்று ஏணியின் மீது பக்கவாட்டில் செல்லும்படி நேராக நிற்க வேண்டும். பிறகு, பக்கவாட்டில் கட்டங்களுக்கு இடையே தாவியபடி இடமிருந்து வலமாக ஓட வேண்டும். இதேபோல், வலமிருந்து இடமாக ஓட வேண்டும். இதேபோல் 15 முறை ஓட வேண்டும்.
பயன்கள்
இதய அடைப்பு ஏற்படாமல் தடுக்கும். புதிய ரத்த நுண் குழாய்கள் (Blood capillaries) உருவாகும். சுவாசம் சீராகும். ஆற்றலை அதிகரிக்கும். மூளை மற்றும் முதுகுத்தண்டுவட இணைப்பைப் பலப்படுத்தும்.