வெயில் காலத்தில் குழந்தைகளின் வயிற்றுக்கு இதமான உணவு
வெயிலின் தாக்கம் குழந்தைகளின் உடலுக்கு பலவீனத்தை ஏற்படுத்தும். அதில் இருந்து தற்காத்துக்கொள்ள வயிற்றுக்கு இதமான, சத்தான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து கொடுக்க வேண்டும்.
வெயிலின் தாக்கம் குழந்தைகளின் உடலுக்கு பலவீனத்தை ஏற்படுத்தும். அதில் இருந்து தற்காத்துக்கொள்ள வயிற்றுக்கு இதமான, சத்தான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து கொடுக்க வேண்டும்.
வெறுமனே தயிர்சாதமாக குழந்தைகளுக்கு கொடுக்காமல் அதில் மாதுளை, உலர் திராட்சை, முந்திரி, பாதாம் பருப்புகள், காய்கறிகள், பழங்களை கலந்து கொடுக்கலாம். அதனை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அது வயிற்றுக்கு இதமளிக்கும். சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட்ட திருப்தியும் கிடைக்கும். கீரை சாதமும் குளிர்ச்சி தரக்கூடியது. அதனுடன் நெய் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
அது நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தை சீராக பராமரிக்கவும் உதவும். கோடைகாலத்தில் வழக்கத்தைவிட அதிகமாக காய்கறிகள், பழங்களை குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்க வேண்டும். பற்களால் கடித்து சாப்பிடுவதுதான் நல்லது என்றாலும் அவர்கள் அப்படி சாப்பிட அடம்பிடிக்கும் பட்சத்தில் கூழாகவோ, ஜூஸாகவோ தயாரித்து கொடுக்கலாம். காய்கறிகள், பழங்கள் இரண்டையும் ஒன்றாக கலந்தும் ஜூஸ் தயாரிக்கலாம்.
சூப் வகைகளும் குழந்தைகள் உடல் ஆரோக்கியத்திற்கு பலம் சேர்க்கும். கோழி இறைச்சியை சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி, அதனுடன் காய்கறி துண்டுகளை சேர்த்து சூப்பாக தயாரித்து கொடுக்கலாம். ஐஸ்கிரீமை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அதனை வீட்டிலேயே சிறப்பாக தயாரித்து அளிக்கலாம். ஐஸ்கிரீமுடன் பழங்கள் கலந்தும் கொடுக்கலாம். பழங்கள், காய்கறிகளை சாலட்டு களாகவும் சுவைக்க செய்யலாம்.