பெண்களே இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீங்க
பெண்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் சில அறிகுறிகள் பின்னாட்களில் அபாயமான நோய்களை உண்டாக காரணியாக இருக்கலாம் என்பதை அவர்கள் அறிவதில்லை….
நமது வீட்டில் தந்தை, குழந்தைகள், பெரியவர்கள் என யாரிடம் சின்ன உடல்நல சார்ந்த எதிர்மறை அறிகுறி தென்பட்டாலும் உடனே பதறி அடித்துக்கொண்டு மருத்துவம் செய்பவர்கள் பெண்கள் தான். ஆனால், அவர்களுக்கு உடலில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அதை பற்றி கண்டு கொள்வதில்லை. பெண்கள் இப்படி சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் அறிகுறிகள் ஏராளம் இருக்கின்றன. அவற்றில் சில பின்னாட்களில் அபாயமான நோய்களை உண்டாக காரணியாக இருக்கலாம் என்பதை அவர்கள் அறிவதில்லை….
* சில சமயங்களில் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அளவுக்கு அதிகமாக இரத்தப்போக்கு வெளிப்படும். அதே போல மாதவிடாய் நிற்கும் காலத்திலும் இவ்வாறு நடக்கலாம். இது போல இன்றி, அவ்வப்போது அதிகளவில் இரத்தப்போக்கு வெளிப்பட்டால் அது கட்டி, 35 வயதுக்கு மேல் புற்றுநோயாக கூட மாறலாம். உடலுறவுக்கு பிறகு இரத்தப்போக்கு ஏற்படுவது ஏதேனும் இன்பெக்ஷன் காரணமாக கூட இருக்கலாம்.
* மிக வெண்மையாக அல்லது வெள்ளை நிறத்தில் பால் வடிதல் குழந்தை பெற்ற பிறகு இயல்பு. ஆனால், ஒரு மார்பில் மட்டும் பிரவுன் அல்லது இரத்த நிறத்தில் வடிதல் உண்டாவது மிகவும் அபாயமான அறிகுறி. இந்த நிலையை ஆங்கிலத்தில் “Intraductal Papillomas” என்று கூறுகின்றனர். இதை அறுவை சிகிச்சை மூலமாக தான் சரி செய்ய வேண்டும்.
* பெண்கள் தலைவலிக்கு எல்லாம் மருத்துவரிடம் செல்ல மாட்டார்கள். அவர்களே மருந்து வாங்கி சாப்பிட்டுவிட்டு சென்றுவிடுவார்கள். ஆனால், தொடர்ந்து பெண்கள் மத்தியில் உண்டாகும் கடுமையான தலைவலி நரம்பு மண்டலத்தில் உண்டாகியிருக்கும் இன்பெக்ஷனின் அறிகுறியாக இருக்கலாம். அல்லது மூளையில் இரத்தம் கசிவதன் அறிகுறியாக இருக்கலாம்.
* மலம் கழிக்கும் போது இரத்தம் வெளிவருவதை கண்டால் சாதாரணமாக இருக்க வேண்டாம். இது இரைப்பை குடலில் இரத்தம் கசிதலின் அறிகுறியாக கூட இருக்கலாம். இதே நேரத்தில் மூச்சு திணறல், உடல் சோர்வு போன்றவற்றை உணர்ந்தால் உடனே மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.
* எல்லா மார்பு வலியும் மாரடைப்பு அல்ல. சில சமயங்களில் குமட்டல், அதிக வியர்வை, மூச்சு விட சிரமப்படுவது, கழுத்து வலி உண்டாவது போன்றவற்றுடன் சேர்ந்து மார்பு வலி உண்டானால் அது மாரடைப்பு உண்டாவதன் அறிகுறியாக இருக்கலாம்.
* எந்தவித பயிற்சி அல்லது டயட் இல்லாமல், உடல் எடை திடீரென குறைவது சிலவகை புற்றுநோய்களின் அறிகுறிகளாக இருக்கலாம். அல்லது வேறு சில அபாயமான உடல்நல குறைபாடுகளாக இருக்கலாம்.
* உடல் இடது அல்லது வலது பக்கங்களில் (மார்பு, வயிறு, இடுப்பு) கூர்மையான வலி உண்டாவது வலி அல்லது பிடிப்பாக இருக்கலாம். ஆனால், கூர்மையாக குத்துவது போன்ற வலி உண்டாவது குடல்வாலழற்சியின் அறிகுறியாக இருக்கலாம்.
* மாதவிடாய் நாட்களில் இதுபோன்ற வலி மிகவும் சாதாரணம். ஆனால், கருப்பையில் கட்டி உண்டாகியிருந்தால் கூட இந்த வலி அதிகரிக்கும். உடலின் உள்ளேயே இரத்தம் கசிதல் உண்டாகும். இதனால் காய்ச்சல், உடல் சோர்வு போன்றவை அறிகுறிகளாக வெளிப்படலாம்.
* சிலருக்கு பெண்ணுறுப்பு பகுதியில் அவ்வப்போது வெள்ளைப் படிதல் உண்டாகும், அது துர்நாற்றத்தை வெளிப்படுத்தும். இது சாதாரணமாக பெண்கள் மத்தியில் வெளிப்படும் ஒன்று தான். ஒருவேளை இது மஞ்சள் – பச்சை நிறத்தில், பெண்ணுறுப்பு பகுதியில் எரிச்சல் / வலியுடன் வெளிப்படுகிறது எனில் அது இன்பெக்ஷன் அல்லது பால்வினை நோய் . கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் அறிகுறியாக கூட இருக்கலாம்.