கோடையில் ஆரோக்கியம் தரும் ஆயுர்வேதம்
கோடையில் ஆரோக்கியம் காக்க உப்பு, எரிச்சல், புளிப்பு ஆகிய சுவை அடங்கிய உணவுகளை தவிர்க்க வேண்டும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
உஷ்ணம், வியர்வை சகிக்க முடியவில்லை. இப்போதே வெயிலின் தாக்கம் இப்படி அதிகமாக இருக்குமானால் மே மாதம் எவ்வாறு இருக்கும்…? யோசித்து பார்க்கவே முடியவில்லை…
முதலில் கோடையில் ஆரோக்கியம் தரும் ஆயுர்வேதம் என்ற தலைப்பிற்கு செல்லும் முன் பருவகாலங்கள் பற்றியும், எதனால் இவ்வளவு அதிகமான வெப்பம் உள்ளது என்பது பற்றியும் சிந்தனை செய்ய வேண்டும்.
ஒரு வருடம் என்பது ஆறு பருவ காலங்களை கொண்டது. அவை கார்காலம், இலையுதிர் காலம், முன்பனி காலம், பின்பனி காலம், இளவேனில் காலம் மற்றும் முதுவேனில் காலம் ஆகியவை ஆகும். இதில் இளவேனில் காலமானது தமிழ் மாதங்களாகிய சித்திரை மற்றும் வைகாசி மாதங்களை உள்ளடக்கியது. முதுவேனில் காலமானது ஆனி, ஆடி மாதங்களை கொண்டது.
தற்போது பருவ நிலை மாற்றத்தின் காரணமாக இளவேனில் காலத்தில் நாம் கடுமையான வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வருகிறோம். இதற்கு காரணம் நாம் தான். அதாவது மனித குலம் தனது சுயநலத்திற்கு இயற்கையை அழிப்பதும், ஆடம்பரத்திற்காக குளிரூட்டிகள் மற்றும் குளிர்சாதன பெட்டிகளை அதிகம் பயன்படுத்துவதும் இதற்கு முக்கிய காரணங்களாக தெரிவிக்கப்படுகின்றன.
உதாரணமாக, தேசிய வனக்கொள்கை படி மாநிலம் ஒன்றின் புவி பரப்பில் 33.3 விழுக்காடு வனங்கள் இருக்க வேண்டும். ஆனால் நமது மாநிலத்தின் புவி பரப்பில் 17.59 விழுக்காடு மட்டுமே வனப்பகுதி இருக்கிறது.
மனிதன் வாழ வேண்டுமானால் மரங்கள் தேவை. ஆகவே, இயற்கையின் கொடையாகிய வனங் களை அழிப்பதால் பருவகாலங்கள் மாற்றமடைகின்றன. சில காலநிலைகள் மிகவும் கடுமையானதாக மாறிவிடுகின்றன. இயற்கை பேரழிவுகளையும் நாம் தொடர்ச்சியாக அனுபவித்து வருகிறோம்.
இவ்வாறு மனித குலம் தனது சுயநலத்திற்காக செய்யும் செயல்களினால் பருவ நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு கோடை காலத்தில் கடும் வெப்பத்தை நாம் அனுபவிக்கும் சூழ்நிலையில் உள்ளோம். இந்த கடும் வெப்பத்தை ஆயுர்வேத முறைப்படி எவ்வாறு எதிர்கொள்ளலாம்? என்பதை காண்போம்.
ஆயுர்வேத நூல்களில் கோடை காலம் என்பது “கிரீஷ்ம ருது” என்று அழைக்கப்படுகிறது. மனித உடல் 60 விழுக்காடு நீரினால் ஆனது. கோடை காலத்தில் வியர்வை அதிகமாவதால், உடலில் உள்ள அதிகப்படியான நீர் வெளியேறுவதால் உடல் சோர்வடையும் உடலின் நீர் அளவை நிலை நிறுத்த அதிக அளவு தண்ணீர், பழரசம், எலுமிச்சை ஜூஸ், மோர் போன்றவற்றை அடிக்கடி பருக வேண்டும்.
கிரீஷ்ம ருதுவில் கபதோசம் குறைந்து வாத தோசம் அதிகரிக்க தொடங்கும். எனவே உப்பு, எரிச்சல், புளிப்பு ஆகிய சுவை அடங்கிய உணவுகளை தவிர்க்க வேண்டும். கடுமையான உடற்பயிற்சி, மற்றும் அதிக நேரம் சூரிய ஒளியில் செலவிடுவதை தவிர்க்க வேண்டும்.
இனிப்பு மற்றும் எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு வகைகள், அதிக கொழுப்பு சத்துள்ள உணவுகள், குளிர்ச்சியான உணவுகளை உண்ண வேண்டும். பருத்தியால் ஆன ஆடைகள் மற்றும் வெண்ணிற ஆடைகளை உடுத்த வேண்டும். பாரம்பரிய உணவுகளாகிய பழைய கஞ்சி, கூழ் ஆகியவை சிறந்தது.
கோடை காலத்தில் விளையும் அனைத்து பழ வகைகளையும் தவிர்க்காமல் உண்ண வேண்டும். தலையில் எண்ணெய் தேய்த்து, நீர் நிலைகளில் மூழ்கி குளிப்பது சிறந்தது. சுடு நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.
மண்பானையில் வைக்கப்பட்ட குளிர்ந்த நீர் அதிகமாக பருக வேண்டும். இரவு 8 மணி நேர தூக்கம் கண்டிப்பாக இருத்தல் வேண்டும். வாய்ப்பு இருந்தால் பகலில் சிறு தூக்கமும் இக்கால நிலைக்கு உகந்தது தான். அதிக உடலுறவை தவிர்த்தல் வேண்டும். மேற்கண்ட ஆயுர்வேத விதிப்படி வாழ முயற்சிப்போம். கோடையை நலமுடன் எதிர்கொள்வோம்.
கடும் கோடை வெயிலுக்கு நாம் தான் காரணம். ஆகவே இயற்கையை நேசிப்போம். இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கையை வாழ்வோம். ஆரோக்கியமான சந்ததியை உருவாக்குவோம்.
டாக்டர் கிளாரன்ஸ் டேவி, முதல்வர், அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி, நாகர்கோவில்