தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

மகிழ்ச்சியை மறந்த மாணவ சமுதாயம்

அந்தந்த பருவத்திற்கு உண்டான மகிழ்ச்சியை அனுபவிக்கவும் அதே நேரத்தில் பாதை தவறாமல் வழி காட்டவும், பள்ளியை விட்டு வெளியில் போனாலும் இந்த உலகை எதிர்கொள்ளும் தைரியம், நம்பிக்கை, துணிச்சலை கல்வி தர வேண்டும்.

ஓடி விளையாடு பாப்பா, என்றார் பாரதியார். இன்று விளையாட்டு, மகிழ்ச்சி, ஓய்வு நேரம் என்பதை மறந்து பள்ளி விடுமுறை நாளில் ஆனந்தமாக உறவினர் வீடுகளுக்குச் செல்லுதல், அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா என்ற உறவுகளை எல்லாம் மறந்து பள்ளி, மதிப்பெண், அது இல்லை என்றால் தனிப் பயிற்சி பள்ளி என்று மாறிப் போயிருக்கிறது.

“ஒரு மாணவி கூறும் போது வார விடுமுறை என்பது நாங்கள் சென்ட்ரல் ஜெயிலில் இருந்து சப்-ஜெயிலுக்கு மாறும் நாள். மே மாத விடுமுறை என்பது பரோல்” என்றாள். சிரிப்பு வந்தாலும் அதுதானே உண்மை. காலை முதல் இரவு வரை படிப்பு என்றுதான் இருக்கிறது ஒரு பள்ளிக் குழந்தையின் வாழ்க்கை. மனஅழுத்தத்தில் சிக்கி மனநிலை தவறிப் போகிறார்கள். இல்லை எனில் தற்கொலை. இன்று நிறைய மாணவ தற்கொலைகள் நடக்கிறது. முன்பெல்லாம் தேர்வு முடிவுகள் வரும் அன்று சில தற்கொலைகள் நடக்கும்.

ஆனால் இன்று….? பெற்றோர்களின் அதீத எதிர்பார்ப்பு, வியாபாரமாகிப் போன கல்வி முறை, அதிகமாக பள்ளி கட்டணம் வாங்கும் பள்ளிதான் நல்ல பள்ளி, அதிக வீட்டுப் பாடம் தரவேண்டும்.அடிக்கடி தேர்வுகள் வைக்க வேண்டும்.ஞாயிறு அன்றும் பள்ளி, சிறப்பு வகுப்புகள் நடக்க வேண்டும் என்று பெற்றோர்களின் எதிர்பார்ப்பு.மழலையர் வகுப்பில் சேர்க்கும் போதே தன் குழந்தை டாக்டர், என்ஜினீயர், வெளிநாடு போய் சம்பாதிக்க வேண்டும், என் மச்சினன் பையன் எல்.கே.ஜி யில் எல்லாவற்றிலும் முதல் மதிப்பெண். நூற்றுக்கு நூறு. இவன் தொண்ணூறுதான். எனக்கு ரொம்ப அவமானமா இருக்கு என்று புலம்பும் தாயார்.

குழந்தைகளை மதிப்பெண் வாங்கும் இயந்திரங்களாக மாற்றி விடுகிறார்கள். கல்வி வியாபாரமாகிப் போன இன்றைய நாளில், பெற்றோர்களுக்கு ஒரு பயம் இருப்பது நியாயம்தான்.தன் குழந்தைகளை நல்லபடியாக செட்டில் ஆகி,நல்ல நிலையில் வைக்க வேண்டும் என்ற பரபரப்பு. கோடிக் கணக்கில் பணம் கொட்டிக் கொடுக்க முடியாத நிலை. நீ படிக்கலைன்னா, தெருவுல பிச்சை எடுக்க வேண்டும் என்று சொல்லிச் சொல்லி குழந்தைகள் மனதிலும் ஒரு பயத்தை ஏற்படுத்தி விடுகிறார்கள்.

பெற்றோர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தால்தான் தங்கள் பள்ளிக்கு வருமானம் என்று அவர்களை கட்டிப் போட்டு இடைவெளி இல்லாமல், எந்த ஒரு பொழுது போக்கும் இல்லாமல் புத்தகப்புழுவாக மாற்றி விடுகிறார்கள். கல்வி வியாபார நிறுவனங்கள் . விளையாட்டு, உறவினர்கள்,நண்பர்களுடன் பேச்சு, என்று இல்லாமல் தங்களுக்குள் மூழ்கி, புத்தகம் தவிர வேறு எதையும் தெரியாத குழந்தைகள்,பொதுத் தேர்வில் மதிப்பெண் குறைந்து போனால் நம்பிக்கை இழந்து, உலகை எதிர்கொள்ள முடியாமல் மனமொடிந்து தற்கொலையை நாடுகிறார்கள் இல்லை என்றால் திட்டும் பெற்றோர்களை எதிர்கொள்ள முடியாமல் ஓடிப் போகிறார்கள்.

இன்றைய கல்வி, குழந்தைகளை, தன்னம்பிக்கை இல்லாதவர்களாக, மனப்பாட இயந்திரங்களாகத்தான் மாற்றுகிறது. பள்ளியில் படிக்கும் கால்குலஸ், முக்கோணவியல், தொகையிடுதல், நடைமுறை வாழ்வில் எந்த இடத்திலும் உதவுவது கிடையாது. பள்ளியில் அனைவரிடமும் கலந்து பழகுதல்,அவன் கற்கும் வாழ்வியல் விஷயங்கள், பண்புகள், ஒழுக்க நெறிகள்தான் அவனை நல்ல பாதையில் வழி நடத்துகிறது.

இப்போது இன்னொரு மன நிலை பரவுகிறது அரசுப் பள்ளிகளில் அந்த மாவட்டம் பொதுத் தேர்வில் அதிக சதவீதம் பெற்று முதலிடத்தில் இருக்கிறது, நம் மாவட்டம் முதலிடம் பெற வேண்டும் என்று ஒரு மனப்பான்மை. அந்தப் பள்ளியில் காலை எட்டு மணி முதல் ஆறு மணி வரை வகுப்புகள். நாமும் அப்படி நடத்த வேண்டும் என்ற எண்ணம். இலவச பஸ் பாஸ் உள்ள சில குழந்தைகள் ஆறு மணிக்கே பஸ் பிடித்தால்தான் எட்டுமணிக்குள் வர முடியும். ஆறு மணியை விட்டால் எட்டு மணிக்கு அடுத்த பேருந்து. பள்ளிக்கு தாமதமாக வந்தால் தலைமை ஆசிரியர் வாசலில் நின்று கண்டிப்பார்.

பெற்றோர்கள் அடுத்த நாள் பள்ளிக்கு வர வேண்டும். மாலை பள்ளி விட்டு வீட்டுக்குப் போக எட்டு மணி ஆகி விடும். அதன் பின்னர் வீட்டுப் பாடம் செய்து, அலகுத் தேர்வுக்குப் படித்து, பத்து மணிக்குப் படுத்தால்தான் அடுத்த நாள் ஐந்து மணிக்கு எழுந்து பள்ளிக்கு வார முடியும்.அலகுத் தேர்வு இன்னொரு கொடுமை அவர்களுக்கு. ஒரு தேர்வு என்று நடந்தால் அது முடிந்து அடுத்த நாள் விடைத் தாள்களைக் கொடுத்து, தவறு செய்த பகுதியில் திருப்புதல் பயிற்சி தந்து, அவர்களை செம்மைப்படுத்தினால்தான் அடுத்த தேர்வில் அதே தவறைச் செய்ய மாட்டார்கள். ஆனால் முதல் நாள் முடிந்தால் அடுத்த நாளே அடுத்த அலகுத் தேர்வு ஆரம்பித்து விடும்.

அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் எல்லோரும் கீழ் நடுத்தர மக்கள். ஆரோக்கியமான உணவு, சூழ்நிலை இல்லை. வறுமை, புத்தி கூர்மை கம்மியாக உள்ள குழந்தைகள்தான் அதிகம் இருப்பார்கள்.தங்கள் ஏழ்மை நிலை குறித்து ஒரு தாழ்வு மனநிலை, ஏக்கம், ஆசை அதன் காரணமாக ஏற்பட்ட கோபம், பொறாமை, தீய மனம் என்று எல்லா கருப்பு உணர்வுகளுடன் இருப்பார்கள்.

அவர்களை மெதுவாகத்தான் வழிப்படுத்த முடியும். அருகில் உள்ள ஒரு கிராமத்தில் அட்டை தொழிற்சாலை இருக்கிறது. மாலை பள்ளி விட்டுப் போனதும் அங்கு வேலைக்குப் போகும் மாணவர்கள் அடுத்த நாள் குளிக்காமல், அழுக்கு சட்டையுடன் பள்ளிக்கு வருவார்கள்.அவனுக்கு நான் ஆங்கிலம், கணிதம் எப்படி மண்டையில் ஏற்ற முடியும் என்று ஒரு ஆசிரியர் கேட்டார். வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கும் குழந்தைகளுக்கு ஒரு நேரம் வயிறு நிரம்புவது தான் முக்கியம்.

படிப்பு முக்கியம். கல்வி மட்டுமே அவனின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும். ஆனால் அது அவனை பயப்படுத்தாத விதத்தில் இருக்க வேண்டும். அறிவைப் பெருக்கிக் கொள்ளத்தான் கல்வி. வெறும் வெள்ளைத் தாளில் அவன் கக்கியதைக் கொண்டு அறிவை எடைபோட முடியாது. பத்தாம் வகுப்பு பாஸ் செய்யாதவர் பெரும் தொழிலதிபராக இருப்பதையும் எம்.பி.ஏ. படித்தவர் அவரிடம் வேலை பார்ப்பதையும் நேரடி வாழ்வில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

அந்தந்த பருவத்திற்கு உண்டான மகிழ்ச்சியை அனுபவிக்கவும் அதே நேரத்தில் பாதை தவறாமல் வழி காட்டவும், பள்ளியை விட்டு வெளியில் போனாலும் இந்த உலகை எதிர்கொள்ளும் தைரியம், நம்பிக்கை, துணிச்சலை கல்வி தர வேண்டும். வெறும் தேர்ச்சி சதவீதம் காட்டவும், தங்கள் பள்ளிதான் சிறந்தது என்று காட்டவும் கல்வி நிறுவனங்கள் இல்லை. மாணவர்களுக்காக, சிறந்த எதிர்கால சமுதாயத்தை உருவாக்கவும் தான் கல்வி நிறுவனங்கள். குழவி, கூட்டுக்குள் இருந்து வளைந்து, நெளிந்து முட்டி,மோதி வெளியில் வரும்போது அது உற்சாகமாகப் பறக்கிறது. மாணவனும் அப்படித்தான். பறக்கும் வித்தையை கல்வி கற்றுத் தரவேண்டும். அந்தப் பருவத்தில் அவன் மகிழ்ச்சியைத் தொலைத்து விடாமலிருந்தால் வாழ்நாள் முழுவதும் அவனுக்கு வெற்றிதான்.Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker