உடற்பயிற்சிக்கு நிகராக கலோரிகளை குறைக்கும் ‘ஹாட் பாத்’
சூடான தண்ணீரில் பாத் டப்பில் குளிப்பது உடற்பயிற்சிக்கு நிகராக நம் கலோரிகளை குறைக்கும்.
உடற்பயிற்சி செய்தால்தான் கலோரிகளை குறைக்க முடியும் என்று பலரும் காலை, மாலை வேளைகளில் கடினமான உடற்பயிற்சியை மேற்கொள்வோம். ஆனால், உடலுக்கு எந்தவித வேலையும் தராமல் ‘ஹாட் பாத்’ என்னும் சூடான தண்ணீரில் குளிப்பது மட்டுமே உடற்பயிற்சிக்கு நிகராக நம் கலோரிகளை குறைக்கும்.
இதுகுறித்து சமீபத்தில் ஆராய்ச்சி செய்யப்பட்டது. அதில், 14 ஆண்களை 2 வகையான சோதனைகளுக்கு உட்படுத்தியுள்ளார்கள். முதலாவதாக, அவர்களை 1 மணி நேரம் சைக்கிள் ஓட்டச் சொன்னார்கள். இரண்டாவதாக, 104 டிகிரி சுடுதண்ணீரில் 1 மணிநேரம் குளிக்க சொன்னார்கள்.
இதன் முடிவில், சுடுதண்ணீரில் எந்த வித உடல் உழைப்புமின்றி 1 மணிநேரம் படுத்திருப்பது, அரை மணி நேரம் சைக்கிள் ஓட்டியதற்கு நிகரான 130 கலோரிகளை எரிக்கிறது என்று தெரியவந்தது.
இவ்வாறு குளிப்பதால், ரத்தத்தின் சர்க்கரை அளவு 10 சதவீதம் குறைகிறது. உடலில் ஏற்பட்ட வீக்கத்தை குறைக்கிறது. இருதய நோய்கள் வராமல் தடுக்கிறது.
இப்படி சூடான தண்ணீரில் குளிப்பது ஒரு வகையான மருத்துவமாக ஃபின்லான்டில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எனவே, டப்பில் சூடான தண்ணீரில் குளிப்பது, உங்கள் உடல் நலத்தையும், மன நலத்தையும் நலமாக்கும்.