மாலை நேர ஸ்நாக்ஸ் சிக்கன் சமோசா
குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று எளிய முறையில் சிக்கன் சமோசா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மைதா மாவு – 1 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
வெங்காயம் – 1
எலும்பில்லாத சிக்கன் – 300 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை :
சிக்கனை சுத்தம் செய்து சிறிது வேக வைத்து உதிர்த்து கொள்ளவும்.
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு, எண்ணெய் மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு கெட்டியாகவும், மென்மையாகவும் சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து மூடி வைக்கவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போக வதக்கியவுடன் உதிர்த்து வைத்த சிக்கன், சீரகப் பொடி, கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து, சிக்கன் வேகும் வரை நன்கு வதக்க வேண்டும்.
சிக்கன் நன்றாக வெந்தவுடன் அதில் எலுமிச்சை சாறு, கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
பின்பு பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு உருண்டையை எடுத்து, வட்டமாக தேய்த்து, அதனை பாதியாக வெட்டி, ஒரு பாதியை கூம்பு போல் செய்து, அதனுள் ஒரு டீஸ்பூன் காளான் கலவையை வைத்து மூடி, சமோசா போல் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அனைத்தையும் செய்து வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், செய்து வைத்துள்ள சமோசாவை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
* இப்போது சூப்பரான மாலை நேர ஸ்நாக்ஸ் சிக்கன் சமோசா ரெடி!!