அழகு..அழகு..புதியவை

எளிய முறையில் பாத அழகை பராமரிப்பது எப்படி

முகத்தை பராமரிக்க செலவிடும் நேரத்தில், சில நிமிடங்கள் கூட, பாதங்களை கவனிக்க நாம் செலவு செய்வதில்லை. முகத்தின் அழகு எவ்வளவு முக்கியமோ., அதே போல் நம் பாதத்தின் அழகும் முக்கியம்.

பாதத்தை அடிக்கடி உயர்த்துவது, நின்று கொண்டிருப்பது, கால்களை நீட்டுவது, நடப்பது மற்றும் இதர வகை உடற்பயிற்சிகள் மூலம் உங்கள் பாதத்துக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யலாம். பாதத்துக்கு மசாஜ் செய்தல் மற்றும் மெல்லிய சூட்டில் பாதத்தைக் கழுவுதல் ஆகியவை பாதத்துக்கான ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

பாதங்களை அழுக்காகாமல் பார்த்துக்கொண்டாலே பாதி குறைந்து விடும். வீட்டிற்குள்ளும் காலணிகளை போட்டுக்கொள்ளுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை பழ தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இது கால் வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்கும் மேலும் கிருமிகளை ஒழிக்கும்.

தினமும் இரவில் படுக்கப்போவதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் சூடு தாங்கும் அளவு வெந்நீர், உப்பு, எலுமிச்சைச்சாறு, ஷாம்பு போட்டு பாதங்களை 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊற வைத்து பிறகு பிரஷினால் சுத்தம் செய்யவும். இதை வாரத்திற்கு இரண்டு அல்லது 3 நாட்களுக்குச் செய்யலாம். பின்பு பாதங்களை ஈரம்போக ஒரு மெல்லிய டவலால் துடைத்து நல்லெண்ணெயை லேசாக சூடு செய்து காலில் தடவலாம்.

பாதத்தில் வெடிப்பு உள்ளவர்கள் வீட்டில் மருதாணி இலையை விழுது போல நன்கு அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் வாரந்தோறும் தடவி வந்தால் வெடிப்பு நீங்கும். உருளைக்கிழங்கை காய வைத்து அதனை மாவு போன்று அரைத்து தண்ணீரில் குழைத்து பூசி வர வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி, பாதம் மிளிரும்

பாதங்கள் மிருதுவாக இருக்க வேண்டுமானால் பீர்க்கங்காய் நார் கொண்டு தினமும் குளிக்கும்போது பாதத்தில் நன்றாக 5 நிமிடம் தேய்த்து வந்தால் பாதங்கள் மிருதுவாகி விடும்.

கால் விரல் நகத்தின் அழுக்கு நிறைந்து விட்டால் நல்லெண்ணெயை ஒரு விளக்கில் ஏற்றி வைத்து ஒரு தீக்குச்சியை அந்த நல்லெண்ணெயில் வைத்து அந்த விளக்கின் திரியில் சூடு செய்து அந்த விரல் நகத்தின் ஓரங்களில் தடவவும். 2 அல்லது 3 முறை செய்தபின் அதில் உள்ள அழுக்கு எல்லாம் வந்து விடும். நகத்தின் ஓரங்களில் பின் அல்லது ஊசியை வைத்து சுத்தம் செய்வதைத் தவிர்க்கவும்.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker