புதியவைமருத்துவம்

உடல் நலம் பேண வழி முறைகள்

ஒருவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்றால் அவருடைய உடல்நலம், மனநலம் சமூகநலம் மூன்றும் நன்றாகயிருந்தால் தான் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

நாளை(ஏப்ரல்7-ம் தேதி) உலக சுகாதார தினம்.

உலக சுகாதார நிறுவனம் இந்த ஆண்டு எல்லோருக்கும் ஆரோக்கியம் என்ற குறிக்கோளை கொடுத்து சில வழிமுறைகளை வகுத்துள்ளது. ஆரோக்கியமாக இருப்பது என்பது நோய் இல்லாமல் இருப்பது மட்டும் அல்ல. ஒருவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்றால் அவருடைய உடல்நலம், மனநலம் சமூகநலம் மூன்றும் நன்றாகயிருந்தால் தான் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இன்றைய சூழ்நிலையில் நோய்க் கிருமியினால் வரக்கூடிய வியாதிகளை விட நோய்க்கிருமிகள் இல்லாமல் வரக்கூடிய வியாதிகள் தான் அதிகம். சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, புற்றுநோய் என்று பல்வேறு நோய்களால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இதற்கு முக்கிய காரணம், முறையற்ற உணவுமுறை, உடல் உழைப்பு மற்றும் உடற் பயிற்சி இல்லாமை, உடல் பருமன், அதிக மன உளைச்சல், எதிலும் அவசரம், முறையான உறக்கம் இன்மை இவைகள் எல்லாம் பல்வேறு வியாதிகளுக்கு வித்திடுகின்றன. சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்புக்கு முறையாக சிகிச்சை பெறாவிட்டால் இதயம், சிறுநீரகம், மூளைகள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இவற்றுக்கு நவீன சிகிச்சை முறைகளும், பல்வேறு பரி சோதனைகளும் செய்யும் போது தாங்கள் சேமித்து வைத்த பணத்தை விரயப்படுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. பலர் பணத்தைமட்டும் அல்ல உறவுகளையும் இழந்து முதியோர் இல்லங்களையும், அனாதை இல்லங்களையும் நாட வேண்டியிருக்கிறது.

அதற்காக தான் இந்த ஆண்டு எல்லோருக்கும் ஆரோக்கியம் என்ற குறிக்கோளுடன் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முகாம் களை நடத்தி ஆரோக்கியமான உணவுகளையும், சுற்றுப்புறத்தூய்மையும், சுகாதாரமான குடிநீரையும், நோய்களை உண்டாக்கும் கொசுகளை ஒழிப்பது போன்ற நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று பல்வேறு வழிமுறைகளை வகுத்துள்ளது. கிராமப்புறமக்கள் பசி, ஊட்டச்சத்து குறைபாடினால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறார்கள். இதற்காக கிராமப்புறத்தில் மருத்துவமனை மட்டும் அல்லாது அங்கன் வாடி ஊழியர்களைக் கொண்டு ஊட்டச்சத்துகளைக் கொடுப்பது, முறையாக தடுப்பூசி போடுவதன்மூலம் நோய்களை தடுக்கமுடியும்.

பல்வேறு மருத்துவ முகாம்களை நடத்தி சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, காசநோய், புற்றுநோய் போன்ற நோய்களை கண்டறிந்து அவர்களுக்கு தொடர் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யவேண்டும்.இன்று கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார மையங்கள் இருந்தாலும் மேற்சிகிச்சைக்காக நகர்புறங்களை நாட வேண்டியிருக்கிறது. 1000 இந்தியருக்கு 0.64 சதவீத மருத்துவர்களும், 1.44 சதவீத செவிலியர்கள் தான் இருகிறார்கள். இதற்காக அரசாங்கம் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரியை ஆரம்பிக்க வேண்டும் என்று செயல்பட்டு வருகிறது. இதனால் எல்லோருக்கும் மருத்துவ வசதி கிடைக்கும்.

நவீன சிகிச்சை அளிக்கக்கூடிய கருவிகள் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு இறக்குமதியாகின்றன. மக்களின் நலனுக்காக அதிகமாக இருந்த இறக்குமதி வரியை அரசாங்கம் குறைத்துள்ளது. மேலும் சில வகையான கருவிகளை உள்நாட்டிலேயே தயாரிக்க அனுமதியும் வழங்கியுள்ளன.இதனால் சிகிச்சைக்காகும் செலவு குறைந்து எல்லோரும் பயன் அடைய முடியும்.

எல்லா சிகிச்சையும் இலவசமாக அளிக்க முடியாத சூழ்நிலையில் முதலமைச்சர் காப்பீட்டுத்திட்டம், ஓய்வு ஊதியர், முதியோர் நலத்திட்டங்கள், பிரதமரின் நலத்திட்டம்,பல நலத்திட்ட இன்சூரன்ஸ் கம்பெனிகள் மேல் சிகிச்சைக்கு ஆகும் செலவுகளை பொறுப்பேற்றுக் கொள்கின்றன.இதன் நோக்கம் எல்லோரும் முழுமையாக சிகிச்சை பெறவேண்டும்.ஆரோக்கிய வாழ்வில் வாழ வேண்டும் என்பதே. ஒரு கை ஓசை எழுப்பாது. மக்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து தங்கள் உடல் நலத்தில் அக்கறைக்கொண்டு சமச்சீரான உணவு, உடற் பயிற்சி, ஆரோக்கியமான மனதுடன், நல்ல சிந்தனைகளை வளர்த்தால் எல்லோருக்கும் ஆரோக்கியமான வாழ்வு அமையும்.40 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருடம் தோறும் உடல் முழு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker