ஆரோக்கியம்

சுவாசக் குழாயில் உள்ள தொற்றுக்களைப் போக்கும் சில இயற்கை வழிகள்

மேல் சுவாச மண்டலத்தைச் சேர்ந்தது தான் மூக்கு, தொண்டை, சைனஸ், குரல்வளை போன்றவை. மேல் சுவாசக்குழாய் தொற்றுகளானது எளிதில் தொற்றக்கூடியவை. அதில் சில வகையான மேல் சுவாசக் குழாய் தொற்றுகளாவன சளி, மூக்கடைப்பு, தொண்டைப் புண், அடிநா அழற்சி, சைனஸ் பிரச்சனைகள், லாரன்ஜிடிஸ், எப்பிகுளோடிடிஸ், ட்ரச்சோபிரன்சிடிஸ் மற்றும் ஆண்டிடிஸ் மீடியா.

இதில் பெரும்பாலான மேல் சுவாச மண்டல தொற்றுக்களானது வைரஸ் மூலும் ஏற்படுபவைகளாகும். மேலும் இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவக்கூடியது. இருப்பினும், சில சமயங்களில் தொற்றுக்களானது பாக்டீரியா அல்லது பூஞ்சையாலும் ஏற்படலாம். மேல் சுவாசக் குழாயில் தொற்றுக்கள் ஏற்பட்டிருந்தால், அது குறிப்பிட்ட அறிகுறிகளை வெளிக்காட்டும்.

அதில் மூக்கு ஒழுகல், மூக்கடைப்பு, தும்மல், இருமல், கண்களில் இருந்து நீர் வடிதல், தொண்டை கரகரப்பு, தொண்டைப்புண், தலைவலி, தசை வலி, மூச்சுவிடுவதில் சிரமம், லேசான காய்ச்சல் மற்றும் சோர்வு போன்றவை குறிப்பிடத்தக்கவை. மேல் சுவாசக்குழாய் தொற்றுக்களானது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு இருமல் மற்றும் தும்மல் வழியாக காற்றின் மூலம் தொற்றக்கூடியது. பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம் மற்றும் குறைந்த ஈரப்பதம் கொண்ட பகுதியில் வாழ்வதால், இந்த தொற்றுகள் ஏற்படும் அபாயம் அதிகம் இருக்கும்.



ஆனால் இந்த மேல் சுவாசக்குழாய் தொற்றுகளில் இருந்து விடுபட ஒருசில எளிய இயற்கை வழிகள் உள்ளன. கீழே அந்த எளிய வழிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

ஆவி பிடிப்பது

ஆவி பிடிப்பதன் மூலம் மேல் சுவாச மண்டலத் தொற்றுக்களால் ஏற்படும் மூக்கடைப்பு, மூக்கு ஒழுகல் மற்றும் தொடர்ச்சியான தும்மல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். ஆவி பிடிக்கும் போது அந்த காற்றில் உள்ள ஈரப்பதத்தினால் மூக்கடைப்பு உடனே நீங்கும். மேலும் சுவாசக் குழாயில் ஏற்படும் வறட்சியைத் தடுத்து, எரிச்சலை நீக்க உதவும்.

* ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி நன்கு கொதிக்க வைத்து இறக்கி, அந்நீரில் சில துளிகள் புதினா எண்ணெய் அல்லது யூகலிப்டஸ் எண்ணெய் சேர்த்து, அந்நீரைக் கொண்டு ஆவி பிடியுங்கள். இப்படி ஒரு நாளைக்கு பல முறை ஆவி பிடிக்க நல்ல நிவாரணம் கிடைக்கும்.

* முக்கியமாக சிறிய குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் உயர் இரத்த அழுத்த பிரச்சனை கொண்டவர்கள் இந்த முறையைப் பின்பற்றக்கூடாது.

உப்பு நீர்

மற்றொரு அற்புதமான மேல் சுவாச குழாயில் உள்ள தொற்றுகளில் இருந்து விடுவிக்கும் ஓர் நிவாரணி தான் உப்பு நீர். இது சளியை இளகச் செய்து, எளிதில் வெளியேறச் செய்யும். மேலும் சுவாசப் பாதையில் உள்ள சளி மற்றும் எரிச்சலை நீக்க உதவும்.

* ஒரு கப் நீரில் 1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு கரைய வைக்க வேண்டும். பின் பில்லர் பயன்படுத்தி, மூக்கின் இரண்டு துவாரங்களிலும் ஒரு துளியை விட வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை செய்ய நல்ல தீர்வு கிடைக்கும்.

* இல்லாவிட்டால், 1 கப் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, அந்நீரால் தினமும் 2-3 முறை வாயைக் கொப்பளியுங்கள். இதனால் தொண்டை வலி மற்றும் தொண்டைப் புண் சரியாகும்.



இஞ்சி

அனைவரது வீட்டிலும் இருக்கும் இஞ்சி கூட மேல் சுவாசத் தொற்றுகளில் இருந்து விரைவில் விடுவிக்கும்.

* சிறு துண்டு இஞ்சியை எடுத்து, அதன் மீது உப்பைத் தூவி, வாயில் போன்று மெல்லுங்கள். இப்படி ஒரு நாளைக்கு பல முறை செய்யலாம்.

* இல்லாவிட்டால், 1 துண்டு இஞ்சியைத் தட்டி, ஒரு கப் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, அத்துடன் சிறிது தேன் சேர்த்து கலந்து, தினமு 3 முறை குடிக்கலாம்.

பூண்டு

பூண்டு நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, மேல் சுவாச மண்டலத்தை சரிசெய்ய உவியாக இருக்கும். மேலும் பூண்டில் ஆன்டி-பாக்ரடீரியல் மற்றும் ஆன்டி-வைரல் பண்புகள், தொற்றுக்களை எதிர்த்துப் போராடும்.

* தினமும் 2-3 துண்டு பூண்டை பச்சையாகவோ அல்லது சமையலில் சேர்த்தோ சாப்பிடலாம்.

* இல்லாவிட்டால், ஒரு கப் சுடுநீரில் 1 பூண்டை தட்டிப் போட்டு, அத்துடன் 1 சிட்டிகை மிளகுத் தூள், 2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் தேன் சேர்த்து கலந்து, சூடாக குடிக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2 முறை குடித்தால், விரைவில் மேல் சுவாசக்குழாய் தொற்றுகளில் இருந்து விடுபடலாம்.

ஈரப்பதமூட்டி

நீங்கள் தூங்கும் அறை அல்லது உங்கள் வீட்டில் வறண்ட காற்று அதிகம் சுற்றிக் கொண்டிருந்தால், வீட்டினுள் ஈரப்பதமூட்டியைப் பொருத்துங்கள். இதனால் வீட்டினுள் சுற்றும் காற்று ஈரப்பதத்துடன் இருந்து, மேல் சுவாச மண்டல பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கும்.

ஒருவேளை ஈரப்பதமூட்டியை வாங்கி பொருத்தமுடியாவிட்டால், ஒரு பாத்திரத்தில் நன்கு கொதிக்க வைத்த நீரை வைத்து, அனைத்து கதவுகளையும் மூடிக் கொள்ளுங்கள். இதனால் அந்த அறையிலுள் சுற்றும் காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும்.



சிக்கன் சூப்

வீட்டில் தயாரிக்கப்படும் சிக்கன் சூப்பில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் இருக்கும். இதனால் அதைக் குடிக்கும் போது, மேல் சுவாசக்குழாய் தொற்றுக்களில் இருந்து விடுபடலாம். அதிலும் சிக்கன் சூப் தயாரிக்கும் போது, அத்துடன் இஞ்சி, பூண்டு போன்ற மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த பொருட்களையும் சேர்த்து தயாரித்துக் குடியுங்கள். அதுவும் ஒரு நாளைக்கு 2-3 முறை குடித்து வந்தால், சீக்கிரம் விடுபடலாம்.

தேன்

* ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 எலுமிச்சையைப் பிழிந்து, அத்துடன் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, தினமும் 1-2 முறை குடிக்க வேண்டும்.

* இல்லாவிட்டால், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில், 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, தினமும் 1- முறைக் குடிக்கலாம்.

திரவங்கள்

ஒருவருக்கு மேல் சுவாசக்குழாய் தொற்றுகள் ஏற்பட்டிருக்கும் போது, உடலை போதுமான நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்வது என்பது மிகவும் முக்கியம். முக்கியமாக இக்காலத்தில் காபி, டீ, குளிர்பானங்கள், சர்க்கரை நிறைந்த பானங்கள், மது பானங்கள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். நாள் முழுவதும் போதுமான அளவு நீரைக் குடிக்க வேண்டும். வேண்டுமானால், நற்பமான பழச்சாறுகள் மற்றும் காய்கறி சாறுகளையும் குடிக்கலாம்.

அதிகாலை சூரிய வெளிச்சம்

நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையுடன் பராமரிப்பதில் வைட்டமின் டி முக்கிய பங்கை வகிக்கிறது. ஒருவரது உடலில் வைட்டமின் டி குறைவாக இருந்தால் தான் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாகி, மேல் சுவாசக்குழாய் தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். ஆகவே உடலில் வைட்டமின் டி-யின் அளவைப் பராமரிப்பது என்பது முக்கியம். அதற்கு தினமும் அதிகாலையில் வெயில் படும்படி குறைந்தது 15 நிமிடம் உடற்பயிற்சியை செய்யுங்கள். தேவை இருந்தால், மருத்துவர் கூறும் வைட்டமின் டி மாத்திரைகளை உட்கொள்ளுங்கள்.



முறையான ஓய்வு

ஒருவருக்கு மேல் சுவாசக்குழாய் தொற்றுகள் தீவிரமாகவோ அல்லது தொடர்ச்சியாகவோ இருந்தால், சரியாக ஓய்வு எடுக்க வேண்டியது அவசியம். உடலுக்கு ஒருவர் போதுமான ஓய்வைக் கொடுத்தாலே, உடல் விரைவில் குணமாகிவிடும். எனவே உடல்நலம் சரியில்லாத போது, கடுமையாக வேலை செய்யாமல், போதிய ஓய்வு எடுங்கள்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker