இத சாப்பிடக்கூடாதுன்னு நினைக்கிறீங்க ஆனா முடியல அதானே… அதுக்கு பதில் இத சாப்பிடுங்களேன்…
குழந்தைகள் என்றில்லை, இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரும், நவீன உணவுக் கலாச்சாரத்திற்கு, அடிமையாகிவிடுகிறார்கள். பிரேக் இடைவேளைகளில், நொறுக்குத்தீனியுடன் காபியோ அல்லது, மென்பானத்தையோ பருகினால்தான், சிலருக்கு, மாலைநேரம் இனிமையாக இருக்கும் என்ற அளவுக்கு, ஜங்க் ஃபுட்களுக்கு, அடிமையாகிவிட்டார்கள்.
மனிதரின் பலவீனத்தை, ஜங்க் ஃபுட் தயாரிப்பாளர்கள், நன்றாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். கவனித்தால் தெரியும், இதுபோன்ற பாக்கெட்களில் அடைக்கப்பட்ட உணவுகள், அல்லது முன்னரே சமைத்த உணவுகளில் எல்லாம், இனிப்பு, உப்பு, மற்றும் காரச் சுவைகள் எல்லாம், ஒரு வித்தியாசமான சேர்க்கையில் இருக்கும்.
ஜங்க் ஃபுட்டுக்கு அடிமையாதல்
முன்னொரு காலத்தில், சுவைத்த கிராக் ஜாக் மற்றும் சால்ட் பிஸ்கெட்களின் சுவையை, முடிந்தால், ஞாபகப்படுத்திப் பாருங்கள்.அதில் உப்பு கூடுதல் என்றும் சொல்லமுடியாது, குறைவு என்றும் சொல்லமுடியாது, அதேபோலத்தான் இனிப்பும். இதுபோன்ற மாறுபட்ட சுவைகளை சுவைத்தபின், அவற்றை மீண்டும், கொறிக்கத் தூண்டும் எண்ணங்களிலிருந்து, விடுபடுவது, கடினம், எனவேதான், மக்கள், அவற்றுக்கு அடிமையாகிவிடுகிறார்கள். ஆல்கஹால், ஜர்தாபாக்குகள் போன்ற, போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் போல.
தீர்வுகள்
இதுபோன்ற டப்பா உணவுகளின் மேலான ஈர்ப்பில், அதற்கு அடிமையாகி இருந்தாலும், சுய கட்டுப்பாட்டுடன் சற்றே முயற்சித்தால், அந்த ஈர்ப்பிலிருந்து விலகி, அடிமைத்தனத்தில் இருந்து வெளியேறிவிடமுடியும். அதற்கான சில எளிய வழிகளை, இப்போது, காண்போமா?
உணவு நேரம்
வழக்கமான, உணவு நேரத்தை முன்கூட்டி, மாற்றியமைப்பது இந்த ஜங்க் ஃபுட் அடிமைத்தனத்திலிருந்து மீள மிகச்சிறந்த வழியாகும். நாம் மதிய உணவுநேரத்தை, வழக்கமான நேரத்திலிருந்து, சற்று முன்னதாக மாற்றியமைத்துக்கொண்டு, காய்கறிகள், பழவகைகள் நிரம்பிய சத்தான சாப்பாட்டை, ருசித்து உண்ணும்போது, வயிறு நிரம்பிவிடும். இதனால், மாலைநேர இடைவேளைகளில், பிட்சா, சான்ட்விச், கேக், பானி பூரி, ப்ரெட் ஆம்லெட், பிரெஞ்ச் பிரைஸ் போன்ற நொறுக்குத்தீனி வகை உணவுகளை சாப்பிடுவதில், ஏற்படும் ஈர்ப்பு, தானாக, குறைந்துவிடும். அந்தநேரங்களில் நண்பர்கள் அவர்களிடம், அவர்களுக்குப் பிடித்த இனிப்பு பதார்த்தங்களைக் கொடுத்தால்கூட, வயிறு ஃபுல்லாக இருக்கிறது, வேண்டாம் என்று மறுத்துவிடுவார்கள்.
சமச்சீர் உணவு
சமச்சீரான சத்துணவை உண்பதன்மூலம், நொறுக்குத்தீனிகளில் உள்ள ஆர்வத்தைக் குறைக்க முடியும். மேலும், பிரெட் ஆம்லெட், சான்ட்விச் மற்றும் பிட்சா போன்ற துரித உணவின் வாசனையால் ஈர்க்கப்படுவது, நின்றுவிடும். அவற்றைக் கண்டால்கூட உண்பதில் ஆர்வமின்மையும், அவற்றைப்பற்றிய பேச்சுக்களில் ஈடுபாடின்மையும், தானாக ஏற்பட்டுவிடும்.
வெஜ் ஃபுரூட் சாலட்டுகள்
வாரத்தின் லீவுநாளில், விருப்பமான புழுங்கலரிசி சாதம், பீன்ஸ், கேரட் காரப்பொரியல், வெள்ளரித்துண்டுகள் நிரம்பிய தயிரில், எலுமிச்சை சாறு கலந்த, வெஜிடபிள் சாலட் இவற்றை விருப்பம் போல சாப்பிட்டு, குளிர்சாதனப் பெட்டியில் பத்திரப்படுத்தியும் வைத்துக்கொள்ளலாம். மேலும், ஆப்பிள், வாழை மற்றும் ஆரஞ்சு பழங்களை இவற்றுடன், அலுவலகத்துக்கு எடுத்துச்செல்வதன் மூலம், சுவையும் சத்தும் நிறைந்த வீட்டு உணவுக்குப்பின், மாலைநேர தீனியாக, பழங்களை சாப்பிடும்போது, நொறுக்குத்தீனிகளில் உள்ள ஆர்வம், தானாக மறைந்துவிடும்.
கடைகளில், குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும், பொருட்களை தேர்வுசெய்யுங்கள். வளமான காய்கறிகள், பழங்கள், புரதங்கள் அடங்கிய தானியங்கள் போன்ற ஆரோக்கிய உணவை, தொடர்ந்து சாப்பிட்டுவரும் போது, நாளடைவில், செயற்கை உணவுகளின் மேல் உள்ள ஆர்வம், தானே மறைந்துவிடும்.
ஷாப்பிங்
கடைகளில் பொருட்களை வாங்கும்போது, முழு தானியம், பால், மாமிசம் போன்றவை உள்ள பகுதிகளில் மட்டும், கவனம் செலுத்துங்கள். கண்களைக்கவரும், டப்பாக்களில் அடைக்கப்பட்ட, சமைத்த உணவுகளின் பக்கம் செல்லவேண்டாம், அத்துடன், உணவுகளை எடுக்கும்போது, கேழ்வரகு மாவு, கோதுமை மாவு போன்ற புரதம் நிறைந்த தனி உணவுகளை எடுப்பது நலமாகும். இதன்மூலம், அந்த உணவுகளில் நாட்டம் ஏற்பட்டு, மனமும் அவற்றின் சுவையை விரும்ப ஆரம்பிக்கும்.
நிறைந்த கொழுப்பு உணவுகள்
உடலுக்கு நன்மைகள் தரும் செறிவான கொழுப்புகளை, உணவில் சேர்க்கவேண்டும். உடல் எடை கூடுவதற்கும், உடலில் கொழுப்பு ஏறுவதற்கும், நாம் சாப்பிடும் கொழுப்புச்சத்துள்ள உணவுகள்தான், காரணம் என்று நம்மை தவறாக, சொல்லி சொல்லியே நம்மை பலவீனமாக்கிவிட்டார்கள். ஆனால், உடல் ஆரோக்கியத்துக்கு, கொழுப்புகள் தேவை என்பதே, உண்மை. ஆயினும், கேக், சான்ட்விச், மாட்டுக்கறி போன்ற கரையாத கொழுப்பு உணவுகளை விலக்கிவிடவேண்டும். இதயத்துக்கு நலம்தரும், கரையும் வகையிலான கொழுப்புகள் நிறைந்த பட்டர் ஃபுரூட் எனப்படும் அவகேடோ, பாதாம் போன்றவற்றை உட்கொள்ளும்போது, வயிறு நிரம்பிய உணர்வை அடைவதன்மூலம், நொறுக்குத் தீனிகளின் பால், மனம் செல்வதைத்தடுக்க முடியும்.
நட்ஸ்
வறுத்த பாதாம், முந்திரி, பிஸ்தா பருப்புகள், சில துளிகள் ஆலிவ் எண்ணை கலந்த, பழ சாலட்கள் மற்றும் கொழுப்பு நிறைந்த மீன்கள் போன்றவற்றை, மாலைநேரத்தில் சாப்பிடும்போது, உடலுக்கு நன்மைகள் தரும் அவற்றின் கொழுப்புகள், உடல் ஆரோக்கியத்தை, வலுவாக்கும். புரதச்சத்தை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவேண்டும். உடல் வளர்ச்சிக்கு உதவும் புரதச்சத்துள்ள உணவுகளை சாப்பிடும்போது, அவை, கார்போஹைட்ரேட் நிரம்பிய உணவுகளைவிட அதிகமாக, வயிறு நிரம்பிய உணர்வை அளிக்கும். உடலுக்கு நன்மைதரும் புரதம் நிறைந்த உணவுகள், மீன்கள், பீன்ஸ் புரோக்கோலி உள்ளிட்ட காய்கறிகள், பாதாம், பிஸ்தா போன்ற பருப்புவகைகளாகும்.
புதுமையான சமையல் முறை
சாப்பாட்டில் ஆர்வம் வருவதற்கு, சில வித்தியாசமான உணவுகளை தினமும் சேர்த்து வரலாம். வழக்கமான சாலட்டில், வெள்ளரிப்பிஞ்சுடன், நெல்லிக்காயை ஸ்லைஸ் செய்து சேர்க்க, சாலட்டுக்கு புதுவித சுவையை அளிப்பதுடன், உடலுக்கும் நன்மைகள்தரும். இதன்மூலம், சாப்பாட்டின் மீதான ஆர்வம், அதிகரித்து, நொறுக்குத் தீனிகளின் மீதிருந்த ஆர்வம் போய்விடும். சாலட் போல, காய்கறி மற்றும் மீன்களில் புதுவிதமாக, உணவு சமைக்க யோசிக்கலாம். இதேபோல, சிவப்புநிற பீட்ரூட், ஆரஞ்சுநிற கேரட், பச்சைநிற சவ்சவ், வெண்ணிற மரவள்ளிக்கிழங்கு போன்ற பலவண்ண காய்கறிகளை, தினமும் உணவில் சேர்க்கும்போது, பலவண்ணங்கள் சேர்ந்த வானவில்லைக் காண்பது, மனதுக்கு உற்சாகமளிப்பதுபோல, பலநிறங்களிலுள்ள காய்கறிகளைக்கொண்ட சாப்பாடு, உணவின் மீதான ஆர்வத்தை அதிகரித்து, உடல் ஆரோக்கியத்தைக் காப்பதிலும், நோய்களைத் தடுப்பதிலும், சிறந்த பங்காற்றுகின்றன.
மாத்தி யோசிங்க
விருப்பமான ஒருபொருளை, அதற்கு எதிர்மாறான நிலையில் யோசித்தால், அதைப்பற்றிய அபிப்ராயம் மாறும். அதுபோல, நொறுக்குத்தீனிப் பிரியர்களை, எதிர்மறையாக யோசிக்கவைத்தால், ஜங்க்உணவுகள் மீதான ஈர்ப்பு, போயே போய்விடும். சாப்பிட்டு வயிறு நிரம்பியபின், நொறுக்குத்தீனிகளின் மேல் ஆர்வம் வருமா? அதைவிட அந்த ஜங்க் ஃபுட்கள் எங்கு எப்படி தயாரிக்கப்படுகின்றன என்று தெரிந்து கொண்டாலே நீங்கள் அதை மீண்டும் தொட மாட்டீர்கள். ஊட்டச்சத்துள்ள உணவுகளை தயாரிப்பதிலேயே, முழுக்கவனமும் இருக்கட்டும்.
மன அழுத்த மேலாண்மை பயிற்சிகள்
மன அழுத்தம், சோர்வு போன்ற மன நல பாதிப்புகள், சில பொருட்களின் மேலான ஆர்வத்தைத்தூண்டுகின்றன. இரத்த சர்க்கரை அளவு குறையும்போது, உடலின் ஆற்றலை அதிகரிக்க, பழுப்புநிறத்திலுள்ள நொறுக்குத்தீனிகளை, சாப்பிடத்தோன்றும்.
மிகுந்த மன உளைச்சலில் இருக்கும்போது, ப்ரௌன்நிற சாக்லேட்கள் மற்றும், சாக்லேட் சிப்கள் நிறைந்த குக்கி பிஸ்கெட்களை சாப்பிட, ஆர்வம் தோன்றும்.
மன அழுத்தத்தில், நொறுக்குத்தீனிகளைத் தின்ன ஆர்வம் ஏற்படும்போது, கவனத்தை திசைதிருப்ப, சில செயல்களை செய்யலாம். கிராமங்களில், கொதிப்பதைத் தணிக்க, எரிவதைப் பிடுங்கு என்பார்கள். அடுப்பில், அரிசி வெந்து உலை பொங்கும்போது, பொங்குவதை நிறுத்த, எரியும் விறகை வெளியே எடுத்தால், பொங்குவது, தானே அடங்கும். அதுபோலத்தான், மன அழுத்த எண்ணங்களை மடைமாற்ற, வேறு விசயங்களில், கவனத்தை திருப்புவதும்.
நடைபயிற்சி
சிறிய வாக்கிங் போகலாம், யோகா, தியானம் சிறிதுநேரம் செய்யலாம், ஆழமாக மூச்சை, இழுத்துவிடலாம், நெருக்கமான நண்பர்கள் அல்லது குடும்பத்தாரிடம் சிறிதுநேரம், மனம்விட்டு பேசலாம். வரைவது, பாடுவது போன்ற படைப்புகளில் ஈடுபடலாம். அதுபோல, ப்ளாக் அல்லது இணைய பக்கத்தில், எழுதவும் செய்யலாம். இதில் நமக்கு விருப்பமானதை நம்முடைய நேரத்திற்குத் தகுந்தது போல் செய்துவர, மனச்சோர்வை விரட்ட முடியும். ஆயினும் கடினமான சூழ்நிலைகளில், மருத்துவர் அல்லது மன நல ஆலோசகரிடம் அறிவுரை கேட்டு, அதன் படி நடப்பதே, உத்தமம்.
தூக்கமின்மை
நல்ல தூக்கம், நொறுக்குத் தீனிகளை விரட்டும். தூக்கமின்மை, மனநிலைகளையும், உடல் ஆற்றலையும் பாதிக்கக் கூடியது. சரியான தூக்கம் இல்லாவிட்டால், பசி அதிகரித்து, கண்ணைக் கவரும் நொறுக்குத்தீனிகளை, அதிகம் சாப்பிடத் தூண்டும், இரவில் நெடு நேரம் கண் விழித்திராமல், நேரத்தில் தூங்க வேண்டும். தூங்குவதற்கு சில மணிநேரத்துக்கு முன்பாகவே, சாப்பிட்டிருப்பதும், முக்கியம். இதன்மூலம், செரிமானமாகாத உணவு தரும் பாதிப்பினால், தூக்கம் வராமல், புரண்டு புரண்டு படுக்கத் தேவையின்றி, சீரான ஆழ்ந்த உறக்கத்தை, அடையமுடியும்.