கோடையில் கருப்பாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளைப் போடுங்க…
கோடைக்காலம் வந்தாலே பலரும் தங்களது சருமம் குறித்து மிகவும் கவலைக் கொள்வார்கள். கோடைக்காலத்தில் நமது சருமத்திற்கு சரியான பராமரிப்புக்களைக் கொடுக்காமல் இருந்தால், பல்வேறு சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிட்டு, மிகவும் அசிங்கமாக காட்சியளிக்க நேரிடும். முக்கியமாக கோடை வெயிலால் சருமம் மிகவும் கருமையாகும் வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்க வேண்டுமானால், சருமத்திற்கு முறையான பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டும்.
சரி, கோடையில் சருமம் கருமையாகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? தினமும் தவறாமல் ஃபேஸ் பேக், ஃபேஸ் மாஸ்க், ஸ்கரப் என்று செய்து வந்தால், வெயிலால் சருமம் கருமையாவதைத் தடுக்கலாம். எம்மாதிரியான ஃபேஸ் பேக்குகளைப் போடுவது என்று தானே கேட்கிறீர்கள். கோடையில் வெளியே எங்கும் செல்லாமல் வீட்டில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டே அற்புதமான ஃபேஸ் பேக்குகளைப் போடலாம்.
இக்கட்டுரையில் கோடையில் அன்றாடம் எந்த மாதிரியான ஃபேஸ் பேக்குகளைப் போடலாம் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து, அவற்றில் உங்களால் முடிந்ததை மேற்கொண்டு, உங்கள் அழகு பாழாகாமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
எலுமிச்சை ஃபேஸ் பேக் தேவையான பொருட்கள்:
* எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
* தேன் – 1 டேபிள் ஸ்பூன்
* முட்டை வெள்ளைக்கரு – 1
செய்முறை:
* ஒரு பௌலில் முட்டையின் வெள்ளைக்கருவை தனியாக எடுத்து, அதில், எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, 20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.
* பின்பு நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3-4 முறை செய்து வந்தால், சருமத்தில் உள்ள கருமை நீங்கி, சருமம் பிரகாசமாக இருக்கும்.
பூசணிக்காய் ஃபேஸ் பேக் தேவையான பொருட்கள்:
* பூசணிக்காய் கூழ் – 1/4 கப்
* தேன் – 1 டேபிள் ஸ்பூன்
* முட்டை – 1
* பாதாம் பால் – 1 டேபிள் ஸ்பூன்
* ஆப்பிள் சீடர் வினிகர் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* ஒரு பௌலில் பூசணிக்காய் கூழ் எடுத்து, அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் தேன், பாதாம் பால், ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி நன்கு 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* இறுதியில் நீரால் முகத்தைக் கழுவி, பின் மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்த வேண்டும்.
புதினா மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக்
தேவையான பொருட்கள்:
* புதினா இலைகள் – 6-7
* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
செய்முறை:
* புதினா இலைகளை நன்கு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். ஒருவேளை இக்கலவை மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது வெதுவெதுப்பான நீர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
* பின்பு அந்த கலவையை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து நீரால் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை தினமும் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இதனால் முகம் பிரகாசமாக இருக்கும்.
தயிர் மற்றும் கடலை மாவு ஃபேஸ் பேக்
தேவையான பொருட்கள்:
* தயிர் – 4 டேபிள் ஸ்பூன்
* கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* ஒரு பௌலில் தயிர் மற்றும் கடலை மாவு எடுத்து, கெட்டி சேராதவாறு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவ வேண்டும். வேண்டுமானால், இக்கலவையுடன் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளலாம்.
* பின்பு அந்த மாஸ்க்கை 15-20 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
வாழைப்பழ ஃபேஸ் பேக்
தேவையான பொருட்கள்:
* மசித்த வாழைப்பழம் – 1/2 கப்
* தேன் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* ஒரு பௌலில் மசித்த வாழைப்பழத்தை எடுத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, நன்கு உலர வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இந்த மாஸ்கினால் சருமத்திற்கு போதிய நீர்ச்சத்து கிடைத்து, சருமம் வறட்சி அடையவது தடுக்கப்படும்.
தக்காளி ஃபேஸ் பேக்
தேவையான பொருட்கள்:
* தக்காளி கூழ் – 1/4 கப்
* தேன் – 1 டீஸ்பூன்
செய்முறை:
* ஒரு பௌலில் தக்காளி கூழ் மற்றும் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.
* பின்பு நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதோடு, சருமம் கருமையாவதைத் தடுக்கலாம்.
பால் மற்றும் தேன் மாஸ்க்
தேவையான பொருட்கள்:
* பால் – 1 டேபிள் ஸ்பூன்
* தேன் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* ஒரு பௌலில் தேன் மற்றும் பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். வேண்டுமானால், பாலுக்கு பதிலாக பால் பவுடரை பயன்படுத்தலாம்.
* பின் அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கோடை வெயிலால் சருமம் கருமையாவதைத் தடுக்கலாம்.
வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்
தேவையான பொருட்கள்:
* வெள்ளரிக்காய் – 1/2
* சர்க்கரை – 1 ஸ்பூன்
செய்முறை:
* வெள்ளரிக்காயை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 10 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.
* இறுதியில் முகத்தை நீரால் தேய்த்துக் கழுவ வேண்டும்.
* இந்த மாஸ்க்கை தினமும் ஒரு முறை பயன்படுத்த, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, முகம் பளிச்சென்று அழகாக காட்சியளிக்கும்.