பிள்ளைகளின் வளர் இளம் பருவத்தில் பெற்றோரின் அரவணைப்பு
அந்த பருவத்தில் பிள்ளைகளின் நெருங்கிய தோழனாக, தோழியாக பெற்றோரின் செயல்பாடு அமைய வேண்டும். பெரும்பாலான பெற்றோர் அவ்வாறு தோழமையுடன் இருப்பதில்லை. 10 வயது தொடங்கியது முதல் 20 வயது வரையிலாவது தோழமை மனப்பான்மையுடன் பழக வேண்டும். இல்லாவிட்டால் தாய், தகப்பன் ஸ்தானத்தை மட்டுமே பெற முடியும். நண்பன் என்னும் ஸ்தானம் கிடைக்காமலேயே போய்விடும்.சிறுவயது முதல் குழந்தைகள் பெற்றோரை சார்ந்தே வளர்ந்திருப்பார்கள். 10 வயதுக்கு பிறகு அவர்களுடைய போக்கில் மாற்றம் ஏற்படும். சுயமாக சிந்தித்து அதன்படி செயல்பட விரும்புவார்கள். அதற்கு பெற்றோர் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பும்போது அவர்கள் சொல்வதை கேட்க மறுப்பார்கள். பெற்றோருடன் அடிக்கடி வாக்குவாதம், சண்டையில் ஈடுபடுவார்கள். அவர்களுடைய உணர்வுகளை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும். பிள்ளைகளின் விருப்பங்கள், தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முட்டுக்கட்டை போடக் கூடாது.
கண்டித்தே தீரவேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும்போதுதான் பெற்றோரின் தலையீடு இருக்க வேண்டும். அதுவும் நண்பன் ஸ்தானத்தில் இருந்து மென்மையான அணுகுமுறையை கடைப் பிடிக்க வேண்டும். நண்பர்கள், படிப்பு, வேலை ஆகிய மூன்றையும் தேர்வு செய்யக்கூடிய உரிமை அவர்களுக்கு இருக்கிறது என்பதை பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும். தங்கள் கனவுகளையும், எதிர்பார்ப்புகளையும் பிள்ளைகள் மீது திணிக்கக்கூடாது. அவர்களுடைய தனித்திறமைகளையும், தனித்தன்மையையும் வெளிப்படுத்த வாய்ப்பளிக்க வேண்டும். பிரச்சினைக்குரிய செயல்பாடுகளில் ஈடுபடும்போது பெற்றோர் தலையிட்டு சரியான பாதையை காட்ட வேண்டும்.
பெற்றோர் சிறந்த நண்பராக இருந்தால்தான் பிள்ளைகள் மனம் திறந்து பேசுவார்கள். தங்கள், மகன், மகள்கள் ஒருபோதும் தவறு செய்யமாட்டார்கள் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையை பெற்றோர் கொண்டிருக்க வேண்டும். அதை உணர்த்தும் விதமாகவும் பிள்ளைகளிடம் பழக வேண்டும். சரியோ, தவறோ எது செய்தாலும் பிள்ளைகள் மறைக்காமல் கூறும் விதத்தில் அன்போடு பழக வேண்டும். அப்படி செய்தால் தங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுவதற்காகவே தவறான வழிகளில் செல்ல மாட்டார்கள். ஒருவேளை அவர்களுடைய நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டால், ‘இது உன் எதிர்காலம் சம்பந்தப்பட்ட விஷயம். உன் இஷ்டப்படி முடிவெடு’ என்று அன்பாக பிரச்சினையின் மறுபக்கத்தை புரிய வையுங்கள்.
பிள்ளைகளிடம் பாலியல் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதும் அவசியம். வளர் இளம் பருவத்தினரிடத்தில் ஸ்மார்ட்போன்கள் தவிர்க்க முடியாத பொழுதுபோக்கு அம்சமாக மாறிக்கொண்டிருக்கிறது. அவைகளை பயன்படுத்தவே கூடாது என்று கட்டுப்பாடு விதிப்பது பெற்றோருக்கே பாதகமாக மாறிவிடும். குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பயன்படுத்த அனுமதிக்கலாம். சமூக வலைத்தளங்களில் அவர்கள் செலவிடும் நேரத்தை மேற்பார்வையிடலாம். அது அவர்கள் மனதை நோகச்செய்யாத அளவிற்கு நாட்டு நடப்புகளை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.