குழந்தைகளின் விரல் சூப்பும் பழக்கத்தை மறக்கச் செய்யலாம்
குழந்தைகள் விரல் சூப்புவதன் பின்னணி, அந்தப் பழக்கத்தை மாற்ற வேண்டியதன் அவசியம் மற்றும் வழிகள் போன்றவற்றை விளக்குகிறார்கள் குழந்தைகள் நல நிபுணர்கள்.
குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை மறக்க, விரலில் விளக்கெண்ணெய் தடவுவது முதல் பிளாஸ்திரி ஒட்டுவது வரை என்னென்னவோ செய்கிறார்கள். குழந்தைகள் விரல் சூப்புவதன் பின்னணி, அந்தப் பழக்கத்தை மாற்ற வேண்டியதன் அவசியம் மற்றும் வழிகள் போன்றவற்றை விளக்குகிறார்கள் குழந்தைகள் நல நிபுணர்கள்.
ஒருவித பாதுகாப்பு உணர்வு இல்லாத காரணத்தினால் தான் குழந்தைகளுக்கு கை சூப்புதல், நகம் கடிக்கும் பழக்கங்கள் ஏற்படுகின்றன. தாயின் கருவில் இருக்கும் போதே சில குழந்தைகள் கைவிரல்களை வாயில் வைக்கத் தொடங்கி விடுகின்றன. பிறந்த குழந்தைகளுக்கு எந்த ஒரு பொருளும் நிழலாகத்தான் தெரியும்.
அதன் அருகில் எந்தப் பொருள் சென்றாலும் அதனை வாயிலோ அல்லது கைவிரல்களிலோ பற்றிக் கொள்வதை பார்க்கலாம். இந்த உணர்வினால் நாளடைவில் கைகளையோ, மற்ற பொருட்களையோ தங்கள் வாய்க்குள் வைத்துக் கொள்ள ஆரம்பிக்கின்றனர். அதுவே போகப்போக விரல் சூப்பும் பழக்கமாக மாறி விடுகிறது. இந்தப் பழக்கத்தை ஒரு வயதுக்கு உள்ளாக நிறுத்தி விடுவது நல்லது.
ஏனெனில், குழந்தைகளின் முன் வரிசைப்பற்கள் வரிசையிலிருந்து விலகி தூக்கலாகிவிடும். வளரும் நிலையில் பற்கள் முன்னே துருத்திக்கொண்டு முகத்தின் அழகை கெடுத்துவிடும். பின்னாளில் அதற்கென்று பிரத்யேகமாக ‘கிளிப்’ போடவேண்டி இருக்கும். மேலும் பள்ளிக்குச் செல்லும் நேரத்தில் விரல் சூப்பும் குழந்தைகளை மற்ற குழந்தைகள் கேலி செய்வார்கள். இதனால் அக்குழந்தைகளின் மனதில் தாழ்வு மனப்பான்மை தோன்றி விடும்.
செல்லப் பிராணி வளர்க்கும் வீடுகளாக இருந்தால் அவற்றை தொட்ட கைகளை குழந்தைகள் வாய்க்குள் வைக்கும் போது மற்ற வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமி களால் வாந்தி, பேதி, காய்ச்சல் தவிர மேலும் பல நோய்கள் வரக்கூடும். எப்படி இருந்தாலும் விரல் சூப்பும் பழக்கம் குழந்தைகளுக்கு கெடுதல் விளைவிக்கக் கூடியதே. இந்த பழக்கத்தை மாற்றவும் வழி இருக்கிறது.
ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வாய்க்குள் விரலை கொண்டு போகும் நேரத்தில் அவர்களின் கவனத்தை திசை திருப்பி விளையாட்டு காண்பிக்கலாம். இரண்டு, மூன்று வயது குழந்தைகள் போரடிக்கும் போதும், பயப்படும் போதும், மன அழுத்தத்தில் இருக்கும் போதும் விரல் சூப்பத் தொடங்கி விடுவார்கள். இவர்கள் வாய் அருகில் விரலை கொண்டு போகும் போதே, விரல் சூப்புவதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி கற்பனைக் கதையாக சொல்லி மாற்றலாம். தற்போது இதற்கென்று லோஷன் வந்து விட்டது. அதுவும் உதவாத போது, பல் டாக்டர் ஆலோசனையின் பேரில், இதற்கென்றே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஒரு சாதனத்தை விரல்களில் பொருத்திவிடலாம்.