உறவுகள்எடிட்டர் சாய்ஸ்புதியவை

சின்ன வயசுலயே கட்டுப்பாடு மீறி காதலித்த பாவத்துக்கு தான் இப்போ இந்த தண்டனை!

நான் நல்ல வசதியான வீட்டு பெண்.. என் அம்மா ஒரு இல்லதரசி, அப்பாவுக்கு போக்குவரத்து துறையில் வேலை. என் தம்பி என்னை விட ஐந்து வயது சிறியவன்… என் பாட்டி வீட்டு சொத்துக்களும் எங்களுக்கு இருந்தது.. எனது 13 வயதிலிருந்து அவனை தெரியும்.. நானும் அவனும் ஒரே டியூசனில் தான் படித்துக் கொண்டிருந்தோம்.. அவன் என்னை விட மூன்று வயது பெரியவன்.. அத்தனை பேர் படிக்கும் அந்த டியூசனில் அவன் மட்டும் தான் எனக்கு அழகாக தெரிந்தான்..

டியூசன் டீச்சரிடம் அடி வாங்கும் போதும் கூட எனக்கு அவனது முகம் அழகாக தான் தெரிந்தது.. நான் எங்களது ஊரிலேயே பெரிய மெட்ரிகுலோசன் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன்.. அவனும் வசதியானவன் தான் ஆனால் அவன் ஒரு அரசுப் பள்ளியில் தான் படித்துக் கொண்டிருந்தான்.. எனக்கு கேட்டதை எல்லாம் என் அப்பாவும், தாத்தாவு வாங்கி கொடுப்பார்கள்.. கஷ்டம் தெரியாமல் வளர்ந்தேன்..

காதல்

அதனால் தான் சின்ன வயதிலேயே காதலில் விழுந்தேன்… அவனை அடிக்கடி இரகசியமாக சந்திப்பேன்… அந்த பருவத்தில் காதல் எனக்கு மிகவும் சந்தோஷத்தை கொடுத்தது.. நாட்கள் கடந்தன.. அப்போது எனக்கு வயது 15 நான் 10 வகுப்பில் மிக குறைந்த மதிப்பெண்களுடன் பாஸ் ஆனேன்..

வீட்டில் கண்டு கொள்ளவில்லை

பத்தாம் வகுப்பு விடுமுறை முழுக்க அவனுடனே கழிந்தது.. அவனுடன் என் குடும்பத்தினரின் முன்னிலையிலேயே தான் பேசிக் கொண்டிருப்பேன். கேட்டால் பிரண்ட் கூட பேசறேன் என்று சொல்லிவிடுவேன்.. என் மீது உள்ள நம்பிக்கையின் காரணமாகவும், நான் இன்னும் குழந்தை என்ற காரணத்திற்காகவும் என்னை கண்டுகொள்ள மாட்டார்கள். அது எனக்கு சௌகரியமாக போனது..

வீட்டில் மாட்டிக் கொண்டோம்

நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசிக் கொள்வது பற்றி யாரோ அவனது அம்மாவிடம் சொல்லிவிட்டார்கள்.. அன்று முதல் தான் எங்களது காதலில் பிரச்சனை உண்டானது.. அவனுடன் என்னை பேச கூடாது என்று அவனது அம்மா மிரட்டினார்.. எங்களது வீட்டின் முன்பு வந்து சண்டை போட்டார்.. மனமே போனது.. இருப்பினும் நாங்கள் காதலித்துக் கொண்டிருந்தோம்.. அதனால் அடிக்கடி வந்து எங்களது வீட்டின் முன்பு சண்டையிட தொடங்கிவிட்டார் அவனது அம்மா.. இத்தன வருசம் வாழ்ந்து என்ன பண்ணனு யாரும் கேக்க முடியாது!  கர்ப்ப காலத்தில் உண்டாகும் கால் வலிக்கு தீர்வு தான் என்ன? மலச்சிக்கல் பிரச்சனை இருக்கா? விரைவில் விடுபட இதோ சில வழிகள்

சோகம்

இதன் காரணமாக எங்களது வீட்டிலும் எனக்கு கண்டிப்பு அதிகமானது.. ஆள் ஆளுக்கு அட்வைஸ் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.. அவனும் அவனது அம்மாவின் கட்டாயத்தால் என்னுடன் பேசாமல் இருந்தான்.. அந்த 2 வாரத்தில் நான் என் கைகளை அறுத்துக் கொண்டேன்.. சோக பாடல்களை கேட்டு அழுதேன்.. பள்ளிக்கு செல்லவில்லை.. சென்றாலும் பாடத்தில் கவனமில்லை.. சாகலாம் போல இருந்தது…

அன்பான மாமியார்?

தீடிரென்று ஒரு நாள் நான் பள்ளியிலிருந்து வந்து கொண்டிருக்கும் போது அவன் என்னை அவனது வீட்டிற்கு அழைத்து சென்றான்.. அவன் அம்மாவிடம் அறிமுகம் செய்து வைத்தான்.. அவனுடைய அம்மா என்னை அவரது மடியில் அமர வைத்து கொஞ்சினார்கள்.. என் சொத்து விவரங்களை எல்லாம் சேகரித்து கொண்டார். நானும் அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தேன்..

அப்பாவின் மரணம்

இதற்கு இடையில் என் அப்பாவின் உடல்நிலை குன்றியது.. அவரது மருத்துவ செலவில் பாதி சொத்தே அழிந்தது.. இருந்தும் பயனில்லை.. அவர் தவறிவிட்டார்.. எங்களது குடும்பமே இருண்டு போனது.. வந்தவர்கள் கவனம் என் மீது திரும்பியது.. நீ காதல் கீதல்னு சுத்தாம ஒழுங்கா படிச்சு குடும்பத்த காப்பாத்தற வழிய பாருனு சொன்னார்கள்.. என்னால் அவனை மறக்க முடியாது என்று திட்டவட்டமாக என் உறவுகளிடம் கூறிவிட்டேன்..

ஊர் மாற்றம்

இதன் காரணமாக என் பள்ளியை மாற்றி என்னை வெளியூரில் படிக்க அனுப்பி வைத்தார்கள்.. என் பாட்டியும் தாத்தாவும் என்னுடன் வந்து தங்கினர்.. ஆனாலும் நான் என் காதலை மறக்கவில்லை.. பள்ளிக்கு சென்று வீடு திரும்பும் வழியில் உள்ள ஒரு காயின் பாக்ஸ் போனில் அவனுடன் தினமும் பேசுவேன்.. இதுவும் அவர்களுக்கு தெரிந்து போக, என்னை வேறு ஊரில் படிக்க வைத்தனர்.. என் குடும்பத்தினர் செய்த எந்த ஒரு தடைக்கும் என் காதலை நான் விட்டு தரவில்லை எனவே என்னை சொந்த ஊரிலேயே வேறு பள்ளியில் படிக்க வைத்தார்கள்..

திடீர் பிரச்சனை

ஒரு நாள் ரோட்டில் விளையாடிக் கொண்டிருந்த எனது பக்கத்து வீட்டுக்கார சிறுவன் ஒருவன், என்னையும் என் காதலையும் கொச்சையாக பேசி கிண்டல் செய்து கொண்டே இருந்தான். என்னால் அதனை தாங்கமுடியவில்லை. எனவே அதை நான் என் காதலனிடம் கூறினேன்.. அவன் அந்த பையனை அடித்துவிட்டான். அடி வாங்கிய பையன், அவனது அம்மா, மற்றும் அண்ணனிடம் கூறிவிட்டான்.. அவர்கள் எங்களது வீட்டிற்கு சண்டைக்கு வரவே பிரச்சனை பூதாகரமாகியது..

திருமணம்

என் அம்மா அவமானத்தில், என்னை வீட்டை விட்டு வெளியே போ என்று கோபத்தில் சொல்லிவிட்டார்.. நானும் அவனது வீட்டிற்கு சென்றுவிட்டேன்.. என்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் நான் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினேன்.. அவனது அம்மா சரி திருமணம் செய்து வைக்கிறேன் என்று கூறினார்.. 4 நாட்களாக நான் அவனது வீட்டில் தான் இருந்தேன்.. என் வீட்டாரும் வேறு வழியின்றி எங்களுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார்கள்..

இப்படி ஒரு திருமணம்?

எங்களது திருமணம் அதிகாலை 3 மணிக்கு எங்களது ஊர் கோவிலில் சாட்சிக்கு சில பெரிய மனிதர்கள் முன்னிலையில் மட்டும் இரு வீட்டு சம்மத்துடன் எனது 16 வயதில் நடந்தது… என் படிப்பு அவ்வளவு தான்.. என் காதலனுக்கு 19 வயது தான்… திருமணமான கொஞ்ச நாட்களில் என் மாமியாரின் குணம் எனக்கு தெரிந்தது.. என்னிடம் குழந்தை வேண்டும்.. வேண்டும் என கேட்க தொடங்கிவிட்டார்…

தாயாகிவிட்டேன்

அப்போது எனக்கு 16 வயது தான்.. இருந்தாலும் அவர்களுக்கு குழந்தை பெற்று தர நான் கடமைப்பட்டிருந்த காரணத்தினால், கர்ப்பமானேன்.. என்னுடன் படித்தவர்கள் எல்லாம் 12 வகுப்பு படிக்கும் சின்ன பிள்ளைகளாக சந்தோஷமாக இருக்கும் போது, நான் ஒரு குழந்தைக்கு தாயாகிவிட்டேன்.. என் கணவருக்கும் எந்த தொழிலும் சரியாக அமையவில்லை..

கஷ்டம்

 

நாங்கள் என் மாமியாரை நம்பி தான் இருக்கிறோம்… எனவே அவர் சொன்ன வேலைகளை செய்தாக வேண்டிய கட்டாயம் இருந்தது.. அவர்கள் விவசாய குடும்பம் என்பதால், மாட்டை பார்த்துக் கொள்வது, பால் கரப்பது, சாணத்தை அகற்றுவது, வீடு வீடாக சென்று பால் ஊற்றுவது.. மாட்டிற்கு புல் கொண்டு வருவது, காட்டில் களை எடுப்பது போன்ற வேலைகளை எல்லாம் செய்தேன்..

இது தேவையா?

இவை அனைத்தும் என் அம்மாவின் கண் முன்னரே தான் நடந்தது.. வெயிலில் கூட செல்லாத பிள்ளை இப்படி பாடு படுதே என்று அனைவரும் என்னை பாவமாக பார்த்தார்கள்.. என்ன செய்வது… இது தான் என் விதி என்றால் யாரால் மாற்ற முடியும்? இதோடு முடிந்து விடவில்லை..

வரதட்சணை

என் மாமியார் வரதட்சணை என்ற பெயரில் கொஞ்சம் கொஞ்சமாக என் வீட்டில் இருந்து சுரண்ட ஆரம்பித்து விட்டார்.. என் அம்மாவிடம் சீர் செய்ய பணம் எல்லாத போது, நான் இப்போது பணம் போட்டுக் கொள்கிறேன்.. நீங்கள் பிறகு இதனை வட்டியுடன் சேர்த்து தர வேண்டும் என்று கூறிவிட்டார்…

கடன்

இந்த கடன்கள் அதிகரிக்க, என் அம்மா கடைசியாக இருந்த வீட்டை விற்க முன்வரும் போது, என் மாமியார் கொடுக்க வேண்டிய பணத்திற்கு இந்த வீட்டை எனக்கு கொடுத்துவிடுங்கள் என்று பல கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை தன் பெயரில் எழுதி வாங்கிவிட்டார்.. இப்போது என் அம்மா நாங்கள் பழைய சாமான் போட்டு வைக்கும் ஒரு சிறிய அறையில் தான் தங்கியுள்ளார்…

இது வேண்டாமே

நான் என் கதையை இங்கு பகிர்ந்து கொள்ள காரணம், இது போன்று எந்த ஒரு பெண்ணும் அவளது பள்ளி பருவத்தில் காதலித்து, பெற்றோர் சொற்களை கேட்காமல் சீரழிந்து போய்விட கூடாது என்று தான்.. என் வயது பிள்ளைகள் எல்லாம் இப்போது கல்லூரி இறுதி ஆண்டு தான் படிக்கிறார்கள்.. ஆனால் நான் இரண்டாவது குழந்தைக்கு தாய்…!

Related Articles

78 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker