அழகு..அழகு..புதியவை

ஆண்களின் மீசை பெண்களுக்கு ஆசை

ஆண்மையின் அடையாளமாக மீசை கருதப்படுகிறது. கலாசார ரீதியாக மீசைக்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்கப்பட்டு வருகிறது. நமது நாட்டில் பல இடங்களில் ஞானம் மற்றும் ஆற்றலின் அடையாளமாக மீசை திகழ்ந்து கொண்டிருக்கிறது. பலர் மீசையை தகுதிக்குரியதாகவும் கருதுகிறார்கள். சில நாடுகளில் நீதிபதிகளும், ராணுவதளபதிகளும்தான் மீசை வைத்துக்கொள்வார்கள் என்ற நடைமுறையும் முன்பு இருந்தது.

மெசபட்டோமியா கலாசாரத்தில் மீசை வைத்தவர்கள் உயர் தகுதி கொண்டவர்களாகவும், மீசை இல்லாதவர்கள் அடிமைகளாகவும் கருதப்பட்டிருக்கிறார்கள். எகிப்து போன்ற சில நாடுகளில் ஆட்சி அதிகாரத்தில் இருந் தவர்கள் பிரமாண்டமான செயற்கை மீசையோடு வலம் வந்தார்கள் என்று சரித்திரம் சான்றுரைக்கிறது. அதே நேரத்தில் பழங்கால சீன கிராமங்களில் மீசை வைப்பது பாவத்தின் அடையாளமாக கருதப்பட்டிருக்கிறது. வட அமெரிக்காவில் உள்ள சில பழங்குடி இனங்களில் திருமணத்திற்கு பிறகுதான் மீசை வைத்துக்கொள்ள அனுமதி வழங்குகிறார்கள். கம்பீரத்தின் அடையாளமாக கருதப்படும் மீசையை நினைவில் கொள்ளும்போது ராணுவ வீரர்கள் நமது மனக்கண் முன்னே காட்சி தருவார்கள். அடர்த்தியும், ஆண்மைத்தனமும் நிறைந்த மீசையுடன் அவர்கள் எல்லையை பாதுகாப்பது வீரத்திற்கே எடுத்துக்காட்டாக இருக்கிறது.

இந்தியர்களின் மீசை உலகைக் கவரக்கூடியதாக இருக்கிறது. இங்கிலாந்தை சேர்ந்த ரிச்சர்ட் மெக்லம் என்பவர், இந்தியா முழுவதும் வலம் வந்து இந்தியர்களின் மீசைகளை பற்றிய ருசிகரங்களை வியக்கும் விதத்தில், வித்தியாசமான ஆங்கில புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார். திபெத் எல்லைப்பகுதியில் உள்ள குருமார்கள் வைத்திருக்கும் தெளிந்த நீரோடை போன்ற வெண்தாடி அடங்கிய மீசையும், ராஜஸ்தான் சன்னியாசிகளின் மயில் பீலி அலங்கார ஜடாமுடி மீசையும் மேற்கத்திய நாட்டினரை வெகுவாக கவர்கிறது. தென்னிந்திய வீரப்பன் ஸ்டைல் மீசையும் பிரபலம்தான். கர்நாடகாவில் பலமான மீசைக்காரர்களும் உண்டு. அவர்கள் தங்கள் கடா மீசைகளில் 40 கிலோ எடைகொண்ட பொருட்களையும் கட்டித் தூக்கி பலத்தை காட்டுவார்கள்.

சினிமாவை பொறுத்தவரையில் வட இந்தியாவையும்-தென்இந்தியாவையும் மீசை பிரித்துக்காட்டுகிறது. இந்தி திரை உலகில் கதாநாயகர்கள் பெரும்பாலும் சுத்தமாக ‘ஷேவ்’ செய்யப்பட்ட முகத்தோடு காட்சி தருவார்கள். அவர்கள் அனேகமாக மீசை வைத்துக்கொள்வதில்லை. ஆனால் வில்லனாக தோன்றுபவர்கள் மீசையோடு காட்சி தருவார்கள்.

மீசை பழங்காலத்திலே புகழ்பெற்றிருந்தாலும், இருபதாம் நூற்றாண்டில்தான் அதற்கு அதிக முக்கியத்துவம் கிடைத்தது. அப்போதுதான் மீசையை நேர்த்தியாக்கவும் கச்சிதமாக வளர்க்கவும், அலங்காரப்படுத்தவும் புதுப்புது கருவிகள் உருவாக்கப்பட்டன. டானிக்குகள், மெழுகு, ஜெல் போன்றவைகள் மீசைக்காக உருவாக்கப்பட்டன. ஆனால் 1950 முதல் 1960 வரையிலான காலகட்டத்தில் ஹிப்பி கலாசாரம் சர்வதேச அளவில் பரவியது. அவர்கள் தாடியையும் முடியையும் அப்படியே நீளமாக வளர்த்தார்கள். அதனால் தாடியை நேர்த்தியாக்குவதில் பலரும் ஆர்வம் காட்டாமல் இருந்தார்கள். பின்பு அந்த கலாசாரம் காணாமல் போனது.

ஆனாலும் தற்போது இந்தியர்களுக்கு மீசை மீது ஆசை குறைந்திருப்பதாகவே தெரிகிறது. வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற இந்தியர்களில் பெரும் பாலானவர்கள் தங்கள் மீசையை மழித்துப்போட்டுவிட்டு, ‘கிளன் ஷேவ்’ முகத்தோடு காட்சி தருகிறார்கள். இந்தியர்களின் பாஸ்போர்ட்டுகளில் மீசை இல்லாதவர்களின் எண்ணிக்கையே மிக அதிகமாக இருக்கிறதாம்.

மீசைக்கும்-உடல் ஆரோக்கியத்திற்கும் ஏதாவது விதத்தில் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்தில் மருத்துவரீதியான ஆய்வுகள் நடந்திருக்கின்றன. ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் செய்த ஆராய்ச்சியில் ‘அடர்த்தியான கம்பீர மீசை கொண்ட ஆண்கள் ஆரோக்கியமானவர்களாகவும், இனப்பெருக்கத்திறன் நிறைந்தவர்களாகவும் இருக்கிறார்கள்’ என்று தெரியவந்திருக்கிறது. மீசை வைத்திருப்பவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தவர்கள் என்றும் சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

ஆண்களின் மீசை பற்றி பெண்களிடம் கேட்ட போது அவர்கள் ‘ஆண்களுக்கு மீசை தனிப்பட்ட முறையில் இமேஜை தருவதாகவும், அவர்களது தோற்றம் தங்களை கவர்வதாகவும்’ கூறியிருக்கிறார்கள்.

ஒருவரது மீசையை பார்த்து அவரது குணாதிசயத்தை கணித்துவிடலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. சர்வாதிகாரி ஹிட்லரின் மீசையையும், புன்னகை மன்னன் சார்லி சாப்ளினின் மீசையையும் ஒப்பீடு செய்யும் ஆராய்ச்சியாளர்கள், ‘ஒருவர் கொடுங்கோலன். இன்னொருவர் உலகையே சிரிக்கவைத்தவர்’ என்றும் சொல்கிறார்கள். ஆனாலும் பொதுவாக மீசையை வைத்து குணாதிசயத்தை கணிப்பது கடினம் என்பதே உண்மை. பயம் நிறைந்த சுபாவம் கொண்டவர்கள்கூட அந்த பயத்தை மறைக்க கம்பீரமாக மீசை வைத்துக்கொண்டு உலாவருவதுண்டு என்பது அனுபவஸ்தர்கள் கருத்து.

more details click here !!!

Related Articles

Close