நினைவாற்றலை அதிகரிக்க வேண்டுமா… இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்க.
பொதுவாகவே உடலின் ஏனைய செயற்பாடுகள் அனைத்திற்கும் உறுதுணையாக இருப்பது மூளை தான். மனிதனின் மூளை சரியாக செயற்பட்டால் தான் அவன் சரியான நிலையில் இருக்க முடியும்.
கல்விகற்கும் போதும் சரி வேலைக்கு சென்ற பின்னரும் சரி நினைவாற்றல் மிகவும் முக்கியமான ஒரு விடயமாக கருதப்படுகின்றது. சிலருக்கு அதிகமாக மறதி காணப்படும். மிகவும் சிரமப்பட்டு படிக்க கூடியவர்களும் கூட இந்த நினைவாற்றல் குறைப்பாடு காரணமாக பரீட்சையில் போதிய புள்ளிகளை பெற முடியாமல் போகின்றது.
வேலையிலும் சிறப்பாக செயற்பட முடியாமைக்கு இந்த நினைவாற்றல் குறைப்பாடு காரணமாக அமைகின்றது. நினைவாற்றல் குறைப்பாடு இன்று பலருக்கும் காணப்படும் ஒரு பொதுவான பிரச்சினையாக இருக்கின்றது.
இதற்கு பிரதான காரணம் தவறான உணவுப்பழக்கவழக்கம் தான். நினைவாற்றலை அதிகரிக்க எந்த உணவுகளை சாப்பிடலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்று மூளை. மூளையில் உள்ள நரம்பு செல்கள் சரியாக இருந்தால் தான்.. மனிதன் சாதாரணமாக இருக்க முடியும். மூளையில் எந்த செல்கள் சேதமடைந்தாலும், மூளை சரியாக இயங்காது.
எனவே எப்போதும் மூளை சுறுசுறுப்பாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சமச்சீர் உணவு மற்றும் உடற்பயிற்சி மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
மூளை ஆரோக்கியமாக இருந்தால் பார்கின்சன் நோய், டிமென்ஷியா, அல்சைமர் போன்ற நோய்கள் வராது. நாம் உண்ணும் உணவு மூளையை பாதிக்கிறது. எனவே நமது உணவில் சில திருத்தங்களை மேற்கொள்வது மூளையின் நினைவாற்றல் செயல்பாட்டிற்கு உதவும்.
வால்நட் மூளையை செயல்படுத்தவும், நினைவாற்றலை அதிகரிக்கவும் பெரிதும் உதவுகிறது. வால் நட்ஸ் சாப்பிடுவது நியூரான்களுக்கும் மூளைக்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்துகிறது. எனவே நினைவாற்றலை அதிகரிக்க வால்நட்ஸை உணவில் ஒரு அங்கமாக எடுத்துக் கொள்வது சிறந்த பலனை கொடுக்கும்.
சாக்லேட் சாப்பிடுவதால் நன்மைகள் மற்றும் தீமைகள் உள்ளன. மில்க் சாக்லேட் அல்லது டார்க் சாக்லேட் மூளையை சரியாக வேலை செய்ய உதவுகிறது. மூளை சுறுசுறுப்பாக இருந்தால் செறிவு அதிகரிக்கும். மேலும் சாக்லேட் நினைவாற்றலை அதிகரிக்கும் என ஆய்வுகள் குறிப்பிடுகின்றது.
பச்சை இலை காய்கறிகளில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. பச்சைக் காய்கறிகளை சாப்பிடுவதால் மூளைக்கு தேவையான சக்தி கிடைப்பதுடன் நினைவாற்றல் அதிகரிக்கும். குறிப்பாக வல்லாரை இதற்கு மிகச்சிறந்த தீர்வாக காணப்படுகின்றது.
முட்டை நல்ல ஊட்டச்சத்து உணவு ஆகும். முட்டையில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. மூளை செல்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் சத்துக்கள் முட்டையில் உள்ளது. எனவே இதை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
ஆப்பிள் மற்றும் வாழைப்பழங்களிலும் சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. வாழைப்பழம் மற்றும் ஆப்பிள் மூளை வளர்ச்சி மற்றும் மூளை செயல்பாடுகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இவற்றைத் தொடர்ந்து சாப்பிடுவதால், மூளை சுறுசுறுப்பாக இருப்பது மட்டுமின்றி, ஆரோக்கியமாகவும் இருக்கும்.
டோகோசாஹெக்ஸெனோயிக் அமிலம் அல்லது DHA, குறிப்பாக நினைவுகளை மேம்படுத்த உதவும். ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கடல் உணவுகளில் அதிகளவு காணப்படுகிறது. கடல் உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மூளையின் நினைவாற்றல் அதிகரிக்கின்றது.
மீன் எண்ணெய், கடற்பாசி அல்லது மைக்ரோ ஆல்கா பாசிகள் போன்றவை மாத்திரை வடிவிலும் கிடைக்கிறது. இதுவும் மூளையின் ஆரோக்கியத்திற்கும் நினைவாற்றலை அதிகரிப்பதிலும் துணை புரிகின்றது.