உடல் எடையை குறைக்க உதவும் சிக்கன் ரெசிபீஸ் லிஸ்ட்..!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச்சாப்பிடும் அசைவ உணவுகளில் மிக முக்கியமானது சிக்கன் தான். ஆனால் என்ன சிக்கனில் அதிக கொலஸ்ட்ரால் உள்ளதால் உடல் எடைக்குறைக்கும் முயற்சியில் உள்ளவர்கள் இதை சாப்பிடுவதற்கு நிச்சயம் யோசிப்பார்கள். இனி இந்த கவலை வேண்டாம்.
பட்டர், கிரீம் போன்ற பொருள்களை அதிகளவில் சேர்க்காமல் குறைந்த கலோரிகளுடன் நீங்கள் சிக்கன் ரெசிபிகள் செய்யலாம். இதோ அதற்கான லிஸ்ட் இங்கே..
தஹி சிக்கன் ( Dahi chicken):
தேவையான பொருள்கள்:
சிக்கன்– அரை கிலோ
தயிர் – 2 ½ கப்
சீரக தூள் – 1 டீஸ்பூன்
பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள்- அரை தேக்கரண்டி
மஞ்சள் – ¼ தேக்கரண்டி
கரம் மசாலா – ¼ தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
வெங்காயம் – 2
தக்காளி – 1
கொத்தமல்லி இலை – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – சுவைக்கு ஏற்ப
செய்முறை:
தயிர் சிக்கன் எனப்படும் தஹி சிக்கன் செய்வதற்கு முதலில் கடாயில் தயிரை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் சீரகத்தூள், பூண்டு விழுது, கரம் மசாலா, மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலக்கிக்கொள்ளவும்.
பின்னர் தயிர் கலவையில் சிக்கனைப் போட்டு கலந்து சுமார் அரை மணி நேரமாவது ஊற வைக்க வேண்டும்.
இதையடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். இப்போது ஊறவைத்துள்ள சிக்கன் கலவை மற்றும் சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து வேக வைத்தால் போதும் சுவையான தஹி சிக்கன் ரெடி.
பட்டர் சிக்கன் (Low-fat butter chicken):
தேவையான பொருள்கள்:
சிக்கன் – 400 கிராம்
பெரிய வெங்காயம் – 4
இலவங்கபட்டை, கிராம்பு– சிறிதளவு
பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
ஏலக்காய் – 5
தக்காளி – 4
மிளகாய் தூள் – அரை டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் – ¼ டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 4
தயிர் – ¼ கப்
எண்ணெய் – 2 தேக்கரண்டி
செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நீளமாக துண்டுகளாக வெட்டப்பட்ட வெங்காயம், இலவங்கபட்டை, ஏலக்காய் மற்றும் பூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
பின்னர் நறுக்கிய தக்காளி மற்றும் தயிர் சேர்த்து ஒரு பிளெண்டரில் சேர்த்து நல்ல பேஸ்ட் போலாக்கி கொள்ள வேண்டும்.
இதையடுத்து கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சிக்கனை நன்கு வதக்கவும். ஓரளவிற்கு வெந்ததும் அரைத்து வைத்துள்ள மசாலாவைச் சேர்க்க வேண்டும். இதோடு தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கிளறிவிடவும். இறுதியில் சிறிதளவு வெண்ணெய் சேர்த்தால் போதும் சுவையான பட்டர் சிக்கன் ரெடி.
சிக்கன் டாங்கிரி ( Chicken tangri):
தேவையான பொருள்கள்:
லெக் பீஸ் சிக்கன் துண்டுகள்– 6
இஞ்சி பூண்டு விழுது – 2 ½ தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 1
கொத்தமல்லி இலைகள் – சிறிதளவு
உப்பு – சுவைக்கு ஏற்ப
எண்ணெய் – சிறிதளவு
செய்முறை:
முதலில் இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், கொத்தமல்லி இலைகள் போன்றவற்றை சேர்த்து பேஸ்ட் போன்று நன்றாக அரைத்து கொள்ளவும். தற்போது நீங்கள் தயார் செய்து வைத்துள்ள மசாலாவை லெக் பீஸில் தடவ வேண்டும்.
இதையடுத்து சுமார் 3-4 மணி நேரமாவது மசாலா பிடிக்கும் வரை பிரிட்ஜிலோ அல்லது வெளியிலோ வைத்திருக்க வேண்டும்.
இறுதியில் அடுப்பில் எப்போதும் போல தந்தூரி சுடுவது போன்று சுட்டெடுத்தால் போதும் சுவையான சிக்கன் டாங்கிரி ரெடி.