டீ அல்லது காஃபி அருந்தும் முன் தண்ணீர் குடிக்க வேண்டுமா..? நிபுணர்களின் கருத்து…
பெரும்பாலான இந்தியர்களுக்கு டீ மற்றும் காஃபி மிகவும் பிடித்த பானங்களாக இருக்கின்றன. காலை எழுந்தவுடன் இந்த இரண்டில் ஒன்றை குடித்தால் தான் அவர்களது நாள் நகரும். அதே போல நாம் டென்ஷன் மற்றும் ஸ்ட்ரெஸ்ஸில் இருக்கும் போதெல்லாம் டீ அல்லது காஃபியை குடிக்க விரும்புகிறோம்.
வீட்டிற்கு உறவினர்கள் அல்லது நண்பர்கள் வந்தால் உடனடியாக நாம் கொடுப்பது காஃபி அல்லது டீ தான். சிலர் காலை எழுந்ததிலிருந்து இரவு மீண்டும் தூங்க செல்வதற்குள் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை காஃபி அல்லது டீ-யை குடிக்க விரும்புகிறார்கள். இருப்பினும் இந்த இரண்டு பானங்களுமே அமிலத்தன்மை கொண்டவை. மேலும் இந்த இரண்டுமே வயிற்றில் வாயு மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும் என்பது பெரும்பாலானோருக்கு தெரியாது. எனவே அதிகமாக டீ அல்லது காஃபி குடிப்பது நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
சிலர் டீ அல்லது காஃபி குடிக்கும் முன், அதன் அசிட்டிக் தன்மையை குறைக்க சிறிதளவு தண்ணீரை குடிக்கும் பழக்கத்தை கடைபிடித்து வருகிறார்கள். பெங்களூரு அப்பல்லோ மருத்துவமனையின் தலைமை மருத்துவ ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் பிரியங்கா ரோஹத்கி இது குறித்த சில விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
டீ, காஃபி எடுக்கும் முன் தண்ணீர் குடிப்பது ரிஸ்க்கை குறைக்குமா.!!
டாக்டர் பிரியங்கா ரோஹத்கி பேசுகையில் டீ-யின் அமில தன்மை பற்றி வெகு சிலரே அறிந்திருக்கிறார்கள். அதாவது இந்த பானத்தை குடிக்கும் போது வயிற்றில் வாயுவை உருவாக்குகிறது. அதே போல டீ மற்றும் காஃபி இரண்டுமே வயிற்றில் அமிலத்தை உருவாக்குகின்றன. டீ-யின் pH மதிப்பு 6-ஆகவும், காஃபியின் pH மதிப்பு 5 ஆகவும் உள்ளது. இவற்றை அதிக அளவில் எடுத்து கொண்டால், புற்றுநோய் அல்லது அல்சர் போன்ற சில அபாயகரமான நோய்களின் அபாயம் அதிகரிக்கலாம். ஆனால் டீ குடிப்பதற்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்தால், அதன் அமில விளைவுகளால் ஏற்படும் பாதிப்பை குறைக்கலாம். டீ அருந்துவதற்கு முன் தண்ணீர் குடிப்பதால் குடலில் ஒரு லேயர் உருவாகிறது. இந்த லேயர் டீ குடிப்பதால் ஏற்படும் அமில விளைவை குறைக்கிறது என்றார்.
டீ-யின் தீமை விளைவுகள்: டீ மற்றும் காஃபியில் Tannin என்ற கலவை காணப்படுகிறது. இது இந்த 2 பானங்களுக்கும் கசப்பான சுவையை ஏற்படுத்துகிறது. இந்த பொருள் இருப்பதன் காரணமாகவே டீ அல்லது காஃபி குடிக்கும் போது ஒருவர் மிதமான intoxication-யை உணர்கிறார். மேலும் Tannin குடல் திசுக்களை சேதப்படுத்துகிறது. இதனால் வயிறு சம்பந்தமான பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. குமட்டல், வாந்தி, வயிற்று வலி போன்ற பிரச்சனைகளையும் இது ஏற்படுத்தும்.
மேலும் வாய் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு டீ தீங்கு விளைவிக்கும். ஆயினும்கூட இந்த எதிர்மறை விளைவுகள் அனைத்துமே ஒரு நாளில் நாம் எவ்வளவு டீ குடிக்கிறோம் என்பதை பொறுத்தது. டீ குடிக்கும் முன் தண்ணீர் குடிப்பது உடலின் PH பேலன்ஸை பராமரிக்க உதவுகிறது.
மேலும் தண்ணீர் வாயில் உள்ள பாக்டீரியாக்களை சுத்தப்படுத்துகிறது, ஏனெனில் குடிநீர் வாயில் ஒரு லேயரை உருவாக்கி பக்க விளைவுகளை குறைக்கிறது. எனவே டீ அல்லது காஃபி குடிப்பதற்கு சுமார் 15 நிமிடங்களுக்கு முன் தண்ணீர் குடித்தால், அது இந்த பானங்களில் உள்ள அமிலத்தை நீர்த்துப்போக செய்யும் என்கிறார் டாக்டர் பிரியங்கா.