ஆரோக்கியம்புதியவை

எச்சரிக்கை! இந்த விஷயங்கள் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்குமாம்… உஷாரா இருங்க..

எச்சரிக்கை! இந்த விஷயங்கள் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்குமாம்... உஷாரா இருங்க..

கொலஸ்ட்ராலில் நல்ல கொலஸ்ட்ரால், கெட்ட கொலஸ்ட்ரால் என இரு வகைகள் உள்ளன. இதில் நல்ல கொலஸ்ட்ரால் உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு இன்றியமையாதது. ஆனால் கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் அதிகளவில் இருந்தால், அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் நோய்களின் அபாயத்தை அதிகரித்துவிடும். அடர்த்தி குறைவான கொழுப்பு புரோட்டீன் தான் கெட்ட கொலஸ்ட்ரால் என்று அழைக்கப்படுகிறது. இந்த கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் அதிகமாக இருக்கும் போது, அது பெருந்தமனி தடிப்பு நோய் என்னும் பிரச்சனையின் அபாயத்தை அதிகரிக்கிறது. பெருந்தமனி தடிப்பு நோய் என்பது இதயத்திற்கு செல்லும் இரத்தக்குழாய்களில் கொலஸ்ட்ரால், கால்சியம் மற்றும் இரத்த வெள்ளையணுக்கள் சேர்ந்து ப்ளேக்குகளை உருவாக்கும் நிலைமையாகும்.

ஒருவர் தங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தாமல் இருந்தால், இதய நோய், பக்கவாதம், பெருந்தமனி தடிப்பு போன்ற ஆபத்தான சிக்கல்களை சந்திக்க நேரிடும். உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கு பின்னால் இருக்கும் சில முக்கிய காரணங்கள் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

மோசமான உணவுப் பழக்கம்
நிறைவுற்ற கொழுப்பு அல்லது ட்ரான்ஸ் கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை உண்பது ஒருவரது கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும் என்பது தெரியுமா? இந்த சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் முழு கொழுப்புள்ள பால் பொருட்களில் நிறைந்துள்ளன. மேலும் இனிப்புக்கள் அல்லது எண்ணெயில் பொரித்த ஸ்நாக்ஸ்களில் ட்ரான்ஸ் கொழுப்புக்கள் உள்ளன. எனவே இந்த உணவுகளை அதிகம் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.
உடல் பருமன்
ஒருவர் தங்களின் உயரத்தை விட அதிக உடல் எடையுடன் இருந்தால், அது உடலில் அதிக கொலஸ்ட்ரால் ஏற்படும் வாய்ப்புக்களை அதிகரிக்கும். எனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை வரக்கூடாது என்று விரும்பினால், உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ளும் முயற்சியில் ஒவ்வொருவருமே ஈடுபட வேண்டும்.
உடற்பயிற்சியின்மை
நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்யமாட்டீர்களா? அப்படியானால் நீங்கள் மிகப்பெரிய தவறை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். உடற்பயிற்சி ஒருவரை நல்ல வடிவத்துடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. தினமும் உடற்பயிற்சி செய்வதால் உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்த உதவுகிறது.
புகைப்பிடிப்பது
புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதை அனைவருமே அறிவோம். குறிப்பாக இப்பழக்கம் புற்றுநோய் மற்றும் இதய பிரச்சனைகளை உண்டாக்கும். இது தவிர உடலில் கெட்ட கொலஸட்ரால் அதிகரிக்க வழிவகுக்கும்.
மது அருந்துவது
மது அருந்துவதும் உடல் நலத்தை பாதிக்கும். சொல்லப்போனால் மது அருந்துவதால் சிறுநீரக நோய் மட்டுமின்றி, உடலில் கொலஸ்ட்ரால் அளவும் அதிகரிக்கும். எனவே கொலஸ்ட்ரால் பிரச்சனையைத் தவிர்க்க மது அருந்துவதை முதலில் தவிர்க்க வேண்டும்.
வயது
தற்போது 40 வயதிற்கு மேற்பட்டவர்களிடையே அதிக கொலஸ்ட்ரால் காணப்படுகிறது. ஏனெனில் வயது அதிகரிக்கும் போது, கல்லீரலால் சரியாக செயல்பட முடியாமல் போவதோடு, கெட்ட கொலஸ்ட்ராலை அகற்ற முடியாமல் போகிறது. இதன் விளைவாக உடலில் அதிக கொலஸ்ட்ரால் சேர்ந்து பிரச்சனையை உண்டாக்குகிறது.
குடும்ப வரலாறு
ஒருவரது குடும்பத்தில் யாருக்கேனும் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை இருந்தால், அக்குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் சற்று அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இவர்களுக்கு உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது.
குறிப்பிட்ட மருந்துகள்
நாம் எடுக்கும் சில மருந்துகள் உடலில் ட்ரைகிளிசரைடுகளின் அளவை அதிகரிக்கும். எனவே எந்த ஒரு மருந்தை எடுப்பதாக இருந்தாலும், மருத்துவரின் ஆலோசனைக்கு பின்னரே எடுக்க வேண்டும்.
மன அழுத்தம்
ஒருவர் அதிக மன அழுத்தத்தில் இருக்கும் போது, புகைப்பிடிப்பது அல்லது மது அருந்துவது போன்ற கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகிவிடுகிறார்கள். இப்பழக்கங்கள் நாளடைவில் உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோய்களின் அபாயத்தை அதிகரித்துவிடும்.
ஹைப்போதைராய்டிசம் மற்றும் சர்க்கரை நோய்
ஹைப்போதைராய்டிசம் மற்றும் சர்க்கரை நோய் ஆகிய இரண்டு பிரச்சனைகளுமே தற்போது பெரும்பாலானோர் அவதிப்பட்டு வரும் உடல் கோளாறுகளாகும். இந்த இரண்டு பிரச்சனையும் இருந்தால், அது உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்துவிடும். எனவே இத்தகையவர்கள் உணவில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker