உறவுகள்உலக நடப்புகள்புதியவை

பெண்களே காதலரை தேர்வு செய்யும் போது இந்த விஷயங்களை மறக்காதீங்க…

பெண்களே காதலரை தேர்வு செய்யும் போது இந்த விஷயங்களை மறக்காதீங்க...

பெண்களே காதலரை தேர்வு செய்யும் போது இந்த விஷயங்களை மறக்காதீங்க…
காதலித்துக் கொண்டிருக்கும் பெண்களும் சில கேள்விகளுக்கு கட்டாயம் விடை காணவேண்டும். அவை என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.

நீங்கள் வாழ்க்கையில் எத்தனையோ இளைஞர்களை சந்தித்திருப்பீர்கள். அப்படி இருக்கும்போது `குறிப்பிட்ட அந்த இளைஞர் மீது மட்டும் உங்களுக்கு காதல் வர என்ன காரணம்?’- என்ற கேள்விக்கு முதலில் விடைகாணுங்கள். அதாவது கையில் இருக்கும் ஸ்மார்ட்போனை மாற்றுவதுபோல் மாற்றக்கூடியதல்ல காதல் என்பதை எப்போதும் நினைவில் வைத்திருங்கள். பொழுதுபோக்குக்காக காதலித்துக்கொண்டிருந்தால் அதனால் உருவாகும் ஆபத்தை நீங்கள் சந்திக்கவேண்டியதாகி விடும். அடிக்கடி உணர்ச்சிவசப்படும் ஒருவரை நீங்கள் காதலித்துக்கொண்டிருந்தால், ஒருவேளை நீங்கள் பிரிந்துபோகும் சூழ்நிலை ஏற்பட்டால் அவர் அப்போது எப்படி எதிர்வினையாற்றுவார் என்பதை நினைத்துப் பார்த்துக்கொள்ளுங்கள்.

`காதலிக்கும் அந்த நபர்தான் உங்கள் உயிர், உலகம். அவர் இல்லாவிட்டால் தன்னால் வாழவே முடியாது’ என்ற நிலையில் ஒருபோதும் இருந்துகொண்டிருக்காதீர்கள். காதலுக்கு கண் இல்லை என்பார்கள். அதை நிரூபிக்கும் விதத்தில் பொறுப்பற்ற முறையில் கண்மூடித்தனமாக யாரையும் காதலித்து விடாதீர்கள். தெளிவான சிந்தனை கலந்த பார்வையோடு உங்கள் காதலரை ஆய்வுசெய்யுங்கள்.

காதலரை பற்றி முழுமையாக அறிந்துகொள்ளும் அதே நேரத்தில் உங்கள் இயல்பான சுபாவம் எப்படிப்பட்டது என்பதையும் அவருக்கு உணர்த்திவிடுங்கள். இயற்கையான உங்கள் குணாதிசயத்தை மறைத்துக்கொண்டு அவரது எதிர்பார்ப்புக்கு தக்கபடி உங்களை மாற்றி பழகிக்கொண்டிருப்பது குறுகிய கால காதல் பயணத்திற்கே கைகொடுக்கும். காதலுக்காக உங்கள் தனித்துவத்தை இழக்க ஒருபோதும் சம்மதித்துவிடக்கூடாது.

காதலுக்கும்-காமத்திற்கும் உள்ள வேறுபாட்டை பெண்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். இளமை முறுக்கில் ஆண்கள் காதலில் அதிகாரத்தை நிலைநாட்ட முயற்சிப்பார்கள். கீழ்ப்படுத்தவும் முயற்சிப்பார்கள். அப்போதெல்லாம் பெண்கள் விட்டுக்கொடுப்பவர்களாகவும், ஆணுக்கு அனுசரித்துப்போகிறவர்களாகவும் மாறிவிடக்கூடாது. அது சரியான காதலுக்கு பொருத்தமானதல்ல.

பெண்ணும், ஆணும் காதலிக்கும்போது ஒரு சில விஷயங்களில் `முடியவே முடியாது’ என்று சொல்லவேண்டியிருக்கும். `நோ’ சொல்லவேண்டிய அந்த விஷயங்களுக்கு `நோ’ சொல்வதுதான் பெண்களுக்கு பெருமை. எத்தனை உதாரணங்களை சொன்னாலும் உங்கள் மனசாட்சி தவறு என்று சொல்வது, தவறான செயல்தான் என்பதை புரிந்துகொள்ளுங்கள். அன்பின் பெயரில் நடக்கும் அத்துமீறல் எந்த வடிவில் வந்தாலும் அதற்கு இடம்கொடுத்துவிடக்கூடாது.

`அவர் சிறிது காலம் என் பின்னாலே நடந்தார். நான் காதலிக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக சொன்னார். அதனால் நான் அவரை தற்போது காதலித்துக்கொண்டிருக்கிறேன்’ என்று நீங்கள் சொன்னால், தவறான காதலரை தேர்ந்தெடுத்துவிட்டீர்கள் என்று அர்த்தம். எமோஷனல் பிளாக்மெயிலிங் செய்து கட்டாயமாக காதலிக்கவைப்பவர்களிடம் இருந்து அகன்றுவிடுங்கள். அவர்கள் உங்களிடம் ஒவ்வொரு முறையும் காரியம் சாதிக்கவும் தற்கொலை நாடகமாடுவார்கள்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker