இளமைப்பருவம் குழந்தை பருவம்போன்று இயல்பான பருவம் அல்ல
ஒவ்வொரு குழந்தையும் வளர்ந்து வருகின்ற பொழுது தன்னைச் சுற்றியுள்ள இளைஞர்களை முன் மாதிரியாக எடுத்துக்கொள்ளத் துடிக்கிறார்கள். அவர்களின் செயல்பாடுகளை ஆராய்ந்து பார்க்கின்றனர்.
ஒவ்வொரு இளைஞனும் தன்னையறிந்து கொள்ளும் போது வாழ்வில் வெற்றி பெறுகிறான். அதன்பின் தனது தேசத்தின் பண்பாடு, கலாசாரங்களைப் புரிந்துகொண்டு, அதன்படி நடக்கிறபோது அவ்விளைஞனால் அந்நாடும் பெருமையடைகிறது. இளைஞர்கள் ஒவ்வொவரும் நம் தேசத்தின் தூண்கள்; நம்பிக்கை நாயகர்கள், ஆற்றலின் அற்புதங்கள்; முயற்சியின் முழுவடிவங்கள்; சாதிக்கும் அக்னிக் குஞ்சுகள்; சிந்தனைகளைச் சிலைகளாக்கும் சிற்பிகள்; புதிய சரித்திரம் படைக்கும் கதாப்பாத்திரங்கள், மொத்தத்தில் அளப்பரிய மனித வடிவங்கள்.
மாணவப் பருவத்தில் மாணவ ராக்கெட்டுகள் பள்ளி என்னும் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்படுகின்றனர். பின்னர் அவர்கள் ஒவ்வொருவரும் விண்ணில் சீறிப்பாயும் ராக்கெட்டுகளாக வெளிவருகின்றனர். சரியான வேகத்தில் பாய்ந்து, விண்வெளியை அடைந்து, அதன் சுற்றுப்பாதையில் சுற்றும் செயற்கைக் கோள்களை போல் தங்களது இலக்குகளை சரியாக அடைகின்ற இளைஞர்களே வாழ்வில் வெற்றி வாகை சூடுகிறார்கள். அவ்வாறில்லாமல், இளமைப் பருவத்திலேயே போதைப் பொருட்களுக்கு அடிமையாகுதல், தீய நண்பர்களிடம் நட்புக்கொள்ளுதல், லட்சியமின்றி சோம்பியிருத்தல் போன்ற செயல்பாடுகளால் அற்புதமான இளமைப்பருவம் அலங்கோலப்படுவது வேதனையே.
இளமைப்பருவம் குழந்தை பருவம்போன்று இயல்பான பருவம் அல்ல. அது ஓர் ஈடில்லாத இன்றியமையாத பருவம். தீயவற்றை ஒதுக்கி, நல்லவற்றை நாடிச் செல்லவேண்டிய நற்பருவம். நதிகளின் வாழ்க்கையைப் போன்றுதான் மனிதனின் வாழ்க்கையும். அதில் துள்ளி வரும் நீர்வீழ்ச்சியைப் போன்றது இளமைப் பருவம். நீர்வீழ்ச்சியின் ஆற்றல் அளப்பரியது. அது கரடு முரடான மலைகளில் தனக்கென்று ஒரு பாதையை உருவாக்கும். இளமைப் பருவமும் தன் முன்னே இருக்கின்ற பிரச்சினைகளைக் கடந்து வெற்றிவாகை சூடும் இயல்புடையது. எனவே, யார் ஒருவர் அத்தகைய ஆற்றலை நல்வழியில் செயல்படுத்துகிறாரோ அவர் வெற்றியாளராகின்றார்.
இளமையில் துடிப்போடும், ஆற்றலோடும், அறிவுத்திறனோடும் இருப்பவர்களே எதிர்காலத்தில் ஞானியாகவும், புகழ்பெற்றவர்களாகவும் திகழ்கிறார்கள். ஒரு நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது அந்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியே. ஆரோக்கியமான திடமான, அறிவான இளைஞர்கள் ஒரு நாட்டினுடைய மிகப்பெரிய பலமாகும்.
1999-ம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச இளைஞர் தினத்தை ஆகஸ்டு 12-ம் நாளாக கொண்டாடுகிறது. இந்த வருடம் “இளைஞர்கள் இடம் பெயர்தல், வளர்ச்சியை நோக்கி முன்னேறுதல்” என்பதே இவ்வாண்டின் மையக்கருத்தாகும்.
எனவே, “சென்றிடுவீர் எட்டுத்திக்கும், கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்” என்ற மகாகவி பாரதியின் வரிகளுக்கேற்ப ஒவ்வொரு இளைஞரும் உலகலாவிய பயணம் அடைதல் அவசியம். அதன் மூலமே ஒரு தனி மனிதனின் உயர்வோடு தேசமும் உயரும். பணத்தினைச் சேர்க்கும் அவசரத்தில் நம் பண்பாட்டினை தொலைத்து விடாமல் இருப்பவர்களே தேசத்தின் தூதுவர்களாகின்றனர். பணிக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும்போது மகாத்மா காந்தியைப் போல், “தனது குடும்பத்திற்கும், பெற்றோருக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் செயல்களைச் செய்யாமலிருப்பேன் என்றும், நம் தேசத்தின் கலாசாரத்திற்கும் பண்பாட்டிற்கும் புறம்பாக எச்செயல்களையும் புரியமாட்டேன் என்று உறுதியோடு செல்பவர்கள்” உயர்வு பெறுகின்றனர்.
ஒவ்வொரு இளைஞனும் ஓராயிரம் குழந்தைகளின் புத்தகமாகத் திகழ்கிறார்கள். ஒவ்வொரு குழந்தையும் வளர்ந்து வருகின்ற பொழுது தன்னைச் சுற்றியுள்ள இளைஞர்களை முன் மாதிரியாக எடுத்துக்கொள்ளத் துடிக்கிறார்கள். அவர்களின் செயல்பாடுகளை ஆராய்ந்து பார்க்கின்றனர். எந்த ஓர் இளைஞர் அக்குழந்தைகளின்மீது தாக்கத்தை உருவாக்குகிறாரோ அவர்களின் சாயலாகவே அக்குழந்தை சமுதாயத்தில் உருப்பெறுகிறது. எனவே, நல்லவர்களாகவும், ஒழுக்கமுற்றவராகவும் வாழவேண்டியது ஒவ்வொரு இளைஞனின் கடமையாகிறது.
ஒவ்வொரு இளைஞனும் உயர்வினில் இமயமாய், உழைப்பினால் சோர்வடையாத மகா நதியாய், அறிவினில் மகாசமுத்திரமாய், ஆற்றலில் ஒளிவிடும் சூரியனாய், அன்பினில் குளிரும் நிலவாய், போர்க்குணத்தில் ஒரு சூறைக் காற்றாய், நற்சிந்தனைகளைப் பரவவிடும் மெல்லிய தென்றலாய், இம்மண்ணில் வரும்போது மானுடம் உயர்வு பெறும்.