உறவுகள்

கருத்தரிப்பு: விஞ்ஞானபூர்வமான உண்மைகள்

மனைவியின் சினைமுட்டையும், கணவரின் உயிரணுவும் சந்தித்து இணைவது என்பது மிகவும் கடினமான ஒன்றாகவே இருக்கிறது. அது பற்றி விரிவாக பார்ப்போம்!

கணவன்- மனைவி இடையேயான தாம்பத்ய வாழ்க்கையில் கருவுறுதல் என்பது மிக உன்னதமான நிகழ்வு. ஆணும் பெண்ணும் சந்தித்து காதல் வசப்படுவது கூட மிகச் சுலபமாக இருக்கலாம். ஆனால் மனைவியின் சினைமுட்டையும், கணவரின் உயிரணுவும் சந்தித்து இணைவது என்பது மிகவும் கடினமான ஒன்றாகவே இருக்கிறது. அது பற்றி விரிவாக பார்ப்போம்!

பெண்ணின் சினைமுட்டைதான் உடலிலேயே மிகப்பெரிய செல். அது, சினைப்பையில் உள்ள ‘யோக் சாக்’ என்ற பையில் ‘பிரைமார்டியல் ஜெர்ம் செல்கள்’ என்ற தொடக்க கருவணுக் கூடுகளாக உருவாகி, வளர்ந்து, முதிர்ந்து இரண்டு வாரத்துக்குப் பிறகு கருப்பையை நோக்கி நகர்ந்து வரும். சினைப்பையில் இருந்து வரும் முட்டையை சுமார் நான்கு மணி நேரம் வரை காத்திருக்க வைத்து, கருக்குழாய் தன்னுள் இழுத்துக்கொள்ளும். அடுத்த நிகழ்வாக, சினைமுட்டை உயிரணுவுக்காக காத்திருக்கும். சினைமுட்டையை கருமுட்டையாக்குவதற்காகக் கோடிக் கணக்கான உயிரணுக்கள் போட்டிபோட்டுக்கொண்டு ஓடிவரும்போது, அவை பல தடைகளைத் தாண்டவேண்டி இருக்கும். முதல் தடை, பெண்ணின் உறுப்புப் பகுதியில் உள்ள அமிலங்கள். இந்த அமிலங்கள் சுமார் 50 சதவீத அணுக்களைக் கொன்று குவித்துவிடும். இதைக் கடந்துவரும் அணுக்களை, கருப்பை உறுப்புகளைப் பாதுகாப்பதற்காகக் காத்திருக்கும் வெள்ளை அணுக்கள் கொன்றுவிடுகின்றன. இதையும் தாண்டிப்போகும்போது, கருப்பை வாய்ப்பகுதியில் உள்ள சளிச் சுரப்பு அவற்றை மிதக்க வைத்துவிடும்.

கருப்பை சளிச் சுரப்பில் மிதக்க ஆரம்பித்ததும், ஏற்கனவே பாதிக்கப்பட்ட அணுக்கள் இறந்துவிடும். நூறு, இருநூறு அணுக்கள் மட்டுமே மிஞ்சும். இவை ஒருவழியாக சினைமுட்டையை அடைந்ததும், அதைத் துளைக்க ஆரம்பிக்கும். முட்டையின் மேல் அடுக்கு ‘ஜோனா பெலுசிடா’ என்ற பசையால் ஆனது. இதைத் துளைத்தாலும் அதற்கு அடுத்த அடுக்கான ‘க்யூமுலஸ் ஊபோரஸ்’ என்ற அடுக்கையும் துளைக்க வேண்டி இருக்கும். இதற்குள்ளாகவே பல அணுக்கள் களைத்துவிடும்.

முட்டையின் எந்தப் பகுதியை எந்த அணு முதலில் துளைக்கிறதோ அது உள்ளே நுழைந்துவிடும். உடனடியாக சினைமுட்டையானது தனது வழியை அடைத்துக்கொள்ளும். மற்ற உயிரணுக்கள் ஏமாந்து இறந்துவிடுகின்றன. ஒருவழியாக இப்படி முட்டைக்குள் நுழைந்த உயிரணு தன்னுள் உள்ள 23 குரோமோசோம்களை, முட்டையில் உள்ள 23 குரோமோசோம்களுடன் இணைத்து தன்னை ஒரு புதிய உயிராக வளர்த்துக்கொள்ள முற்படும்.

இவ்வாறு சினைமுட்டையுடன் உயிரணு இணைந்து கருமுட்டையாக உருவாகும். இவை அனைத்தும் கருக்குழாயில் நடைபெறும். இது நடைபெற்ற ஐந்து நாள்களுக்குப் பிறகே கருப்பைக்கு கருமுட்டை வருகிறது. அங்கு அது பதியமாவதற்கு தேவையான சூழல்கள் அனைத்தும் உருவாக்கப்பட்டிருக்கும்.

கருப்பைக்குள் பதியமான கருமுட்டை, முதல் 24 மணி நேரத்தில் இரண்டு செல்களாகும். அந்த இரண்டு செல்களும் பதினைந்து மணி நேரத்துக்கு ஒருமுறை பிரிந்து தனித்தனி இரண்டு செல்களாக மாறும். இவ்வாறு இரண்டு நாள்களில் எட்டு செல்கள் உருவாகும். இந்த செல்கள் அனைத்தையும் தனித்தனியே எடுத்து வளர்த்தால் எட்டு குழந்தைகளை உருவாக்கலாம். இந்த சிறப்புச் செல்களுக்கு ‘டோட்டி பொடன்சியல் செல்கள்’ என்று பெயர். இவ்வாறு தனித்தனியாகப் பிரிந்து 90 மணி நேரத்துக்குள் 64 செல்களாகும்.

இத்தனை செல்களும் ஏறக்குறைய கருப்பைக் குழாய்க்குள் இருக்கும்போதே பிரிந்துவிடுகின்றன. அதன் பிறகே 96 மணி நேரத்தில் கருப்பையை நோக்கி வருகின்றன. இந்த செல்களில் 85 சதவீத செல்கள் குழந்தை வளர்வதற்கு உரிய அடுக்குகளாகவும், மற்ற 15 சதவீத செல்கள் கருக்குழந்தையாகவும் மாறும். கருப்பையை வந்து அடைந்தவுடன் உடனே அதன் உள்வரிச் சவ்வில் ஒட்டிக்கொள்ளாமல் இரண்டு மூன்று நாள்கள் மிதந்து கொண்டிருக்கும். ஆறு அல்லது ஏழாவது நாள் வாக்கில் ஹியூமன் கோரியோனிக் கொனடோட்ரோபின் ஹார்மோன் உதவியால் கருப்பையுடன், முட்டை பதியமாகி ஒட்டி வளரும். இதையே பெண் தாய்மையடைந்துவிட்டாள் என்று சொல்கிறோம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker