சிவ சக்தி ஐக்கிய தியான முறை
நம் உடலில் இந்த சிவசக்தி இணைய வேண்டும். அதற்கு பாலம் நம் முதுகுத்தண்டுதான். அதற்குள் உள்ள சக்கரங்கள் வழியாக பிராணனை இணைக்க வேண்டும். அது எப்படி என்பதைப் பார்ப்போம்.
மனித உடலில் முக்கியமான சக்கரங்கள் உள்ளன. அந்த சக்கரங்கள் நமது முதுகெலும்பை மையமாக கொண்டு இயங்குகின்றது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியவை மனிதனின் முதுகெலும்பு திடமாக இருக்க வேண்டும். அதற்கு மனிதர்கள் தினமும் யோகாசனங்களை பயில வேண்டும். எல்லா ஆசனங்களையும் பயில வேண்டும் என்பதில்லை. குறிப்பாக பாதஹஸ்த ஆசனம், பச்சி மோஸ்தாசனம், புஜங்காசனம் இந்த மூன்றையும் தினம் ஒரு நிமிடம் செய்தாலே போதும். நம் உடம்பில் உள்ள சக்கரங்களை நாம் சிந்திப்போம்.
மூலாதாரச் சக்கரம்- முதுகுத்தண்டின் அடி உள் பகுதி (சக்தி) சுவாதிஷ்டானச் சக்கரம்- முதுகுத்தண்டின் அடிப்பகுதியிலிருந்து 4” மேல்.
மணிபூரகச் சக்கரம்- வயிற்று உள் பகுதி, அதற்கு நேராக பின்புறமிருக்கும் முதுகுத்தண்டு.
அனாகதச் சக்கரம்- இருதயம் அதற்கு நேராக பின்புற முதுகுத்தண்டு.
விசுக்தி சக்கரம்- தொண்டை உள் பகுதி அதற்கு நேராக பின்புறமுள்ள முதுகுத்தண்டு.
ஆஞ்ஞை சக்கரம் – நெற்றிப்பொட்டு (சதாசிவம்).
பாருங்கள், மூலாதாரச் சக்கரம் சக்தி என்றால் ஆஞ்ஞை சக்கரம் சதாசிவம். இந்த சிவசக்தி நம் உடலில் இணைய வேண்டும். இணைந்தால் அது சிவசக்தி ஐக்கிய யோகதியானமாகும். அப்படி இணைந்தால் மனிதன் அளவிடற்கரிய சக்தியை பெறுகின்றான். தன் கர்ம வினைகள் அழிக்கப்படுகின்றன. பேரானந்தம் அடைகின்றான். ஆரோக்கிய உடலைப் பெறுகின்றான். எல்லா உடல் பிணிகளும் நீங்குகின்றன. செல்வச்செழிப்புடன் நல்ல புகழுடன் வாழ்வான். மற்றவர்களையும் அப்படி வாழ வழி வகுக்கும் சக்தியையும் பெறுகின்றான்.
சிவசக்தி தியான முறை:
ஒரு விரிப்பில் கிழக்கு நோக்கி நேராக அமர்ந்து கொள்ளுங்கள்.
முதுகெலும்பு நேராக இருக்குமாறு அமர வேண்டும்.
கண்களை மூடிக் கொள்ளவும்.
இரு நாசி வழியாக மூச்சை உள் இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும்.
ஒரு ஐந்து நிமிடம் இவ்வாறு செய்யவும்.
பின் உங்கள் மனதை முதல் சக்கரமான மூலாதாரத்தில் முதுகுத்தண்டின் கடைசி உள் பகுதியில் நிலை நிறுத்தவும்.
இரண்டு நிமிடம் உங்கள் மூச்சோட்டத்தை அந்த இடத்தில் வைத்து தியானிக்கவும்.
பின் அடுத்த சக்கரம் சுவாதிஷ்டானம். அதில் உங்களது மனதை இரண்டு நிமிடம் நிறுத்தி மூச்சோட்டத்தை தியானிக்கவும்.
பின்னர் மணிபூரக சக்கரத்தில் உங்களது மூச்சோட்டத்தை இரண்டு நிமிடம் தியானிக்கவும்.
அதன் பின் அனாகதச் சக்கரத்தில் உங்கள் மனதை நிறுத்தி மூச்சோட்டத்தை தியானிக்கவும்.
பின் விசுக்தி சக்கரபகுதியில் உங்கள் மனதை நிறுத்தி தியானிக்கவும். மூச்சோட்டத்தை 2 நிமிடம் தியானிக்கவும்.
பின் ஆஞ்ஞை சக்கரம். நெற்றிப் புருவமத்தியில் உங்களது மூச்சோட்டத்தை நிறுத்தி ஐந்து நிமிட்டங்கள் தியானிக்கவும்.
பின் உங்கள் மனதை (மூச்சோட்டத்தை) கழுத்து முதுகெலும்பில் 30 விநாடிகள் நிறுத்தவும். பின் நடு முதுகெலும்பில் 30 விநாடிகள் நிறுத்தவும். பின் முதலில் ஆரம்பித்த மூலாதாரச் சக்கரம் அடி முதுகெலும்பில் 30 விநாடிகள் நிறுத்தி “ஓம் சாந்தி” மூன்று முறைகள் கூறி கண்களை திறந்து தியானத்தை நிறைவு செய்யவும்.
பலன்கள்:
ஒவ்வொரு மனிதரும் காலை, மாலை இந்த சிவசக்தி தியானத்தை அரை மணிநேரம் செய்யுங்கள். உங்கள் உடலில் உள்ள கோணாடு சுரப்பி, அட்ரினல் சுரப்பி, பாங்கிரியாஸ் சுரப்பி, தைமஸ் சுரப்பி, தைராய்டு, பாரா தைராய்டு சுரப்பி, பிட்யூட்டரி சுரப்பி, பீனியல் சுரப்பிகள் மிகச் சிறப்பாக சரியான விகிதத்தில் சுரக்கும். எனவே இன்று பெரும்பாலான மனிதர்களுக்கு உள்ள நீரிழிவு, ரத்த அழுத்தம் அறவே நீங்கும். இதயம் சிறப்பாக இயங்கும். மன அழுத்தம் நீங்கும்.
பூர்வ ஜென்ம கர்ம வினைகளினாலும் நாம் செய்த பாவங்களினாலும் முன்னோர் இட்ட சாபங்களினால் வந்த எல்லா வினைகளையும், அறவே அறுத்து ஆத்மானந்தத்தை தரும்.
உலகில் மனிதனுக்கு வேண்டிய உடல் ஆரோக்கியம், உள் அமைதி இரண்டும் இந்த தியானத்தின் மூலம் கிடைக்கும். மேலும் மரணபயம் நீங்கும். பிறவாப்பெருநிலையான முக்தி பதம் கிடைக்கும்.
இன்றைய நவீன இயந்திரமான உலகில் நமக்கு மன அழுத்தம் ஏற்படுகின்றது. அதனால் பலவிதமான உடல் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுகின்றது. கழுத்துவலி, மூட்டுவலி, இடுப்புவலி, அல்சர், மூலம், முதுகுவலி மேலும் உடலில் ஏற்படும் அனைத்து வகை பிணிகளுக்கும் இந்த மேற்கூறிய தியானம் நல்ல பலனைக் கொடுக்கும். அனைத்து நோய்களும் நீங்கி ஆனந்தமாக வாழலாம்.