உட்காரும் போது, நடக்கும் போது, தூங்கும் போது-லாம் எவ்வளவு கலோரி எரிக்கப்படுகிறது தெரியுமா?
பொதுவாக உடல் எடையைக் குறைப்பது எப்படி மற்றும் கலோரிகளை எரிப்பது எப்படி என்று நினைக்கும் போது, நம் அனைவருக்குமே ரன்னிங், நீச்சல் அல்லது நடனம் போன்ற உடல் செயல்பாடுகள் தான் நினைவிற்கு வரும். ஏனெனில் இந்த உடல் செயல்பாடுகளின் போது உடலை அதிகமாக அசைக்க வேண்டியிருப்பதால், கலோரிகள் அதிகமாக எரிக்கப்படும். ஆனால் நாம் எந்த ஒரு வேலையை செய்யாமல் இருந்தாலும், நமது உடல் கலோரிகளை எரிக்கும் தெரியுமா?
என்ன ஆச்சரியமாக உள்ளதா? ஆம், நாம் உட்காரும் போது, நடக்கும் போது, தூங்கும் போது என சாதாரண செயல்பாடுகளின் போது கலோரிகள் எரிக்கப்படுகின்றன. அதுவும் தூங்கும் போது கூட உடலில் இருந்து குறிப்பிட்ட அளவு கலோரிகள் எரிக்கப்படுகிறது. தினசரி செயல்பாடுகளால் உடலில் எரிக்கப்படும் கலோரிகளின் அளவுகளை அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
சாப்பிடும் போது…
நீங்கள் 10 நிமிடங்கள் சாப்பிட்டால், 18 கலோரிகளை எரிக்கலாம். எனவே இனிமேல் மெதுவாக சாப்பிடுங்கள். மெதுவாக சாப்பிடுவது செரிமானத்திற்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், கலோரிகளையும் எரிக்க உதவுகிறது. அதே சமயம் நீங்கள் சாப்பிடும் போது, உணவில் உள்ள கலோரிகளையும் நினைவில் கொள்ள வேண்டும்.
உட்கார்ந்திருக்கும் போது…
டிவி பார்ப்பது, கம்ப்யூட்டரில் வேலை செய்வது, உட்கார்ந்து புத்தகம் படிப்பது, ஏன் சாதாரணமாக நின்று கொண்டிருக்கும் போது ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் 11 கலோரிகள் எரிக்கப்படுகின்றன.
நடக்கும் போது…
சாதாரணமாக நடக்கும் போது ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் 36 கலோரிகள் எரிக்கப்படுகிறது. எனவே இனிமேல் ஒவ்வொரு 10 நிமிடமும் எழுந்து வீட்டிற்குள்ளேயே நடக்க ஆரம்பியுங்கள். இதனால் உங்கள் உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளை கஷ்டப்படாமல் எரிக்கலாம்.
ஸ்ட்ரெட்ச்சிங்
கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து தொடர்ச்சியாக டைப் செய்வதற்கு பதிலாக, உட்கார்ந்திருக்கும் இடத்திலேயே லேசான ஸ்ட்ரெட்சிங் பயிற்சிகளை அவ்வப்போது செய்யுங்கள். இதனால் உடலில் இரத்த ஓட்டம் மேம்படுவதோடு மட்டுமல்லாமல், கலோரிகளும் எரிக்கப்படும். எவ்வளவு என்று நீங்கள் கேட்கலாம்? ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் 30 கலோரிகள் எரிக்கப்படும்.
தூங்கும் போது…
ஆம், நீங்கள் தூங்கும் போது கூட சில கலோரிகள் எரிக்கப்படுகிறது. அதில் ஒவ்வொரு 10 நிமிட தூக்கத்தின் போதும் 10 கலோரிகள் எரிக்கப்படும். ஆனால் ஒரு நாளைக்கு எட்டு மணிநேரத்திற்கும் அதிகமாக தூங்கினால், எதிர்மறை விளைவுகளைத் தான் பெற நேரிடும் என்பதை மறவாதீர்கள்.