புதியவைவீடு-தோட்டம்

உங்க பாத்ரூம் செம ‘கப்பு’ அடிக்குதா? இதோ அதைத் தடுக்கும் சில வழிகள்!

நம் வீட்டில் தினமும் குறைந்த அளவு நேரத்தை செலவிடும் ஓர் அறை என்றால் அது பாத்ரூம் தான். ஆனால் இந்த சிறிய அறை அசுத்தமாக இல்லாவிட்டால், அது ஒட்டுமொத்த வீட்டையுமே நாறடித்துவிடும். அதிலும் வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருக்கும் போது, உங்கள் வீட்டு பாத்ரூம்மில் இருந்து துர்நாற்றம் வீசினால் எப்படி இருக்கும்? நிச்சயம் இது உங்களுக்கு பெரும் தர்ம சங்கடத்தை தான் உண்டாக்கும்.

கழிவறையில் இருந்து வீசும் துர்நாற்றத்தைத் தடுக்க பல்வேறு பொருட்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் அந்த பொருட்களின் விலையோ அதிகமாக இருக்கும். இப்படி விலை அதிகமான கெமிக்கல் நிறைந்த பொருட்களைக் கொண்டு உங்கள் வீட்டு பாத்ரூம்மில் இருந்து வீசும் துர்நாற்றத்தைத் தடுப்பதற்கு பதிலாக, ஒருசில இயற்கைப் பொருட்களைக் கொண்டு பாத்ரூமை சுத்தம் செய்தால், பாத்ரூம் பளிச்சென்று இருப்பதுடன், துர்நாற்றமின்றி நல்ல மணத்துடன் இருக்கும். இப்போது பாத்ரூமில் இருந்து வீசும் துர்நாற்றத்தைப் போக்க உதவும் சில இயற்கை வழிகளைக் காண்போம்.

காற்றோட்டமாக வைத்திருங்கள்

முதலில் பாத்ரூம்மை திறந்து வையுங்கள். பொதுவாக பாத்ரூம் நன்கு காற்றோட்டமாக இருந்தால், எவ்வித துர்நாற்றமும் வீசாது. எனவே நீங்கள் பாத்ரூம்மைப் பயன்படுத்திய பின், மூடி வைக்காமல், திறந்து வையுங்கள். இல்லாவிட்டால், எக்ஸாஸ்ட் பேன் பொருத்தி, அதை பாத்ரூமைப் பயன்படுத்தி பின் குறைந்தது 15 நிமிடம் ஓட விடுங்கள். இதனால் பாத்ரூம்மினுள் சுற்றிக் கொண்டிருக்கும் துர்நாற்றமிக்க காற்று வெளியேற்றப்பட்டு, நல்ல சுத்தமான காற்று சுற்றிக் கொண்டிருக்கும்.

ஈரத்துணிகளை அகற்றுங்கள்

பலருக்கும் பாத்ரூம்மில் துணிகளை தொங்க விடும் பழக்கம் இருக்கும். உங்களுக்கு அப்பழக்கம் இருந்தால், உடனே அதை கைவிடுங்கள். முக்கியமாக பாத்ரூம்மில் ஈரத்துணிகளைத் தொங்கவிடாதீர்கள். இல்லாவிட்டால், அந்த ஈரத்துணி போதிய காற்றோட்டமின்றி துர்நாற்றம் வீச ஆரம்பித்து, அறை முழுவதும் கடுமையான நாற்றத்தை வீசச் செய்யும். எனவே நீங்கள் பயன்படுத்திய ஈரத் துணிகளை மறக்காமல் அகற்றிவிடுங்கள்.

நேச்சுரல் டாய்லெட் பாம்

கழிவறையில் வீசும் துர்நாற்றத்திற்கு முக்கிய காரணம், அங்கு கிருமிகள் அதிகமாக இருப்பது தான். இந்த கிருமிகளை அழிக்க கடைகளில் பல்வேறு கெமிக்கல்கள் விற்கப்படலாம். ஆனால் அவ்வளவு பணம் செலவழித்து கழிவறையில் வீசும் துர்நாற்றத்தைப் போக்குவதற்கு பதிலாக, நம் வீட்டுச் சமையலறையில் உள்ள சில பொருட்களைக் கொண்டே துர்நாற்றத்தைப் போக்கலாம். அதற்கு சிறிது பேக்கிங் சோடாவுடன், எலுமிச்சை சாறு மற்றும் விருப்பமான நறுமண எண்ணெய் சேர்த்து, அதை டாய்லெட்டில் ஊற்றுங்கள். இது துர்நாற்றத்தை உண்டாக்கும் கிருமிகளை அழித்துவிடும். அதோடு அந்த கலவையை டாய்லெட்டை சுத்தம் செய்யும் பிரஷ் ஹோல்டரில் சிறிது ஊற்றி வையுங்கள்.

நறுமண எண்ணெய்

நறுமண எண்ணெய்கள் நல்ல மாயங்களை ஏற்படுத்தக்கூடியவை. குறிப்பாக துர்நாற்றத்தை மறைக்க பெரிதும் உதவி புரியும். உங்கள் டாய்லெட்டில் பேப்பர் ரோல் இருந்தால், அதில் உங்களுக்கு விருப்பமான சுத்தமான நறுமண எண்ணெய்களை ஊற்றுங்கள். இதனால் டாய்லெட்டில் இருந்து வீசும் துர்நாற்றம் தடுக்கப்படும்.

நறுமணமிக்க மெழுகுவர்த்தியை ஏற்றுங்கள்

தற்போது கடைகளில் நறுமணமிக்க மெழுகுவர்த்திகள் விற்கப்படுகின்றன. இந்த மெழுகுவர்த்திகளை உங்கள் பாத்ரூம்மில் ஏற்றுங்கள். சிறிது நேரம் இந்த மெழுகுவர்த்தி எரிந்தாலும், அது துர்நாற்றத்தைப் போக்கிடும். ஆனால் மெழுகுவர்த்தியை பாத்ரூம்மில் ஏற்றிவிட்டு அப்படியே வந்துவிடாதீர்கள். நீங்கள் அறையை விட்டு வெளியே வரும் முன் நெருப்பை அணைத்துவிட்டு வாருங்கள்.

அடிக்கடி சுத்தம் செய்யுங்கள்

சில சமயங்களில் பாத்ரூம்மை சுத்தம் செய்ய வேண்டும் என்பதை நமக்கு உணர்த்த, பாத்ரூம்மில் இருந்து துர்நாற்றம் வீசலாம். எனவே அவ்வப்போது பாத்ரூம்மை சுத்தம் செய்யுங்கள். வாரத்திற்கு ஒருமுறை பாத்ரூம்மை சுத்தம் செய்யும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால், மாதத்திற்கு 2-3 முறையாவது பாத்ரூம்மை சுத்தம் செய்யுங்கள். இதனால் உங்கள் பாத்ரூம்மில் இருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்கும்.

பேக்கிங் சோடா, வினிகர்

உங்கள் கழிவறையை சுத்தம் செய்ய பேக்கிங் சோடா மற்றும் வினிகர் பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு டாய்லெட்டில் பேக்கிங் சோடாவை தெளித்து, பின் வெள்ளை வினிகரை நீரில் கலந்து, அந்நீரை ஊற்றி, பின் டாய்லெட் பிரஷ் கொண்டு தேய்த்து கழுவுங்கள்.

கோலா

டாய்லெட்டில் பாக்டீரியாக்கள் அதிகம் இருந்தாலும், உங்கள் கழிவறை நாற்றத்துடன் இருக்கும். இதற்கு மிகவும் எளிமையான ஓர் வழி, கோலாவை டாய்லெட்டில் ஊற்றி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் டாய்லெட் பிரஷ் கொண்டு தேய்த்து விடுங்கள். இதனால் உங்கள் டாய்லெட் புத்தம் புதிது போல் மின்னுவதோடு, துர்நாற்றமின்றியும் இருக்கும்.

நேச்சுரல் ஏர்-பிரஷ்னர்

கெமிக்கல் இல்லாத ஏர்-பிரஷ்னர் தயாரிக்க வேண்டுமா? அப்படியானால் 2 கப் நீரில், 1 டேபிள் ஸ்பூன் வெள்ளை வினிகர், 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 10 துளிகள் அத்தியாவசிய நறுமண எண்ணெய்களான யூகலிப்டஸ், சிட்ரஸ் அல்லது லாவெண்டர் எண்ணெய் சேர்த்து கலந்து, ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, அதை டாய்லெட்டில் ஸ்ப்ரே செய்யுங்கள்.

ஆல்கஹால்

இன்னும் எளிமையான ஏர்-பிரஷ்னர் வேண்டுமானால், வோட்கா பயன்படுத்துங்கள். அதுவும் 3 பங்கு நீரில் 1 பங்கு வோட்கா மற்றும் 10-20 துளிகள் விருப்பமான நறுமண எண்ணெய் சேர்த்து, ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி பயன்படுத்துங்கள்.

எலுமிச்சை

சிட்ரஸ் பழங்களுள் ஒன்றான எலுமிச்சை அற்புதமான நறுமணத்தைக் கொண்ட பழம். இந்த பழத்தின் ஒரு துண்டை பாத்ரூம்மில் வைத்திருப்பதன் மூலம், பாத்ரூம் நல்ல புத்துணர்ச்சியான நறுமணத்துடன் இருக்கும்.

பூச்செடி

உங்கள் பாத்ரூம் எப்போதும் நல்ல மணத்துடன் இருக்க வேண்டுமானால், மல்லிகை, ரோஜா அல்லது லாவண்டர் செடிகளை வைத்து வளர்த்து வாருங்கள். இதனால் பாத்ரூம் துர்நாற்றமின்றி புத்துணர்ச்சியான வாசனையுடன் இருக்கும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker