ஆரோக்கியம்புதியவை

வலிப்பு நோயுள்ள பெண்களுக்கு சிறந்தது சுகப்பிரசவமா சிசேரியனா?

வலிப்பு நோயுள்ள பெண்கள் கருத்தரித்த பின்பும் அவர்களது வலிப்பு மாத்திரைகளை தொடர்ந்து விடாமல் சாப்பிட வேண்டும். மாத்திரையினால் சிசுவிற்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயம் எல்லோரது மனதிலும் தோன்றக்கூடிய சந்தேகம். பிரசவ காலத்தில் வலிப்பு மாத்திரைகளை திடீரென்று குறைத்தாலோ அல்லது நிறுத்தினாலோ வலிப்பு திரும்ப வரும் வாய்ப்புகள் அதிகம், அவ்வாறு வலிப்பு ஏற்பட்டால் தாயின் தொப்புள் கொடியிலிருந்து குழந்தைக்கு செல்லும் ரத்த ஓட்டம் மற்றும் ஆக்சிஜன் அளவு குறைந்து குழந்தையின் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்.

அதனால் மாத்திரைகளின் பக்க விளைவுகளை பற்றி அதிகமாக யோசிக்காமல் பிரசவ காலத்தில் பெண்கள் தமக்கு வலிப்பு வராமல் பாதுகாத்துக் கொள்வதே சாலச்சிறந்தது. ஒரு சில மருந்துகளே குறிப்பாக வால்பிரோயேட்(Valproate) பினோபார்பிடோன்(Phinobarbitone) ஆகியவற்றை வலிப்பை குறைக்க அதிக அளவில் எடுத்துக்கொண்டால், சிசுவின் உறுப்பின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று அறிவியல் ஆய்வுகள் சொல்கின்றன.

பெரும்பாலும் இந்த மருந்துகளை கர்ப்பிணிகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரைப்பதில்லை. அப்படியே இம் மருந்துகளைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இருப்பின் மருத்துவரின் ஆலோசனைப்படி இந்த மருந்துகளின் அளவை குறைத்துக் கொண்டு வேறு வலிப்பு மருந்துகளை சேர்த்துக்கொள்ளலாம். தாயின் கருவில் இருக்கும் சிசுவிற்கு முதல் மூன்று மாதங்களில் தான் முக்கிய உறுப்புகள் உருவாகின்றன.

எனவே, வலிப்பு நோயுள்ள பெண்கள்தான் கருத்தரித்த உடனேயே அருகில் இருக்கும் மூளை நரம்பியல் மருத்துவரை சந்தித்து தனது வலிப்பு மருந்துகளை ஒழுங்கு படுத்திக் கொள்வது நல்லது. கர்ப்பகாலத்தின்போது உடல் எடை கூடுவதாலும், நீர்ச்சத்து அதிகரிப்பதாலும், உடம்பில் உள்ள ஹார்மோன்கள் மற்றும் புரதங்களில் மாற்றங்கள் ஏற்படுவதினாலும் வலிப்பு மருந்துகளின் செயல் `தன்மைகளில்(Pharmacokinetics) சிறிது மாற்றம் ஏற்படும். ஆகவே 2 அல்லது 3 மாதத்திற்கு ஒரு முறை மூளை நரம்பியல் மருத்துவரை சந்தித்து அவர்களின் ஆலோசனைப்படி மாத்திரைகளின் அளவை அதிகரித்தோ அல்லது குறைத்தோ சாப்பிடுவது நல்லது.

சுகப்பிரசவமா சிசேரியனா?

எல்லா வலிப்பு நோய் உள்ள பெண்களுக்கும் சிசேரியன்தான் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பிரசவத்திற்கான நேரத்தில்தான் இதனை முடிவு செய்ய முடியும். தாயின் உடல்திறன், சிசுவின் வளர்ச்சி, உடம்பில் உடனிருக்கும் வேறு ஏதும் தொந்தரவுகள், வலிப்பு நோயின் தன்மை போன்றவற்றை கருத்தில் கொண்டு மகப்பேறு மருத்துவர் நரம்பியல் நிபுணர், மயக்க மருந்து நிபுணர் அனைவரும் கூடி அந்த நேரத்தில் முடிவு செய்வதை பொறுத்துதான் சுகப்பிரசவமா அல்லது சிசேரியன் டெலிவரியா என்பதை தெளிவாக கூற முடியும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker