உறவுகள்புதியவை

பெண்களுக்கு ‘மெனோபாஸ்’… ஆண்களுக்கு ‘ஆண்ட்ரோபாஸ்’

பெண்கள் கிட்டத்தட்ட 50 வயதுகளில் ‘மெனோபாஸ் ’ பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். மாதவிலக்கு முற்றிலுமாக நிலைத்துப்போகும் அந்த காலகட்டத்தில் பெண்கள் உடல்ரீதியாகவும், மனோரீதியாகவும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்வார்கள். அப்போது சிலருக்கு வாழ்க்கையில் தன்னம்பிக்கையும், ஆர்வமும் குறைந்துபோகும். பெண்களுக்கு ஏற்படும் அதே போன்ற அவஸ்தைகள் ஆண்களுக்கும் குறிப்பிட்ட வயதில் ஏற்படுவதுண்டு. அதற்கு ‘ஆண்ட்ரோபாஸ்’ என்று பெயர்.

‘முன்பெல்லாம் ஆண்ட்ரோபாஸ் பிரச்சினைகளை ஆண்கள் 50 முதல் 60 வயதில் எதிர்கொண்டார்கள். இப்போது 40 வயதிலேயே அதன் தாக்கத்திற்கு உள்ளாகிறார்கள். குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், வாழ்க்கையை மிகுந்த உணர்ச்சிபூர்வமாக அணுகுகிறவர்களும்-மாமிச உணவுகளை அதிகம் உண்கிறவர்களும் முன்னதாகவே ஆண்ட்ரோபாஸ் நிலையை அடைந்துவிடுகிறார்கள். தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றுகிறவர்கள், வங்கி பணியாளர்கள், வாகன ஓட்டுனர்கள் போன்றவர்களிடம் ஆண்ட்ரோபாஸ் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது’ என்று புதிய ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

ஆண்ட்ரோபாஸை பெரும்பாலான ஆண்கள் முதுமையின் அடையாளமாக கருதுகிறார்கள். அப்படியில்லை. ஆனாலும் அவர்களது ஆண்மை சார்ந்த செயல்பாடுகளில் பலவீனங்கள் தோன்றும். உற்சாகம் குறையும். வழக்கமான வேலைகளைகூட ஆர்வமின்றி செய்வார்கள். இதற்கெல்லாம் காரணம் ஆண்களிடம் டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் சுரப்பதில் குறைபாடு ஏற்படுவதுதான். இந்த குறைபாடு அவர்களது உடல் சக்தி இயக்கத்தில் மந்தநிலையை தோற்றுவிக்கிறது.

இப்போதெல்லாம் 40 வயதை கடக்கும்போதே ஆண்களின் உடலில் பலவீனங்கள் உருவாகத் தொடங்கிவிடுகின்றன. தசைகளின் பலம் குறைகிறது. மனஅழுத்தம் தோன்றுகிறது. முன்கோபம் அதிகரிக்கிறது. தூக்கமின்மை உருவாகிறது. எதிர்மறையான சிந்தனை தலைதூக்குகிறது. இதோடு உறுப்பு விரைப்புத்தன்மை குறைந்து, பாலியல் ஆர்வமும் கட்டுப்படுகிறது. ஆனால் இத்தகைய மாற்றங்கள் அனைத்தும் எல்லா ஆண்களுக்கும் தோன்றும் என்று கூறுவதற்கில்லை.

பெண்களுக்கு சினைமுட்டை உற்பத்தி முடங்குவதில் இருந்து மனோபாஸ் பிரச்சினை தொடங்குகிறது. அதன் அறிகுறிகள் அனைத்தையும் பெண்களால் விரைவாக உணர்ந்துகொள்ள முடியும். ஆனால் ஆண்களுக்கு அப்படியில்லை. மெல்ல மெல்ல அந்த மாற்றங்கள் உருவாகுவதால், அறிகுறிகளை அவர்கள் உணருவதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. ஆண்கள் உடல்ரீதியான பலவீனங்களை கவனமாக கருத்தில்கொண்டால் இதனை தெளிவாக உணர்ந்துகொள்ள முடியும். குறிப்பாக படுக்கை அறை செயல்பாட்டு குறைபாடு ஆண்ட்ரோபாஸின் முதல் அறிகுறியாக இருக்கிறது.

வயதாகும்போது ஹார்மோன் சுரப்பதில் ஏற்படும் சமச்சீரற்ற நிலைகளால் ஆண்களின் பாலியல் செயல்பாடுகளில் பாதிப்புகள் உருவாகும் என்றாலும் இப்போது 40 வயதுகளிலே அத்தகைய பிரச்சினைகள் உருவாகுவதற்கு சமூக சூழல்களும் ஒருவிதத்தில் காரணமாக இருக்கிறது. கொரோனா நோய் பற்றிய அச்சம், வேலை இழப்பு, மனக்கவலை, தவறான வாழ்வியல் பழக்கங்கள், முரண்பாடான உணவுப் பழக்கம், தூக்கமின்மை போன்றவைகளும் இதற்கான காரணங்களாகும்.

குடும்ப வாழ்க்கையில் நிம்மதியில்லாதவர்களும் விரைவாக ஆண்ட்ரோபாஸ் நெருக்கடியை சந்திக்கிறார்கள். குடும்ப வாழ்க்கையில் நெருக்கடியை சந்திப்பவர்களில் பலரும் தங்கள் அலுவலகப் பணிகளில் ஆர்வமில்லாதவர்களாக இருக்கிறார்கள். ஆனால் சிலர் வேலையே கதி என்று அதிலே மூழ்கிப்போய்விடுகிறார்கள். அளவுக்கு அதிகமாக சாப்பிடும் பழக்கமும் பலரிடம் இருக்கிறது. அதனால் உடல் குண்டாகிவிடுகிறார்கள். மதுப் பழக்கமும், புகைப்பிடிக்கும் பழக்கமும் விரைவிலே ஆண்ட்ரோபாஸ் பிரச்சினையை சந்திக்க காரணமாகிவிடுகிறது.

இந்த பிரச்சினையை சந்திக்கும் ஆண்கள் மனம் தளர்ந்துபோய்விடக்கூடாது. இதற்கான மருத்துவரீதியிலான தீர்வுகளை காண முன்வரவேண்டும். கணவனும், மனைவியும் மனம்விட்டுப் பேசினால் இதற்கான தீர்வை எளிதாக காணமுடியும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker