புதியவைமருத்துவம்

சமையல் வேலையில் தீக்காயம் ஏற்பட்டால்

சமையல் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது சிலருக்கு தீக்காயங்கள் ஏற்படக்கூடும். எண்ணெய்யில் பொரிக்கும்போதோ, வறுக்கும்போதோ எண்ணெய் தெறித்து கைகளில் கொப்பளங்கள் உருவாகக்கூடும். சருமத்தில் வீக்கம், எரிச்சல் ஏற்படவும் செய்யும். அந்த சமயத்தில் குளிர்ந்த நீரையோ, ஐஸ்கட்டியையோ காயம்பட்ட பகுதியில் வைப்பார்கள்.

அது எரிச்சல் உணர்வை தணிக்கும். கொப்பளங்கள் தோன்றுவதையும் தவிர்க்கும். ஆனால் அப்படி கைகளை நீண்ட நேரம் நீரில் வைத்திருப்பது திசுக்களை சேதப்படுத்திவிடும். தீக்காயத்தை அதிகரிக்கவும் செய்துவிடும். குணப்படுத்தும் செயல்முறையையும் பாதிக்கும். உடலில் தீக்காயம் ஏற்பட்டால் நிறையபேர் தவறான முதலுதவி சிகிச்சைகளை கையாளுகிறார்கள்.

* தீயின் காயம் அதிகமாக இருந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் கொப்பளங்கள் தோன்றும். அதை உடைக்கவோ, சொறியவோ செய்யக் கூடாது. கொப்பளங்களில் சீழ் படிந்திருக்கும். அதை சிதைத்தால் மற்ற இடங்களிலும் பரவக்கூடும். வலி மற்றும் சிக்கலையும் அதிகப்படுத்திவிடும். மேலும் கொப்பளங்களை சிதைத்தால் சருமத்தில் தொற்றுக்கள் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கும். கொப்பளத்தில் எரிச்சல் ஏற்படவில்லை என்றால் ஓரிரு நாட்களில் அதன் வீரியம் குறைந்துவிடும். கொப்பளங்கள் அதிகமாக இருந்தால் மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வதுதான் சரியானது.

* சிறிய தீக்காயங்கள் ஏற்பட்டால் சில நிமிடங்கள் தண்ணீரில் வைத்திருக்கலாம். வேறு எந்த வீட்டுவைத்தியமும் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். நிறைய பேர் தீக்காயத்தின் மீது களிம்புகள், ஆண்டிபயாடிக் மருந்துகளை தடவுகிறார்கள். அது எரிச்சலை குறைக்கும். அதேவேளையில் சருமத்தில் இருக்கும் ஆரோக்கியமான பாக்டீரியாக்களை கொன்றுவிடும். அதனால் அவைகளை பயன்படுத்தக் கூடாது.

* தீக்காயத்தின் வீரியம் அதிகமானால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதுதான் நல்லது.

* கையில் தீக்காயம் ஏற்பட்டால் வெப்பம் மற்றும் சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க வேண்டும். ஏனெனில் தீக்காயங்கள் மீது வெப்பம் படுவது வலி மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். நிறைய பேர் கையில் இருக்கும் தீக்காயங்களை பாதுகாப்பாக மறைக்காமல் வெயிலில் நடமாடுவார்கள். அது தவறானது.

* கையில் தீக்காயம் ஏற்பட்டால் பலரும் மை அல்லது வெண்ணெய், பற்பசை போன்வைகளை தடவுவார்கள். அப்படி ஒருபோதும் செய்யாதீர்கள். மையில் இருக்கும் ரசாயனம் சருமத்தை சேதப்படுத்தும். வெண்ணெய், பற்பசை தடவுவது சருமத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மருந்துகளை பயன்படுத்துவதுதான் சரியானது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker