ஆரோக்கியம்புதியவை

சலூனிற்கு போக நினைக்கிறீங்களா? முதல்ல இத படிங்க…

கொரோனா வைரஸ் பரவமலிருக்க அரசு ஊரடங்கை நடைமுறைப்படுத்தியது. இருப்பினும் அதன் தாக்கம் குறைந்தபாடில்லை. எனவே, இப்பொழுது படிப்படியாக ஊரடங்கை சில கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் சிறிது சிறிதாக தளர்த்த ஆரம்பித்திருக்கிறது. அதன் ஒரு பகுதியாக, சமீபத்தில் அனைத்து சலூன் கடைகளையும் திறக்க அனுமதியளித்துள்ளது.
முடி திருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் திறக்கப்பட்டதால், வைரஸ் கட்டுக்குள் வந்துவிட்டது என்றில்லை. நாம் அரசு கூறிய அனைத்து எச்சரிக்கைகளையும் கவனத்தில் கொள்ளாமல் காற்றில் பறக்க விட்டு போனால், பின்னாளில் அவதிப்பட போவது என்னமோ நாம்தான்.

ஆண்கள் மட்டுமில்லை, பெண்களும் இப்பொழுது அழகு நிலையங்களை நோக்கி படை எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். இன்றுள்ள சூழ்நிலையில் இவ்வாறு அழகு நிலையங்களுக்கு செல்வதில் பல அபாயங்கள் இருக்கின்றன. அவை என்ன என்பதை பற்றியும், எவ்வாறு பாதுகாப்பாக செல்வது என்பதை பற்றியும் ஒவ்வொன்றாக பின்வரும் பகுதிகளில் பார்க்கலாம்.

மற்றவருடன் எளிதில் நேரடி தொடர்பு

இந்த கொரோனா வைரஸ் ஒரு நொடியில் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதாக பரவிவிட கூடியது என்பது நாம் நன்றாக அறிந்ததே. முடி திருத்தும் நிலையம் பலர் வந்து செல்லும் இடம், எனவே இங்கு ஒருவருடன் நேரடி தொடர்பில் இருக்க பல வாய்ப்புகள் உள்ளன. பொதுவாக, கொரோனா வைரஸ், நோய் பாதித்த ஒருவரின் சுவாச துளிகளின் மூலம் இன்னொருவருக்கு பரவுகிறது. ஒருவருக்கு முடியில் சாயம் பூசும் பொழுதோ, முடி திருத்தும் பொழுதோ, அல்லது அழகு சம்பந்தப்பட்ட ஏதேனும் ஒன்றை செய்யும்பொழுதோ, இந்த வைரஸ் பரவல் எளிதாக நடக்கிறது. இதில் மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால், நோய் பாதித்த பலருக்கு தற்பொழுதெல்லாம் அறிகுறிகள் சிறிது கூட தெரிவதில்லை. எனவே யார்க்கு இந்த வைரஸ் பாதிப்பு இருக்கிறது என்பதை நம்மால் யூகிக்க முடியாது. ஆனால் இதுப்போன்ற கொரோனா பாதித்த, நோய் அறிகுறி இல்லாத ஒருவரிடம் இருந்து நோயெதிர்ப்பு சக்தி குறைவான மற்றொருவருக்கு எளிதாக பரவிவிடுகிறது.

ஒரே இடம், ஒரே பொருட்கள்

அழகு நிலையங்களுக்கு செல்வதில் உள்ள மிக பெரிய அச்சுறுத்தல், அங்கு ஒரே இடம், நாற்காலி மற்றும் உபகரணங்களையே எல்லாரும் பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது. பகிர்ந்து கொள்ளப்படும் பொருட்களால், இந்த கொரோனா வைரஸ் எவ்வளவு எளிதாக விரைவாக பரவும் என்பது நாம்அனைவரும் அறிந்ததே. எனவே சலூனிற்கு நீங்கள் செல்லும் போது தரை முதல்கொண்டு அனைத்து பரப்புகளும் சுத்தமாக உள்ளதா என்பதை கவனித்து பார்க்க வேண்டும். அதேப்போல், ஒருவருக்கு முடி வெட்டியவுடன், கத்திரிகோல், மற்றும் இதர பிற உபகரணங்கள் அனைத்தும் சரியான முறையில் சானிடைசர் உபயோகித்து கிருமி நீக்கம் செய்கிறார்களா என்பதையும் பார்க்க வேண்டும்.

காற்றின் மூலம் வரும் ஆபத்து

முன்பு கூறியபடி கொரோனா வைரஸ் சுவாச துளிகளின் மூலமாக காற்றில் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவ கூடியது. சலூன்களில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே இடத்தில இருப்பார்கள். இதனால் நோய் பாதிப்பு உள்ள ஒருவர் அவரை அறியாமலேயே வைரஸ் கிருமிகளை காற்றில் பரப்பி விடுகிறார். இவ்வாறு, ஒரே அறையில் இருக்கும் மற்றவர்களுக்கு மிக எளிதாக இந்த வைரஸ் காற்றின் மூலம் கடத்தப்பட்டு விடுகிறது. எனவே முப்பது நிமிடங்களுக்கு மேல் முடி திருத்தும் நிலையத்திலோ, அல்லது அழகு நிலையத்திலோ இருக்காதீர்கள். மிக அத்தியாவசியம் என்று நினைக்கும் செயல்களுக்கு மட்டும் சலூனிற்கு செல்லுங்கள். எல்லாவற்றையம் விட மிக முக்கியமான ஒன்று, மறந்தும் கூட உங்கள் மாஸ்க் அல்லது முக கவசத்தை கழற்றி விடாதீர்கள்.

மாஸ்க்! மாஸ்க்! மாஸ்க்!

சலூனிற்கு செல்வதில் இவ்வளவு பிரச்சனைகள் இருந்தும், உங்களின் சில முக்கியமான தேவைகளுக்கு நீங்கள் சலூனிற்கு செல்லும் நிலை ஏற்படலாம். அவ்வாறு செல்லும் பொழுது உங்கள் முகக்கவசத்தை மறக்காமல் அணிந்து கொள்ளுங்கள். என்னதான் அரசாங்கம் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கினாலும், இன்றும் பலர் முகக்கவசம் அணியாமல் வெளியில் சுத்துவதை நாம் பார்க்கலாம். ஆனால் முகக்கவசம் என்ற ஒரு ஆயுதம்தான் உங்களை கொரோனா பாதித்த ஒருவரின் சுவாச துளிகளிலிருந்து பாதுகாக்கும். சலூனில் பொதுவாக நீங்கள் ஒருவருடன் நெருங்கி பேச வாய்ப்புகள் உள்ளதால், முகக்கவசம் மிக முக்கியமான ஒன்று.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker