தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

பெற்றோரின் சண்டை… குழந்தைகள் பாதிக்காமல் தடுப்பது எப்படி?

கொரோனா எனும் கொடூரனின் பிடியில் சிக்காமல் நம்மைத் தற்காத்துக்கொள்ளும் வகையில் நாம் அனைவரும் நம் வீட்டிற்குள் அடைக்கலமாகியுள்ள இந்த காலகட்டத்தில் மனக்கட்டுப்பாடும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் பரந்த மனப்பான்மையும் மிகவும் அவசியம். தேவையற்ற வாக்குவாதங்களும், சண்டை சச்சரவுகளும், பெரியவர்களைக்காட்டிலும் குழந்தைகளையும், இளைஞர்களையும் பெரிதும் பாதித்துவிடும் என்பதை உணரவேண்டும்.

பாசத்தைக் காட்ட வேண்டிய பெற்றோர் தங்களுக்குள் தொடர்ந்து வம்பும், வழக்கோடும் சண்டையிட்டுக் கொண்டிருந்தால் அந்த வீடு குழந்தைகளுக்கு ஒரு நரகமாகத்தான் தென்படும். இந்தச் சூழல் குழந்தைகள் மனதில் பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தி அவர்களை உதவியற்றவர்களாக உணரச் செய்கிறது. இந்த பாதிப்புஅக்குழந்தையின்வாழ்நாள் முழுவதும் துரத்திக்கொண்டே இருக்கும்.உங்கள் பிள்ளைகளின் முன் ஒருபோதும் சண்டை போடாதீர்கள்.அவர்கள் முன்னால் ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்துங்கள். ஒருபோதும் ஒருவரையொருவர் குறைகூற வேண்டாம். உங்கள் குழந்தைகள் தவறான பாதையைத் தேர்ந்தெடுக்க நீங்களே காரணமாகிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள்.

ஒருவருக்கொருவர் பயன்படுத்தும் மொழி மற்றும் தொனியில் கவனம் கொள்ளுங்கள். முக்கியமாக விவாதிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் உங்கள் கருத்து வேறுபாடுகள் பற்றி குழந்தைகளிடம் பேசுங்கள். திறம்பட மோதல்களைத் தவிர்ப்பது எப்படி என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள். தீவிரமான வாக்குவாதத்தின்போது உங்கள் குழந்தைகளை அதில் ஈடுபடுத்த வேண்டாம்.

உங்கள் பிள்ளைகளுக்கு முன்னால் சண்டையிட நேர்ந்தால், அவர்கள் முன்னாலேயே அதைத் தீர்த்தும் விடுங்கள். முக்கியமாக ஈகோவை விலக்கி வைத்துவிடுங்கள், உண்மையான அன்பும் அக்கறையும் இருக்கும் இடத்தில் ஈகோவுக்கு இடமில்லை! குழந்தைகளை வளர்ப்பதற்கு பொறுமையோடு சுய கட்டுப்பாடும்உறுதியான நிலைப்பாடும்தான் தேவை.

சண்டையிடுவதும் வாதிடுவதும் திருமண வாழ்க்கையின் ஒரு அங்கம்தான் என்றாலும் அதற்குரிய எல்லையைத் தாண்டாமல் இருப்பது அவசியம். பெற்றோரைப் பார்த்து பிரச்சனைகளுக்கு இது போன்ற சச்சரவுகள்தான் தீர்வு என்றே குழந்தைகள் நம்பத் தொடங்குவார்கள்.

பெற்றோரின் கைகலப்பு பிள்ளைகளுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி எதிர்மறை உணர்ச்சிகளைத் தூண்டுவதோடு அவர்களின் பாதுகாப்பின்மைக்கும் வழிவகுக்கிறது. இரவில் தூக்கமின்மையோடு சுயமரியாதையும் பாதிக்கப் படுவதால் தாழ்வு மனப்பான்மைக்கு ஆட்படுகிறார்கள். இந்த நிலையில் சற்றே வளர்ந்த விவரம் தெரிந்த இளம் பெண் தற்கொலை எண்ணத்திற்கும் தூண்டப்படுவதும் இயற்கை.

பெற்றோர் தொடர்ந்து சண்டை போட்டுக்கொண்டிருக்கும்போது குழந்தைகள் அதைப்பற்றியே நினைத்துக்கொண்டிருக்கும் நிலையில் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியாமல் போகலாம்.

ஆக, பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் முன்னிலையில் வாதிடுவது குழந்தையின் ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும், வளர்ச்சிக்கும் தீங்கு விளைவிக்கும் என்பது உறுதி. கணவன், மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவைகளை குழந்தைகள் முன்னிலையில் காட்டாமல் இருப்பது நலம். உங்கள் வாதங்கள் எழத் தொடங்கும் ஆரம்ப நிலையிலேயே அவற்றைத் தீர்க்க முயன்று, அவை பெரும் சிக்கல்களாக மாறுவதைத் தடுக்க முதிர்ச்சியுடன் செயல்படவேண்டும். பெற்றோர் வாதிடுவதைப் பார்க்கும் நிமிடத்தில் குழந்தை அழத் தொடங்குகிறது அல்லது முற்றிலும் அமைதியாகிவிடுகிறது.

பெற்றோர் கூச்சலிடுவதையும் ஒருவருக்கொருவர் வரம்பு மீறி கத்துவதையும் பார்க்கும்போது குழந்தை அச்சமாக உணர்கிறது. பல குழந்தைகள் அசாதாரண நடத்தைக்கான அறிகுறிகளையும் காட்டுகின்றன. தன் மனம் போன போக்கில் வாழும் பெற்றோர்கள், குழந்தைகள் மட்டும் எந்த தவறும் செய்யாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதிலும் அர்த்தமில்லை. எந்த காரியமாக இருந்தாலும் அதன் எளிதான பக்கத்தை மட்டும் பார்க்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

குழந்தை பெற்றோரிடமிருந்து விலகி இருப்பதை விரும்பலாம். பெற்றோரின் கவனத்தை சண்டையிலிருந்து திசைதிருப்ப தலைவலி, வயிற்று வலி அல்லது வேறு சில உடல்நலப் பிரச்சினைகள் குறித்தும் புகார் செய்யலாம்.

சூடான விவாதங்களின்போது ஒரு நபரைப் பற்றி தவறாகப் பேசுவதையோ, மோசமான மொழியைப் பயன்படுத்தி தரக்குறைவாக நடந்துகொள்வதையும் தவிர்த்துஅமைதியாகவும் அதே நேரம் அழுத்தமாகவும் உங்கள் பிரச்சனைகளைப் பேசுங்கள்.

ஆக்கபூர்வமான மோதல்களால் குழந்தைகள் பாதிப்படைவதில்லை,மாறாக பயனடைகிறார்கள். நேர்மறையான உணர்ச்சிகளை உள்ளடக்கிய மிதமான மோதல்கள் மூலம் குழந்தைகள் சிறந்த சமூக ஆற்றல்களையும் சுயமரியாதையையும் வளர்த்துக் கொள்கிறார்கள். பாதுகாப்பையும், பெற்றோருடன் சிறந்த உறவையும் வளர்த்துக் கொள்கிறார்கள்.பள்ளியில் சிறப்பாகச் செயல்படுகிறார்கள்.

பெற்றோர் அடிக்கடி சண்டையிடும்போது, ??குழந்தைகள் தங்கள் கவனத்தையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்துவதில் அதிக சிரமப்படுவதால் அது அறிவாற்றல் செயல்திறனைக் குறைக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இதற்கு முன்பும் இந்த கொரோனா பேரிடர் போன்றுஉள்நாட்டுப்போர், நோய்த்தொற்று, பஞ்சம் என பல்வேறு கடினமான சூழல்களையும் நாம் கடந்து மீண்டும் வலுவடைந்து வந்திருக்கிறோம்.

இதில் இளைய தலைமுறையினரின் பங்கு குறிப்பிடத்தக்கது என்பதை அறிவோம். பொதுவாக இளைஞர்கள் தங்களால் இயன்றததையும், தங்களுக்கு உற்சாகமளிக்கக்கூடியதையும் எண்ணியே செயலாற்றுவார்கள். அதற்கு முதலில் பெற்றோரின் ஒத்துழைப்பே முக்கியத்தேவை. ஒரு சமூகத்தைக் கட்டமைக்கவல்ல இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டியது ஒரு பெற்றோரின் முக்கிய கடமை. மனிதரின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டிருக்கும் இந்த பேரிடர் காலத்தில் மனிதப் பண்புகள் சீர்குலைவதன் மூலம் மேலும் பல்வேறு பிரச்சனைகள் உருவாகாமல் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டியது ஒவ்வொருவரின் கடமை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker