ஆரோக்கியம்புதியவைமருத்துவம்

தொடர்ந்து கருத்தடை மாத்திரைகள்… பெண்களின் கவனத்துக்கு

கடந்த மூன்று மாத கால லாக்டௌனில் அதிகம் விற்பனையான பொருள்களில், கருத்தடை சாதனங்களும் கருத்தடை மாத்திரைகளும் முன்னணியில் இருப்பதாகத் தெரிவிக்கின்றன ஆய்வு முடிவுகள். குறிப்பாக, இந்த லாக்டௌனில் பெரும்பாலான பெண்கள், தேவையற்ற கர்ப்பத்தைத் தவிர்க்கக் கருத்தடை மாத்திரைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறார்கள்.

இரண்டு, மூன்று மாதங்கள் எனத் தொடர்ச்சியாக இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி பாதிக்கப்படலாம். ஒருவேளை லாக்டௌனுக்குப் பிறகு அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்தால் கருவுறுதல் தள்ளிப்போகவும் நேரலாம். வேறு சில உடல்நலக் கோளாறுகளும் ஏற்படலாம்.

ஏனெனில் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளப்படும் கருத்தடை மாத்திரைகள் உடலில் சுரக்கும் ஹார்மோன்களை பாதிக்கக்கூடியவை என்கிறார்கள் மருத்துவர்கள். ஒரு பெண் தொடர்ந்து கருத்தடை மாத்திரைகளைச் சாப்பிடும்போது என்னென்ன பக்கவிளைவுகள் எல்லாம் ஏற்படலாம்? இதனால் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு என்ன? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

“தேவையற்ற கர்ப்பத்தைத் தவிர்க்கப் பெண்கள் உபயோகிக்கும் சாதனங்களில் முக்கியமானவை கருத்தடை மாத்திரைகள். மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில் இதை ஒரு மாதத்தில் 21 நாள்கள் எடுத்துக்கொள்வதன் மூலம் கருவுறுதலைத் தள்ளிப்போட முடியும்.

இந்த மாத்திரைகள் பெண்களின் இனப்பெருக்க ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜென் (Estrogen) மற்றும் புரோஜெஸ்டரோன் (Progesteron) சுரப்பைக் கட்டுப்படுத்தி கர்ப்பப்பையில் கரு உருவாவதைத் தடுப்பதுடன், மாதவிடாய் சுழற்சி பாதிக்கப்படாமல் 28 – 30 நாள்களுக்கு ஒருமுறை எனச் சீரமைக்கிறது.

கருத்தடை மாத்திரைகளை ஒரு மாதவிடாய் சுழற்சிக்குப் பிறகு 21 நாள்கள் தொடர்ச்சியாக எடுத்துக்கொண்டால் மட்டுமே கருவுறுதலைத் தவிர்க்க முடியும். அவ்வாறன்றி மறதியின் காரணமாக ஓரிரு நாள்கள் தவறவிடும்பட்சத்தில், அந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்வதன் நோக்கம் நிறைவேறாமல் போகலாம்; தேவையில்லாத கர்ப்பம் நிகழலாம். சிலருக்குக் கர்ப்பப்பை குழாயினுள் கரு உருவாகலாம்.

மருத்துவர்களின் ஆலோசனையின்றி ஒரு பெண் தானாகவே கருத்தடை மாத்திரைகளை இரண்டு, மூன்று மாதக்கணக்கில் எடுத்துக்கொள்ளும்போது அவை சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். மார்பகங்களில் வலி, எடை அதிகரிப்பு, மன அழுத்தம் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும். அதிகபட்சமாக, பக்கவாதம்கூட ஏற்படலாம்.

கருத்தடை மாத்திரைகளைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்போது மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் ரத்த உறைவின் காரணமாகப் பக்கவாதம் ஏற்படலாம். சிலருக்கு உயிருக்கே ஆபத்தாகவும் இது அமையலாம்.

கருத்தடை மாத்திரைகளை மருத்துவப் பரிந்துரையின்றிப் பயன்படுத்துவதுபோல் பெண்கள் செய்யும் மற்றொரு மிகப்பெரிய தவறு, கருக்கலைப்பு மாத்திரைகளைப் பயன்படுத்துவது. கருத்தடை சாதனங்கள், மாத்திரைகளைப் பயன்படுத்தியும் கருவுற்றுவிட்டால், உடனே பெண்கள் கருக்கலைப்பு மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனையின்றி தாங்களாகவே கடைகளில் வாங்கி எடுத்துக்கொள்கிறார்கள். இதனால் கருச்சிதைவு ஏற்படுவோரில் சிலருக்குத் தாங்கமுடியாத வலியும், அதிக ரத்தப்போக்கும் ஏற்படலாம். கருக்கலைப்பு மாத்திரைகள் சிலருக்கு உயிருக்கேகூட ஆபத்தாகலாம்.

எனவே, பெண்கள் கருத்தடை மாத்திரைகள் மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகளை எடுத்துக்கொள்வதற்கு முன்பு நிச்சயம் ஒரு மகப்பேறு மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker